Skip to main content

பிறந்தநாள் விழாவுக்கு பாண்டேவை அழைத்தது ஏன்..? திருமாவளவன் பதில்!

Published on 21/08/2019 | Edited on 21/08/2019


சில நாட்களுக்கு முன் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவனின் பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது. அதில் திருமாவளவனின் கொள்கைக்கு, கோட்பாடுகளுக்கு எதிரான நிலையில் உள்ள பலபேர் அந்நிகழ்ச்சியில் கலந்துகொண்டு அவரை வாழ்த்தினார்கள். குறிப்பாக பத்திரிக்கையாளர் பாண்டே கலந்து கொண்டு இந்து மதத்தின் பெயரால் திருமாவளவனை வாழ்த்தினார். இது தொடர்பாக சர்ச்சைகள் எழுந்துள்ள நிலையில், இதுகுறித்து நாம் திருமாவளவனிடமே கேள்விகளை எழுப்பினோம். அதற்கு அவரின் அதிரடியான பதில்கள் வருமாறு,

 

h



உங்கள் பிறந்தநாள் விழாவுக்கு பத்திரிக்கையாளர் ரங்கராஜ் பாண்டேவை அழைத்திருந்தீர்கள். அவர் உங்களை இந்து மத்தின் பெயரால் வாழ்த்தினார். நீங்கள் எந்த சனாதானத்தை எதிர்த்து வருகிறீர்களோ அதனை ஏற்றுக்கொண்டுள்ள இந்து மதத்தின் பெயரால் வாழ்த்தியதை எப்படி பார்க்கிறீர்கள்?

அந்த பிறந்தநாள் விழாவில், என்னுடைய சிறுவயதில் நான் எப்படி இருந்தேன் என்பதை பகிர்ந்து இருந்தேன். சிறுவயதில் பெரும்பான்மையானவர்களை போன்று விபூதி பூசி, தினமும் கோயிலுக்கு போகும் வழக்கத்தை கொண்டிருந்தேன். அதன் பிறகு எப்போது அம்பேத்கார், பெரியார் கொள்கைகளையும், கோட்பாடுகளையும் அறிந்துகொள்ள, புரிந்துகொள்ள வாய்ப்பு கிடைத்ததோ, அப்போதே அதில் இருந்து விடுபட்டேன். இன்றைக்கும் என்னுடைய தாய், கிராமத்தில் இருக்கும் கோயிலில் எனக்காக வழிபாடு நடத்துகிறார். என் பெயரில் அர்ச்சனை செய்கிறார். அதனை நான் கண்டிப்பதில்லை. முகம் சுளிப்பதும் இல்லை. இது அவர்களுடைய உரிமை, விருப்பம். அதில் மற்றொருவர் தலையிட தேவையில்லை என்பதே என்னுடைய கருத்து. என் தாய்க்கு பொருந்துகிற இது, ரங்கராஜ் பாண்டேவுக்கும் பொருந்தும். எனெனில் தாய்க்கு பொருந்துகின்ற ஒன்று, பாண்டேவுக்கு பொருந்தாது என்று என்னால் எப்படி சொல்லமுடியும். இது அவர்களுடைய நம்பிக்கை. அதில் தலையிட தேவையில்லை.

அந்த விழாவில் நானும் இந்து தான் என்று கூறியிருந்தீர்கள். அதை எவ்வாறு புரிந்துகொள்வது?

நான் இந்து விரோதி போல பல நபர்களால் சித்தரிக்கப்பட்டு வருவதை நான் அறிவேன். அதற்காக அந்த விழாவில் அப்படி கூறினேன். என் கட்சியில் இருப்பவர்கள் எல்லாம் யார்? அனைவரும் கிருஸ்துவ, முஸ்லிம் இனங்களை சேர்ந்த மக்களா? இல்லை. ஒரு தவறான தகவல் நீண்ட காலமாக பரபரப்பப்பட்டு வருகிறது. எங்கள் கட்சியில் 80 சதவீதம் அளவிற்கு இந்து மக்கள்தான் உள்ளார்கள். நான் இந்துவிரோத கருத்துக்களை தெரிவிப்பதாக அவர்கள் நினைத்தால் அவர்கள் எங்கள் கட்சியில் நீடிப்பார்கள். அப்படி இருக்கும் போது இந்த தவறான கருத்துக்களை புறந்தள்ள வேண்டி நான் அவ்வாறு கூறினேன். எதிர்தரப்பில் உள்ளவர்களோடு பழகுவதால் அவர்களின் ஆளாக நாம் மாற வேண்டியதில்லை. அவர்களும் மாற வேண்டும் என்று நாம் கட்டாயப்படுத்தவில்லை.

தமிழகத்தில் உள்ள தாழ்த்தப்பட்ட சமூக இயக்கங்களை எல்லாம் எதிர் தரப்பில் நட்புறவோடு இருப்பதை நாம் தொடர்ந்து பார்த்து வருகிறோம். அதில் விடுதலை சிறுத்தைகளும் இணையுமா?

ஒருபோதும் அதற்கான வாய்ப்பு இல்லை. எந்த காலத்திலும் அது நடக்காது. எதிர்தரப்பில் உள்ளவர்களோடு தனிப்பட்ட நட்பு என்பது வேறு, கொள்கை என்பது வேறு. நாம் நம்முடைய கொள்கை சார்ந்து பயணிக்கிறோம். நமக்கு எதிராக கருத்து தெரிவிக்கிறார்கள் என்று நாம் அவர்களை விரோதியாக பார்க்க வேண்டிய அவசியம் இல்லை. இந்த கொள்கையில் இருந்து நான் எப்போது மாற மாட்டேன். எதிர் தரப்பினரை வெறுக்கவும் மாட்டேன்.