Skip to main content

ஹிமா தாஸின் கண்ணீர் - இந்தியாவின் சந்தோஷம்!

Published on 14/07/2018 | Edited on 14/07/2018

துப்பாக்கி வெடித்தவுடன் அந்தப் பெண்கள் ஓடத் தொடங்குகிறார்கள். 400 மீட்டர் தூரம். தன்னை முந்துகிறவர்களை ஒரு துப்பாக்கியின் புல்லட் போல விரட்டிச் செல்கிறார் இந்தியாவின் ஹிமா தாஸ். இதோ எல்லை நெருங்குகிறது. தனது வேகத்தை அதிகரிக்கிறார். சரட்டென்று யாரும் எதிர்பாராத வேகத்தில் எல்லோரையும் முந்துகிறார். எல்லையைத் தாண்டுகிறார். இந்திய தடகள வரலாற்றில் புதிய முத்திரையைப் பதிக்கிறார். சர்வதேச தடகள வரலாற்றிலும் இந்தியாவின் பெயரை பதிக்கிறார்.

 

hima dhas



ஆம், சர்வேதச தடகள சாம்பியன்ஷிப் போட்டிகளில் 20 வயதுக்குக் கீழான ஜூனியர்களுக்கான 400 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் இந்தியாவுக்கு தங்கம் பெற்ற முதல் தங்கப் பெண்மணியானார் ஹிமா தாஸ். பதக்க மேடையில் ஏறி நிற்கிறார். இந்தியாவின் தேசியகீதம் இசைக்கப்படுகிறது. தேசிய கீதத்தை வாயசைத்து பாடும் ஹிமாவின் கண்களில் கண்ணீர் பெருக்கெடுத்து வழிகிறது. நமக்கும் ஆனந்தத்தில் அந்தக் குழந்தையை வாரியணைத்துக் கொஞ்சத் தோன்றுகிறது.

 

 


130 கோடி இந்திய ஜனத்தொகையில் சர்வதேச தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் தங்கம் வாங்கித்தர இதுவரை ஒருத்தரும் இல்லை. ஒருத்தரும் இல்லை என்று சொல்வது தவறு. ஒருத்தரையும் தேடிப்பிடித்து உருவாக்கவில்லை. இதோ, அசாமில் நெல்வயலில் வெறுங்காலில் புட்பால் ஆடிக்கொண்டிருந்த ஹிமா தாஸ் 18 மாதங்களில் ஓட்டப்பந்தயத்துக்கு பயிற்சி அளிக்கப்பட்டு, 18 வயதில் தங்க மெடலை இந்தியாவின் நெஞ்சில் குத்தியிருக்கிறார். ஆம். சற்று வலிக்கும்படியே குத்தியிருக்கிறார்.

  hima



அசாம் மாநிலம் நாகவோன் மாவட்டம் திங் என்ற கிராமத்தைச் சேர்ந்தவர் ஹிமா தாஸ். விவசாயக் குடும்பத்தைச் சேர்ந்த இவருடைய திறமையைக் கண்டுபிடித்தவர் நிப்பான் தாஸ். இவருக்கும் ஹிமா தாஸுக்கும் சம்பந்தமே இல்லை. தடகளப் போட்டிக்கென்று அசாமில் எந்த பயிற்சியும் கொடுக்கப்பட்டதில்லை. அங்கு, பாக்ஸிங்கிற்கும், கால்பந்தாட்டத்திற்கும் மட்டுமே பயிற்சி கொடுக்கப்படும். அடிப்படையில் கால்பந்தாட்டத்தில் விருப்பமுள்ள ஹிமாவை தலைநகர் கவுஹாத்திக்குத் தூக்கிவந்தார் நிப்பான்.

 

 


ஹிமாவுக்காவே ஓட்டப்பந்தயப் பயற்சிப் பிரிவு தொடங்கப்பட்டது. அசாம் மாநில விளையாட்டுப் போட்டிகளில் தொடர் ஓட்டப்போட்டிக்கு தயார் செய்வதே நிப்பான் தாஸின் நோக்கமாக இருந்தது. ஆனால், 18 மாதங்களில் எல்லோருடைய எதிர்பார்ப்பையும் மீறி, சர்வதேச சாம்பியன்ஷிப் போட்டியில் தங்கப் பதக்கத்தை வென்றுகொடுத்திருக்கிறார் ஹிமா என்று பெருமிதத்துடன் சொல்கிறார் நிப்பான்.

  hima tears



பெரிய போட்டிகள் எதிலும் கலந்துகொள்ளாத ஹிமா தாஸ் பங்கேற்ற முதல் பெரிய போட்டியிலேயே தங்கம் வென்று சாதனை படைத்திருக்கிறார். ஓட்டப்பந்தயம் என்பது சிறு குழந்தை முதல் பயிற்சி எடுக்கவேண்டிய போட்டி. ஆனால், வெறும் 18 மாத பயிற்சியில் ஹிமா தாஸ் தங்கம் வென்றிருப்பது மிகப்பெரிய சாதனை. இந்த வெற்றியின் மூலம், 2020 ஆம் ஆண்டு நடைபெறவுள்ள ஒலிம்பிக் போட்டியில் இந்தியாவுக்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறார் ஹிமா தாஸ்.

 

 


ஹிமா தாஸ் பெற்றுள்ள இந்த வெற்றி, விளையாட்டுத் துறையில் இந்தியா ஏன் பின்னடைவைச் சந்திக்கிறது என்பதற்கும், அந்த பின்னடைவை வெற்றிகொள்ள இந்தியா என்ன செய்ய வேண்டும் என்பதற்கும் விடையை வெளிப்படுத்தி இருக்கிறது. ஆம், விளையாட்டு வீரர்களை உரிய பகுதிகளில் தேடிச் சென்று கண்டுபிடிக்க நிப்பான் தாஸ் போன்ற பயிற்சியாளர்கள் தேவை என்ற உண்மையை இனியாவது இந்திய அரசு உணர வேண்டும்.