Skip to main content

கம்பீர காக்கிக்கு களங்கம்! தொடரும் ஆர்டர்லி அவலம்!

Published on 27/03/2018 | Edited on 27/03/2018

காலங்காலமாகவே கீழ்நிலை போலீஸாரின் நிலைமை பரிதாபத்துக்கு உரியதாகத்தான் இருந்துவருகிறது. மேலதிகாரிகளின் வீட்டு வேலைகளைச் செய்யும் அவர்கள் நிலை ரொம்பவும் பரிதாபமாக பேசப்படுவதுண்டு.

"ஆர்டர்லி' என்று அழைக்கப்படும் இத்தகைய காவல்துறையினரின் நிலை சமீப நாட்களாக வெளிப்படையான விவாதத்துக்கு வந்திருக்கிறது. பிரிட்டிஷ்காரர்கள் காலத்தில் வெள்ளை அதிகாரியின் வீடுகளில் வேலை செய்வதற்கு இந்திய போலீஸ்காரர்களை பயன்படுத்தினார்கள். சுதந்திர இந்தியாவிலும் தொடர்ந்த அந்த முறை 1979 ஆம் ஆண்டிலேயே ஒழிக்கப்பட்டுவிட்டது. ஆனாலும், ஆர்டர்லி சிஸ்டம் எந்த அடிப்படையில் இப்போதும் தொடர்கிறது என்பதுதான் புரியாத புதிராக இருக்கிறது.

police2

தமிழக காவல்துறையில் 221 ஐ.பி.எஸ். அதிகாரிகளும், இவர்களுக்கு கீழ் பணிபுரியும் 779 அதிகாரிகளும் இருக்கிறார்கள். இவர்களுடைய வீடுகளில் டிரைவராகவும், வீட்டு வேலைகளைச் செய்பவர்களாகவும் தலா 8, 10, 12 என்ற எண்ணிக்கையில் சுமார் 10 ஆயிரத்து 500 போலீஸார் இருக்கிறார்கள். பணியில் இருக்கும் அதிகாரிகளுக்கு மட்டுமின்றி, ஓய்வு பெற்ற அதிகாரிகளுக்கும், வெளிமாவட்டத்தில் இருக்கும் அதிகாரிகளின் பெற்றோருக்கும்கூட ஆர்டர்லி போலீஸார் நியமிக்கப்படுகிறார்கள்.

இத்தகைய போலீஸார் மட்டுமின்றி, காவல்நிலையங்களில் பணிபுரியும் போலீஸாரும் தங்களுடைய பணிச்சுமைகள், மன உளைச்சல்கள் குறித்து பல்வேறு கோரிக்கைகளை தெரிவித்து வந்தனர். இதையடுத்து, 2012-ல் போலீஸார் குறைகளைத் தீர்க்க நிபுணர் குழுவை அமைக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்த உத்தரவு இதுவரை நிறைவேற்றப்படவில்லை. இதுதொடர்பாக புருஷோத்தமன் என்பவர் வழக்குத் தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரிக்கும் நீதிபதி கிருபாகரன், "போலீஸாருக்கு பணிநேரம் வரையறுக்கப்படாதது ஏன்?' என்று வினா எழுப்பினார். "தமிழகம் முழுவதும் உள்ள ஆர்டர்லி போலீஸார் கணக்கை வியாழக்கிழமை தாக்கல் செய்ய வேண்டும்' என்று உத்தரவிட்டார். ஆனால், வியாழக்கிழமை விசாரணை நடைபெறவில்லை.

நீதிமன்ற உத்தரவைத் தொடர்ந்து டி.ஜி.பி. ராஜேந்திரன் மொத்த ஆர்டர்லி கணக்கையும் கேட்டிருக்கிறார். அதே டி.ஜி.பி. வீட்டிலேயே 6 டிரைவர்கள், வீட்டு வேலைக்கு 4 பேர், இதர வேலைகளுக்கு 2 பேர் என 12 பேர் ஆர்டர்லியாக பணிபுரிகிறார்கள். இவர்கள் தவிர, ஏ.டி.ஜி.பி., ஐ.ஜி., டி.ஐ.ஜி., என இவர்களுக்கு சென்னையில் மட்டும் 180 பேர் பணிபுரிகிறார்கள்.

சென்னை பகுதியில் மட்டும் மணப்பாக்கம் ஐ.பி.எஸ். காலனி, முகப்பேர் அதிகாரிகள் குடியிருப்பு, திருவல்லிக்கேணி ஐ.ஜி. குடியிருப்பு, கீழ்பாக்கம் டி.சி. குடியிருப்பு, ராதாகிருஷ்ணன் ரோடு ஐ.ஜி. குடியிருப்பு, கோயம்பேடு ஆசியன் கேம்ஸ் வில்லேஜ், நெற்குன்றம் ஆகிய இடங்களில் இந்த அதிகாரிகள் தங்கியிருக்கிறார்கள்.

பதவியில் இருக்கிறவர்கள் மட்டுமின்றி, ஓய்வு பெற்ற அதிகாரி ஜார்ஜ் வீட்டில் 4 பேரும், கேரளாவில் உள்ள அவரது உறவினர் வீட்டில் 2 பேரும் பணிபுரிகின்றனர். முன்னாள் டி.ஜி.பி. தேவாரம், தி.மு.க. ஆட்சியிலேயே ஓய்வுபெற்றும் அவர் வீட்டில் இன்றும் 4 பேர் பணிபுரிகிறார்கள். 2017, மார்ச் 6-ல் அதிகாரி சஞ்சீவ்குமார் இறந்தபிறகும், அவருடைய குடும்பத்திற்கு இன்றும் 8 பேர் வேலை செய்கிறார்கள்.

திருச்சி டி.ஐ.ஜி. லலிதாலட்சுமி வீட்டில் 7 பேர், கடலூர் விஜயகுமார் ஐ.பி.எஸ். வீட்டில் 9 பேர், சேலம் சுப்புலட்சுமி வீட்டில் 5 பேர், திருவண்ணாமலை பொன்னி வீட்டில் 15 பேர், மதுரை பிரதீப் குமார் டி.ஐ.ஜி வீட்டில் 9 பேர், திருப்பூர் ஐ.ஜி. வீட்டில் 6 பேர், திருவள்ளூரில் முன்னாள் அதிகாரி சாம்சன் ஐ.பி.எஸ். வீட்டில் 15 பேர், விருதுநகர் ராஜராஜன் எஸ்.பி. வீட்டில் 9 பேர், தஞ்சை செந்தில் எஸ்.பி. வீட்டில் 15 பேர் என அடுக்கிக்கொண்டே போகலாம்.

முன்னாள் டி.ஜி.பி. நட்ராஜ், ""ஆர்டர்லிகள் வீட்டு வேலை செய்பவர்கள் என்று சொல்வது பொருத்தமாகாது. உயரதிகாரிகளின் குடும்பத்தினருக்கு எப்போதும் அச்சுறுத்தல் இருக்கும். அதனால் பாதுகாப்புக்காக அவர்கள் நியமிக்கப்படுகிறார்கள். அதிகாரிகள் வீட்டுக் குழந்தைகளை பள்ளிக்கு அழைத்துச் சென்று திருப்பி அழைத்து வருவதால் அவர்களை டிரைவர் என நினைக்கக்கூடாது. அவர்கள் பாதுகாவலர்கள்'' என்கிறார்.

ஆர்டர்லி போலீஸுக்கு யூனிஃபார்ம் அவசியம் இல்லை. போலீஸ் காரில் அதிகாரி வீட்டு குழந்தைகளை பள்ளிக்கு அழைத்துச் செல்லுதல், மனைவியை அலுவலகம் அல்லது கடைகளுக்கு கூட்டிச் செல்லுதல், காய்கறி வாங்கி வருதல், சமையல் செய்தல், குழந்தைகளுக்கு டீயூசன் எடுத்தல், துணிதுவைத்தல், நாய் குளிப்பாட்டுதல், நாய்களை வெளியே அழைத்துச் செல்லுதல் என பல வேலைகளைச் செய்கிறார்கள்.

ஒருநாள் வேலை செய்தால் மறுநாள் அவர்களுக்கு விடுமுறை. மாதத்தில் 15 நாள் வேலைபார்த்தால் 15 நாள் விடுமுறை. உயர் அதிகாரிகளின் சான்றிதழுக்காகவும், பதவி உயர்வுக்காகவும் இவர்கள் இத்தனை பணிச்சுமைகளையும் சகித்துக் கொள்கிறார்கள். இதில் உள்ள சில சலுகைகளுக்காக விரும்பி வருகிறவர்கள் இருக்கிறார்கள். ஆனால் பலரும் வேலை பிடிக்காவிட்டாலும் கட்டாயத்தின் பேரில் வருகிறார்கள்.

இப்படிப்பட்ட வேலைகளுக்கு போலீஸாரை அனுப்புவதால், காவல்துறையில் பற்றாக்குறை ஏற்படுகிறது. இதனால், பணியில் இருப்போர் விடுமுறை இல்லாமல் பணி செய்ய வேண்டியுள்ளது. மீறி விடுப்பு எடுத்தால் தண்டனை கிடைக்கும். அதன் காரணமாக நன்னடத்தை பாதிக்கப்படும். சிரமங்களை ஏற்று பணிபுரிந்தாலும், தனது குடும்பத்தை கவனிக்க முடியவில்லையே என்ற விரக்தியில்தான் போலீஸார் தற்கொலை செய்கிறார்கள்.

மார்ச் 21 ஆம் தேதி புதன்கிழமை டி.ஜி.பி. அலுவலக வாசலில் கணேசன், ரகு என்ற இரு போலீஸார் உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளிக்க முயன்றதற்கு இத்தகைய விரக்தியே காரணம் என்றார்கள். ஏற்கெனவே, பெண் போலீஸ் சகீர பானு பூச்சி மருந்தை குடித்து தற்கொலை செய்துகொண்டார். ஜெ. நினைவிடத்தில் துப்பாக்கியால் சுட்டு ஒரு போலீஸும், அயனாவரத்தில் காவல்துறை அதிகாரி முன்பாகவே சுட்டுக்கொண்ட எஸ்.ஐ. என இந்தப் பட்டியல் நீள்கிறது. எல்லாவற்றுக்கும் பணிச்சுமையே காரணமாக இருக்கிறது.

30 ஆண்டுகளுக்குமுன் முதலமைச்சர்கள் மாநாட்டில் எடுக்கப்பட்ட முடிவின்படி, தமிழ்நாடு அரசின் உள்துறைச் செயலாளர்கள் வெளியிட்ட அரசாணைப்படி "ஆர்டர்லி' முறை ரத்து செய்யப்பட்டும் இன்னமும் அது நடைமுறையில் உள்ளது. அரசு நிர்வாகத்தால் ஒழிக்க முடியாமல் இருக்கும் ஆர்டர்லி முறையை நீதிமன்றம் முடிவுக்கு கொண்டுவருமா என எதிர்பார்த்திருக்கிறார்கள் காக்கி உடுப்பில் கம்பீரமாக நிற்க விரும்பும் போலீசார்.