அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் முதுமலையில் நடைபெற்ற விழாவில் கலந்துகொள்ள சென்ற போது அங்கே நின்றுகொண்டிருந்த மலைவாழ் சிறுவர்களை அழைத்து தன்னுடைய செருப்பை கழட்டிவிட சொன்னார். இந்த சம்பவம் தமிழகம் முழுவதும் அதிர்ச்சியையும், பரபரப்பை கிளப்பிவரும் நிலையில் இதுதொடர்பாக மருத்துவர் எழிலனிடம் பல்வேறு கேள்விகளை முன்வைத்தோம். நம்முடைய கேள்விகளுக்கு அவரின் பதில்கள் வருமாறு,
வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் முதுமலையில் நடைபெற்ற யானை முகாமில் கலந்துகொள்வதற்காக நேற்று சென்றபோது பள்ளியில் படிக்கும் மாணவர்களை அழைத்து தன்னுடைய காலணிகளை கழட்ட சொல்லியிருக்கிறார். இதுதொடர்பாக திமுக தலைவர் ஸ்டாலின் உள்ளிட்ட மாற்று கட்சியினர் அவரின் இந்த செயலுக்கு கண்டனம் தெரிவித்துள்ளார்கள். சாதியவாதம் இந்த செயலில் அப்பட்டமாக இருப்பதாக கூறி, சில அமைப்புக்கள் அமைச்சருக்கு எதிராக கண்டனம் தெரிவித்துள்ளனர். இதுதொடர்பாக பேசிய அமைச்சர், நான் சிறுவர்களை என் பேரன் மாதிரி நினைத்துதான் உதவி கேட்டேன் என்று தெரிவித்துள்ளார். இதைபற்றிய உங்களின் பார்வை என்ன?
அமைச்சரின் செயலை நாம் அனைவரும் தொலைக்காட்சிகளில் பார்த்தோம். அந்த விழாவுக்கு அவர் நடந்து வருகிறார். அப்போது எதிரே இருந்த சிறுவர்களை பார்த்து தம்பி, எனக்கு இந்த செருப்பை கழட்ட உதவி செய்யுங்கள் என்று கூறினால், அதை யாரும் தவறாக எடுத்துக்கொள்ள போவதில்லை. இதை அவர் அருகில் இருந்தவர்கள் கூட செய்வார்கள். ஏனென்றால் முடியாதவர்களுக்கு உதவி செய்வது என்பது தமிழர்களின் பண்பாடு. ஆனால் அமைச்சர் அந்த சிறுவர்களை எப்படி அழைத்தார். டேய் இங்கே வாங்கடா என்ற அதிகார தொனியில் சிறுவர்களை அழைத்து தன்னுடைய செருப்பை கழட்ட சொல்கிறார். சிறுவர்களும் அவருடைய செருப்பை கழட்டுகிறார்கள். அதில் அவருடைய அதிகார வர்க்கத்தின் திமிரை நம்மால் எளிதாக காண முடிகின்றது. எனக்கு திண்டுக்கல் சீனிவாசனாக இருந்தாலும், சாதாரண நபராக இருந்தாலும் ஒருவர் அந்தமாதிரி சிறுவனை செருப்பை கழட்ட சொல்கின்ற போது, அவருக்கு அருகில் இருந்த யாரும் அதனை எதிர்த்து ஒரு வார்த்தை கூட பேசவில்லை, எதுவும் கேட்கவில்லை என்பது பெரிய வேதனை தருகின்ற விஷயம். இந்த காட்சிகளை தொலைக்காட்சிகள் எடுக்க வேண்டாம் என்று மறைக்கிறார்கள் என்றால் அதில் ஜாதியை தவிர வேறு என்ன இருக்க முடியும்.
இதற்கு அவர்கள் எந்த சப்பை கட்டு வேண்டுமானாலும் சொல்லலாம். ஆனால், அதற்கு பின்னால் இருப்பது சாதி ஆணவம்தான் என்பது வெளிப்படையாக அனைவருக்கும் புரிகின்ற ஒன்று. அந்த செருப்பை கழட்ட குனிந்த அந்த தம்பியோட மனநிலையை நாம யோசித்து பார்த்தோமா? அந்த தம்பிக்கு சுயமரியாதை பற்றி தெரிகின்ற வயது கூட இல்லை. அதனால் தான் அவர் சொன்னவுடன் அந்த தம்பி உடனடியாக குனிந்து செருப்பை கழட்டுகிறான். அவனுக்கு செருப்பை கழட்ட கூடாது என்கிற அளவுக்கு புரிந்து கொள்கின்ற வயதும் இல்லை. இந்த செய்தி வைரலானதை அடுத்து அவர் தற்போது அந்த சிறுவனை தன்னுடைய பேரனை போல நினைத்ததாக தெரிவித்துள்ளார். பேரனை போல் நினைத்திருந்தால் அந்த சிறுவனை அவ்வாறு அவர் கூப்பிட்டு இருப்பாரா? ஒரு விலங்கை கூப்பிடுவதை போலதானே அந்த சிறுவனை அமைச்சர் கூப்பிட்டார். இரண்டிற்கும் எந்த ஒரு வேறுபாடும் இல்லை. அங்கே நின்று ஒருவர் கூட அதனை தடுக்க முயலாததுதான் வருத்தமான ஒன்று.
இந்த சம்பவத்தில் நான் எந்த தவறும் செய்யவில்லை, இதில் தவறு எதுவும் இருப்பதாகவும் நான் நினைக்கவில்லை என்று அமைச்சர் கூறியுள்ளாரே?
அதுவும் இன்னொரு சாதிய மனப்பான்மை தானே? நான் செய்ததில் என்ன தவறு இருக்கிறது என்பதே சாதியோட உளவியல்தான். தனக்கு மேலாக இருப்பவர்களிடம் குனிந்து போவதும், தனக்கு கீழாக இருப்பவர்களிடம் அதிகார தோரணையை காட்டுவது என்பது தான் அவரின் இந்த பேச்சு வெளிப்படுத்துகிறது. அவர் நான் அப்படி நினைத்து கூப்பிடவில்லை என்று இப்போது வேண்டுமானால் கூறலாம். அந்த நிகழ்வை பார்த்த யாரும் அமைச்சருக்கு சாதி ரீதியான உள்நோக்கம் இருந்ததை நிச்சயம் உணர்ந்திருப்பார்கள். எனவே அவர் அமைச்சராக பதவிவேற்ற அரசியல் அமைப்பு சட்டத்தையே அவர் மீறிவிட்டதாகவே நாம் புரிந்து கொள்ள வேண்டியிருக்கிறது.