Skip to main content

எதிர்ப்பின் எதிரொலி: 5-8ம் வகுப்பு பொதுத்தேர்வை ரத்து செய்தது அரசு

Published on 04/02/2020 | Edited on 04/02/2020
e

 

எதிர்ப்பு வலுத்து வந்ததால் 5 மற்றும் 8ம் வகுப்பு பொதுத்தேர்வை ரத்து செய்தது அரசு.  இது குறித்து பள்ளிகல்வித்துறை அதிகாரப்பூர்வமாக அறிவித்துவிட்டது.

 

5, 8ம் வகுப்புகளூக்கு பொதுத்தேர்வு என்று அரசு அறிவித்த நாள்முதலாக பெற்றோர்களும், கல்வியாளர்களும் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.   5ம் வகுப்புக்கு பொதுத்தேர்வு என்பது குருவிகள் தலையில் பனங்காய் வைப்பதற்கு சமம் என்று கடும் விமர்சனங்கள் எழுந்தன.

 

 இந்நிலையில், வரும் மார்ச் மாதம் தேர்வு தொடங்கவிருக்கிறது என்ற அறிவிப்பு வந்ததும், எதிர்ப்புகள் வலுத்தது.  அதே நேரத்தில் பெற்றோர்களும், மாணவர்களும் கடும் மன உளைச்சலுக்கு ஆளானார்கள்.  மன நல மருத்துவர்களிடம் சென்று கவுன்சிலிங் எடுத்துக்கொள்ளும் அளவுக்கு மன உளைச்சலுக்கு ஆளானார்கள்.   அதனால்தான், நிலைமையின் விபரீதத்தை உணர்ந்த பிரபல மனநல மருத்துவர் ஆர்.கே.ருத்ரன், ‘’ஐந்தாம் வகுப்பு பொதுத்தேர்வு எத்தனை குழந்தைகளை அவர்களின் பெற்றோர்களை பாதிக்கப்போகிறது என்பது கடந்த மூன்று நாட்களில் 7 தாய்மார்கள் தங்கள் குழந்தைகள் 5 வகுப்பில் சரியாக படிக்கவில்லை என்று என்னிடம் அழைத்து வந்ததில் இருந்து தெரிகிறது’’என்று கவலையுடன் சமூக வலைத்தளத்தில் பதிவிட்டார்.  இதன் பின்னர் இந்த விவகாரம் பெரிதானது.  மேலும் எதிர்ப்புகள் வலுத்து வந்தது.

 

இந்த இக்கட்டான சூழ்நிலையில், தமிழ்நாடு அமைச்சரவை கூட்டம் இன்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நடைபெற்று முடிந்த நிலையில், பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் அறிக்கை ஒன்றை வெளியிட்டார்.   அதில், 5ஆவது மற்றும் 8ஆம் வகுப்பு மாணவர்களுக்கு அறிவிக்கப்பட்ட பொதுத்தேர்வு ரத்து செய்யப்படுவதாக குறிப்பிடப்பட்டுள்ளது. பொதுத்தேர்வு நடத்துவதாக, கடந்த செப்டம்பர் மாதம் 13ஆம் தேதி பள்ளிக்கல்வித்துறை சார்பில் அரசாணை வெளியிடப்பட்டதாக கூறப்பட்டுள்ளது.

 

இதுதொடர்பாக பல்வேறு தரப்பிலிருந்தும் வரப்பெற்ற கோரிக்கைகளை, தமிழ்நாடு அரசு கவனமுடன் பரிசீலித்து, 5ஆவது மற்றும் 8ஆம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வு அறிவிப்பு அரசாணையை ரத்து செய்ய முடிவெடுத்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே, ஏற்கனவே உள்ள பழைய நடைமுறையே தொடரும் என்றும், பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் அறிவித்திருக்கிறார்.