Skip to main content

நிலம் கொடுத்துட்டோம்... கிரய பத்திரம் எங்கே? 40 ஆண்டாக இழுத்தடிக்கும் ஆவின்!

Published on 04/12/2019 | Edited on 04/12/2019

சேலம் ஆவின் பால் பண்ணை தொடங்க, நிலம் வழங்கியவர்களுக்கு வீட்டுமனைகள் ஒதுக்கீடு செய்யப்பட்டு நாற்பது ஆண்டுகள் ஆகியும், நிலம் வழங்கியவர்களின் பெயரில் வீட்டு மனைகளை கிரயம் செய்து கொடுக்காமல் இழுத்தடித்து வருகிறது ஆவின் நிறுவனம்.

 

aavin

 

சேலம் தளவாய்ப்பட்டியில் கடந்த நாற்பது ஆண்டுகளாக, ஆவின் கூட்டுறவு பால் பண்ணை செயல்பட்டு வருகிறது. இந்நிறுவனத்தை விரிவாக்கம் செய்வதற்காக அதைச் சுற்றியுள்ள சித்தனூர், தளவாய்ப்பட்டி, பெருமாள் கரடு, ரொட்டிக்காரன்வட்டம் ஆகிய கிராமங்களைச் சேர்ந்த 25 குடும்பத்தினருக்குச் சொந்தமான நிலங்கள்,  கடந்த 1979ம் ஆண்டில் ஆர்ஜிதம் செய்யப்பட்டது. நிலம் ஆர்ஜிதம் செய்தபோது, அந்த நிலத்தில் இருந்த வீடுகள், காலி மனைகளையும் சேர்த்தே பால் பண்ணைக்கு ஆர்ஜிதம் செய்து கொண்டதால், நிலம் கொடுத்தவர்களுக்கு ஒரு மனை முதல் நான்கு மனைகள் வரை ஆவின் நிர்வாகம் இலவசமாக ஒதுக்கீடு செய்தது. அதன்படி, 25 குடும்பத்தினருக்கும் மொத்தம் 38 வீட்டு மனைகள் இலவசமாக வழங்கப்பட்டது.

அந்த மனைகளில் நிலம் வழங்கியவர்கள் வீடு கட்டிக்கொண்டு வசித்து வருகின்றனர். நிலம் கொடுத்தவர்களுக்கு வீட்டு மனைகளை வழங்கிய ஆவின் நிறுவனம், அவற்றின் உரிமையை கடந்த நாற்பது ஆண்டுகளாக நிலம் கொடுத்தோர் பெயர்களுக்கு தனி நபர் கிரயம் செய்து கொடுக்காமல் இழுத்தடித்து வருகிறது. தங்கள் கோரிக்கையை இப்போதாவது ஆவின் நிர்வாகம் நிறைவேற்றித் தருமா? என்ற எதிர்பார்ப்புடன் நிலம் கொடுத்த குடும்பத்தினர் திங்கள்கிழமை (டிச. 2, 2019) சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கோரிக்கை மனு ஒன்றை அளித்துள்ளனர். பாதிக்கப்பட்ட மக்களின் புகாரின் ஊடாக நாம் இப்பிரச்னையை களத்தில் இறங்கி விசாரித்தோம். ஆவின் நிர்வாகம், நிலம் கொடுத்த ஏழை மக்களை திட்டமிட்டே வஞ்சித்துக் கொண்டிருப்பதும், மிகவும் பொறுப்பற்று செயல்பட்டு வருவதும் தெரிய வந்துள்ளது.

ஆவின் நிறுவனத்திற்கு நிலம் கொடுத்தவர்களுக்கு ஒதுக்கப்பட்ட வீட்டு மனைகளை தங்கள் பெயர்களுக்கு கிரயம் செய்து கொடுக்குமாறு 1986ம் ஆண்டு முதன்முதலில் பேச்சு எழுந்தது. இதற்காக, 5.5.1987ல் நடந்த ஆவின் நிர்வாகக்குழு கூட்டத்தில், நிலம் கொடுத்தவர்களுக்கு இலவசமாக வழங்கப்பட்ட வீட்டு மனைகளை அவர்களின் பெயர்களுக்கு கிரயம் செய்ய பால்வளத்துறை ஆணையரிடம் அனுமதி பெறுவது என தீர்மானிக்கப்பட்டது. நிர்வாகக்குழு கூட்ட தீர்மானத்தை அடிப்படையாகக் கொண்டு இதன்மீது நடவடிக்கைகளை மேற்கொண்ட சேலம் பால்வளத்துறை துணைப்பதிவாளர் அலுவலகம், அடுத்தக்கட்ட நடவடிக்கைக்காக 27.2.1998ம் தேதியன்று சென்னையில் உள்ள பால்வளத்துறை சிறப்பு ஆணையருக்கு பிரேரணையை அனுப்பி வைத்தது. அதாவது,  சேலம் ஆவினில் 1987ல் கொண்டு வரப்பட்ட தீர்மானத்தின் மீதான பிரேரணை கடிதத்தை, பத்து ஆண்டுகள் கழித்துதான் சிறப்பு ஆணையரின் பார்வைக்கே கொண்டு  செல்லப்பட்டிருக்கிறது.

 

aavin

 



பிறகு, இதுபற்றி 31.10.2000ம் தேதியன்று சேலம் துணைப்பதிவாளர் அலுவலகம், சிறப்பு ஆணையருக்கு நினைவூட்டல் கடிதமும் எழுதுகிறார். ஆனால், அதற்குப் பிறகு சிறப்பு ஆணையர் அளித்த பதில்தான் ரொம்பவே விசித்திரமானது. அதாவது, துணைப்பதிவாளர் அலுவலகம் அனுப்பிய பிரேரணை கடிதமே தங்களுக்கு நாளது தேதி  வரை கிடைக்கவில்லை என்று ரொம்பவே 'பொறுப்பாக' பதில் அளித்தது. அதன்பிறகு, துணைப்பதிவாளர் அனுப்பிய கடித நகல், சிறப்பு ஆணையருக்கு 16.11.2000ம்  தேதி அனுப்பப்பட்டது. இதன்பிறகு சிறப்பு ஆணையர் அலுவலகம், சேலம் பால்வளத்துறையிடம் அடுக்கடுக்கான வினாக்களை தொடுத்தது. அது, அதிகார மையங்கள் ஒருவருக்கொருவர் பரஸ்பரம் சுமத்திக்கொள்ளும் போலி சண்டைகள். அதாவது, இலவசமாக ஒதுக்கீடு செய்யப்பட்ட வீட்டு மனைகளுக்கு ஏன் ஆவின் நிர்வாகம் கிரயம் செய்து தர வேண்டும்?, 23.6.1987ல் சேலம் ஆவின் நிர்வாக இயக்குநர் எழுதிய கடிதத்தின் மீது செயல்பட 13 ஆண்டுகள் தாமதம் ஏன்?, 1979ல் வீட்டுமனைகளை இலவசமாக  வழங்குவதற்கு முன் ஆணையரிடம் ஏன் அனுமதி பெறவில்லை? இப்படியான கேள்விகளை எழுப்பி இருந்தார் சிறப்பு ஆணையர்.

இதற்கெல்லாம் முறையான பதில்கள் கொடுக்கப்பட்டு உள்ளன. இதற்கிடையே, 1997ம் ஆண்டிலேயே ஒருமுறை வீட்டுமனைகளை கிரயம் செய்வது தொடர்பாக சில நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு உள்ளது. பின்னர் ஏனோ அந்தப் பணிகளை அப்படியே முடக்கி விட்டனர். நிலைமை இப்படி இருக்க, கடைசியாக கடந்த 2003ம் ஆண்டு, பால்வளத்துறை ஆணையர் அலுவலகம், பயனாளிகளின் எண்ணிக்கை தொடர்பான சில அய்யங்களை எழுப்பி துணைப்பதிவாளருக்கு கடிதம் எழுதி இருந்தது. அதற்கும் உரிய பதில்களை ஆதாரத்துடன் அனுப்பப்பட்டு விட்டது. ஆனால், 2003ம் ஆண்டுக்குப் பிறகு ஆவினுக்கு நிலம் கொடுத்த குடும்பத்தினர்கள் தரப்பிலான கோரிக்கை மீது யாதொரு நடவடிக்கையும் எடுக்கப்படாமல் கிணற்றில் போட்ட கல்லாகக் கிடக்கிறது. இப்படியான நிலையில்தான், சேலம் ஆவினுக்கு நிலம் வழங்கியவர்கள் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட வீட்டு மனைகளுக்கு கிரய பத்திரம் கேட்டு, சேலம் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்துள்ளனர்.

இதுகுறித்து நிலம் கொடுத்தவர்கள் சார்பாக தளவாய்ப்பட்டி சிவராமன், நிலம் வழங்கிய மயில்வேல், சண்முகம், அலங்காரம்மாள் ஆகியோர் கூறுகையில், ''ஆவின் பால் பண்ணைக்காக நிலங்களை வழங்கி 40 ஆண்டுகள் ஆகிவிட்டன. நிலம் வழங்கும்போது அதில் மனை அல்லது வீடுகள் இருந்தால், அதற்கு பதிலாக இலவசமாக ஆவின் நிறுவனத்திற்கு ஒதுக்குப்புறமாக இலவசமாக வீட்டு மனைகள் வழங்க வேண்டும் என்ற நிபந்தனையின் பேரில்தான் நிலம் கொடுத்தோம். அந்த ஒப்பந்தப்படி, எங்களுக்கு ஆவின் நிறுவனம் இலவசமாக வீட்டு மனைகளை ஒதுக்கியது. ஒவ்வொருவருக்கும் 3 செண்ட் அளவு வீட்டு மனை வழங்கியது. நிலம் வழங்கிய எங்களின் உறவினர்களில் பலர் இறந்துவிட்டனர்.

இப்போது அவர்களின் வாரிசுகள்தான், அந்த வீட்டு மனைகளில் வீடு கட்டி வசித்து வருகின்றனர். வீட்டு மனைகளை வழங்கிய ஆவின் நிர்வாகம், அதை எங்கள் பெயர்களில் கிரயம் செய்து தராமல், நிலத்தின் உரிமையை அந்நிறுவனமே வைத்திருப்பது என்ன நியாயம்? எங்கள் பெயரில் வீட்டடி மனை நிலம் இல்லாததால், எங்களிடம் வீடு என்கிற சொத்து இருந்தும் இல்லாததுபோலவே உணர்கிறோம்.இந்த சொத்தை, யாருக்கும் விற்க முடியாத நிலையிலும், எங்கள் பிள்ளைகளுக்கு திருமணம் செய்ய முடியாத நிலையிலும் தவித்து வருகிறோம். வாரிசுகளுக்கும் பாகம் பிரித்துக் கொடுக்க முடியவில்லை. எங்கள் வீட்டின் மீது வங்கிகளில் கடன் பெற முடியாததால், ரொம்பவே தடுமாறிக் கொண்டிருக்கிறோம். இந்த தலைமுறையிலாவது எங்கள் சொத்துக்கு, கிரய பத்திரம் கிடைக்க வேண்டும்,'' என்றனர்.

 

vijaybabu

 

இது தொடர்பாக நாம் ஏற்கனவே ஆவின் பொது மேலாளர் விஜய்பாபுவிடம் பலமுறை பேசியிருக்கிறோம். அவரும், நிலம் கொடுத்தோருக்கு வழங்கப்பட்ட வீட்டு மனைகளை கிரயம் செய்வதாக இருந்தால் தலா ஒரு லட்சம் ரூபாய் கிரய செலவாகும். இதை ஆவின் நிர்வாகமே ஏற்றுக்கொள்வது தொடர்பாக மேலிடத்திற்கு கடிதம் எழுதுகிறோம் என்று நம்பிக்கை அளித்தார். 

ஆவின் பொது மேலாளரின் இந்த பதிலால், நாற்பது ஆண்டுக்குப் பிறகு நமக்கு ஒரு ரட்சகர் கிடைத்துவிட்டார் என்று புளகாங்கிதம் அடைந்தனர். இதையடுத்து, நிலம் கொடுத்த மக்களும் அதற்கான சான்றாவணங்களை தயார் செய்துவிட்டு, பொது மேலாளரிடம் கொடுப்பதற்காக காத்திருந்த நிலையில், நாம் மீண்டும் அவரிடம் பேசினோம். அப்போது அவர், 'இது வருவாய்த்துறை சம்பந்தப்பட்ட பிரச்னை. அதனால் இது தொடர்பான கோரிக்கை மனுவை சேலம் கோட்டாட்சியரிடம் கொ டுக்கும்படி' கூறினார். அதன்பிறகுதான் மக்களும் ஆட்சியரிடம் மனு அளித்துள்ளனர். இது தொடர்பாக சில நாள்களுக்கு முன்பு, சேலம் மேற்கு தொகுதி அதிமுக எம்எல்ஏ வெங்கடாசலத்திடம் கேட்டபோது, ''சார்....இதெல்லாம் நாற்பது ஆண்டுகளாக நீடித்து வருகிற பிரச்னை. இடையில் திமுகவும் ஆட்சியில் இருந்திருக்கிறது. அப்போதெல்லாம் செய்து கொடுக்க முடியவில்லை. அதனால் என்னால் என்ன செய்ய முடியுமோ அதை செய்து தருகிறேன்,'' என்று பட்டும்படாமலும் பதில் அளித்தார்.

ஆட்சியரிடம் மனு அளித்த கையோடு, பாதிக்கப்பட்ட மக்கள் நம்மிடம், ''சார்... எப்படியும் பத்து நாளைல எங்களுக்கு கிரய பத்திரம் கிடைச்சிடும்ல...?'' எனக் கேட்டனர் அப்பாவித்தனமாக. அதைக் கேட்டு மனதுக்குள் சிரித்துக்கொண்டோம். ஆவின் நிறுவனத்திற்கு நிலம் வழங்கிய மக்களிடம் பெரிய அளவில் ஓட்டு வங்கியும் இல்லை; அதிகாரிகளை 'அன்பாக கவனிக்கும்' அளவுக்கு பொருளாதார வலிமையும் இல்லை; ஒருவேளை, நீதிமன்றத்தில் சிவில் வழக்காக தொடர்ந்து இருந்தால்கூட இந்நேரம் பாதிக்கப்பட்ட மக்களுக்கு கிரய பத்திரம் கிடைத்திருக்கக் கூடும். நிலத்தை பறிகொடுத்து ஏற்கனவே ஒரு தலைமுறையைக் கடந்து விட்டது. இப்போது சட்ட ரீதியாக செயல்பட, அவர்களின் உடலிலும் தெம்பில்லை; பையிலும் காசில்லை. நிலைமை இவ்வாறிருக்க, இப்பிரச்னையில் ஆவினோ, வருவாய்த்துறையோ எப்படி விரைந்து நடவடிக்கை எடுக்கும் என்பதெல்லாம் மில்லியன் டாலர் கேள்விகள்.


அதிகார வர்க்கம் மட்டுமே இனி கருணையுடன் இரக்கம் காட்ட வேண்டும்.