சென்னை ஐஐடியில் கேரளாவை சேர்ந்த பாத்திமா லத்தீப் என்ற மாணவி கடந்த 9ம் தேதி தற்கொலை செய்து கொண்டு இறந்ததாக கூறப்படும் நிலையில், இதுதொடர்பாக பல்வேறு சந்தேகங்களை அவரின் குடும்பத்தினர் எழுப்பி வருகிறார்கள். இந்நிலையில் இதுதொடர்பாக விசிக-வை சேர்ந்த ஆளூர் ஷானவாஸ் பேசியதாவது, " ஐஐடி என்றால் என்ன, அது ஒரு உயர் கல்வி நிறுவனம். அதை யார் உருவாக்கியது, மவுலானா அபுல் கலாம் ஆசாத் கல்வி அமைச்சராக இருந்த போது நேரு ஆட்சி காலத்தில் உருவாக்கப்பட்டது. ஐஐடி உயர் கல்வி நிறுவனம் என்பதால் உயர்சாதியினர் மட்டுமே அங்கே இருக்க வேண்டும் என்று தற்போது நினைக்க தொடங்கிவிட்டனர். ஆனால் அதை உருவாக்கிய மவுலானா அபுல் கலாம் ஆசாத் அதை எல்லா மக்களுக்குமான கல்வி நிறுவனமாக இருக்கும் என்று நினைத்துதான் உருவாக்கினார். இன்று அவரது எண்ணம் பொய்த்து போய்விட்டது. தற்போது ஐஐடி எல்லா மக்களுக்குமான கல்வி நிறுவனமாக இருக்கவில்லை. ஒரு சாரருக்கு மட்டுமே புகலிடமாக இருந்து வருகிறது. பெரிய அளவில் திறமையிருந்தும், ஆற்றலை நிரூபித்திருந்தும் பத்திமா லத்தீப் போன்ற ஒரு சில ஆட்கள்தான் அங்கே நுழைய முடிகிறது. அதற்கு கூட மிக பெரிய போராட்டம் நடத்த வேண்டி உள்ளது. ஐஐடி என்பது ஒரு குறிப்பிட்ட சாதியினருக்காக நடத்தப்படும் நிறுவனம் போன்று தற்போது மாறியுள்ளது. அங்கே வேலை பார்க்கும் 95 சதவீத பேர் அந்த குறிப்பிட பிரிவை சேர்ந்தவர்கள். மாணவர்களில் 80 சதவீதம் அதே பிரிவினராக இருக்கிறார்கள். மீதமுள்ள 20 சதவீதத்தில் தான் மற்ற சமூகத்தினர் படிக்க வேண்டும். அதில் முஸ்லிம்கள் மட்டும் அல்ல இந்துக்களுக்காக கட்சி நடத்துவதாக கூறுகிறார்களே, அந்த இந்துக்களும் இந்த 20 சதவீதத்தில் தான் வர வேண்டி உள்ளது.
பாத்திமா லத்தீப் ஒரு முஸ்லிம் மாணவி, ஆனால், இதற்கு முன்னாள் பல மாணவர்கள் தற்கொலை செய்து கொண்டார்களே அவர்கள் எல்லாம் இந்துக்கள் தானே? அவர்கள் ஏன் தற்கொலை செய்துகொண்டார். அவர்கள் மரணத்துக்கு என்ன காரணம், யார் காரணம்? அதற்கு பதில் யாரிடமாவது இருக்கிறதா அல்லது அதுகுறித்து முறையாக விசாரணையாவது நடைபெற்றதா என்றால் இல்லை. இன்றைக்கு சென்னை ஐஐடியில் பல ஆண்டுகாலம் பணியாற்றிய வசந்தா கந்தசாமி அவர்களின் பேட்டி நக்கீரன் இணையதளத்தில் வெளிவந்துள்ளது. அதை வாய்ப்பு கிடைத்தால் அனைவரும் பார்க்க வேண்டும். ஐஐடியில் என்ன நடக்கிறது என்பதை ஒரு வாக்கு மூலமாகவே அவர் கொடுத்திருப்பார். எந்த மாதிரியான அநீதிகள் மற்ற பிரிவினருக்கு அங்கு நடக்கிறது என்பது பற்றி மிக விரிவாகவும், ஆழமாகவும் அதில் அவர் பேசியிருக்கிறார். முதலில் அவர் யார் என்ற கேள்வி அனைவருக்கும் எழும். அவர் கணித்தத்துறையில் மிக பெரிய ஆற்றல் உடையவர். சென்னை ஐஐடியில் தொடர்ந்து 28 ஆண்டுகாலம் பணியாற்றியுள்ளார். உலக நாடுகள் எல்லாம் அவரிடம் துறை ரீதியான ஆலோசனைகளை பெற்று சென்று இருக்கிறது. அத்தகைய ஒரு கணித மேதையை அவர் பணியை விட்டு வெளியே வரும் வரை உதவி பேராசிரியராகவே ஐஐடி நிர்வாகம் வைத்திருந்தது.
அவர் என்ன தவறு செய்தார், பிற்படுத்தப்பட்ட சமூகத்தை சேர்ந்தவர் என்பதால் அவர் கல்லூரி நிர்வாகத்தால் பழிவாங்கப்பட்டார். அவர் தனக்கான நீதியை பெற நீதிமன்றம் வரை சென்று போராடினார். அவரையும் இந்த மாதிரியான நிலைக்கு கொண்டு செல்லும் அளவுக்கு மன உளைச்சல் ஐஐடி நிர்வாகத்தினர் கொடுத்தார்கள். ஆனால் அவர் அதற்கு சோர்ந்து போகவில்லை. அதனை தீவிரமாக எதிர்த்து போராடினார். அதனால் தான் அவருக்கு கலைஞர் ஆட்சி காலத்தில் வீர தீர செயல் புரிந்ததற்கான கல்பனா சாவ்லா விருது கொடுத்து அவரை பெருமைபடுத்தினார்கள். எதற்காக அவருக்கு இந்த விருது கொடுக்கப்பட்டது. அவர் என்ன வீர தீர சாதனை புரிந்தார் என்றால், ஐஐடியில் நிகழும் பிற்போக்கு தனத்தை எதிர்த்து கேள்வி கேட்டார் என்பது தான். ஆனால் அத்தகைய புரிதல்களை பாத்திமா போன்ற எளிய மாணவிகளிடம் எதிர்பார்க்க முடியாது. பெண்கள் கல்வி கற்க கல்லூரிக்கு வருவதே தற்போது செயல்வடிவம் பெற்று நடைபெற்று வருகிறது. அதுவும் பாத்திமா மாதிரியான முஸ்லிம் சமூகத்தில் இருந்து வருவது கடினமான காரியம். அவர்களுக்கு இத்தகைய மன ரீதியான தாக்குதலை கல்லூரி நிர்வாகம் வழங்கினால் அவர்களால் அதனை தாங்கிக்கொள்ள முடியாது. இந்த மரணம் என்பது கல்லூரி நிர்வாகத்தால் நடைபெற்றது தான். அவர்கள் தான் இதற்கு பொறுப்பேற்ற வேண்டும்" என்றார்.