Skip to main content

எகிறிய மா.செ. டீம்! நொந்துபோன அமைச்சர்!

Published on 10/11/2020 | Edited on 10/11/2020

 

ddd

 

எலிகளுக்குப் பயந்து முதலையிடம் தலையை கொடுத்த கதையாகி விட்டது அமைச்சர் ஒருவரின் அரசியல் விளையாட்டு.

 

அக்டோபர் 30-ந் தேதி திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் தொகுதிக்கு உட்பட்ட துரிஞ்சிக்குப்பம் கிராமத்தில் இலவச வீட்டுமனைப் பட்டாவை பயனாளிகளுக்கு வழங்க அமைச்சர் சேவூர்.ராமச்சந்திரன் வர ஒப்புக்கொண்டிருந்தார். பொதுமக்கள் 3 மணி நேரமாக காத்திருந்தும் அமைச்சர் வரவில்லை. காரணம் கூறாமல், நிகழ்ச்சி ரத்தானது.

 

காரணத்தை நாம் தேடினோம். லோக்கல் அ.தி.மு.கவினர் நம்மிடம், "ஜெ.வால் ஓரங்கட்டப்பட்ட முன்னாள் அமைச்சர் அக்ரி.கிருஷ்ணமூர்த்தி, தற்போதைய முதல்வர் எடப்பாடியிடம் நெருக்கமாகி, அமைச்சர் செங்கோட்டை யன் -சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன் நட்புடன் ரீ-என்ட்ரி ஆகி, மாநில விவசாய அணி துணைச் செயலாளரானார். ஆரணி தொகுதி எம்.எல்.ஏவும், அமைச்சருமான சேவூர் ராமச்சந்திரனோ திருவண்ணாமலை தெற்கு மா.செ.வாக இருந்த ராஜனுடனும், -கலசப்பாக்கம் தொகுதி எம்.எல்.ஏ. பன்னீர்செல்வத் துடனும் மல்லுக்கட்டிக்கொண்டிருந்தார். சந்தடிச்சாக்கில் மா.செ. பதவிக்கு அக்ரி குறிவைத்தார். அப்போது ராஜனுக்கு பதிலாக அமைச்சரை மா.செ.வாக்கிய எடப்பாடி, "உங்களுக்குத் துணையாக அக்ரி.கிருஷ்ணமூர்த்தி இருப்பார்' என்றும் சேவூர் ராமச்சந்திரனிடம் தெரிவித்தார்.

 

ddd

 

ராஜனின் பதவி காலியான நிலையில், கலசப்பாக்கம் எம்.எல்.ஏ. பன்னீரை சமாளிக்க அக்ரிதான் சரியான ஆள் என அரசு நிகழ்ச்சிகளில் அக்ரிக்கும் நாற்காலி போடவைத்து தன் அருகில் உட்காரவைத்தார் அமைச்சர். எம்.பி. தேர்தலில் திருவண்ணாமலை தொகுதியில் நின்று தோல்வியைச் சந்தித்தார் அக்ரி. "மா.செ.வாக நான் இருந்திருந்தால் கட்சியினரை விரட்டி வேலைவாங்கி வெற்றி பெற்றிருப்பேன்' என எடப்பாடியிடம் சொன்னதுடன், முதல்வருக்கு வேண்டிய சேலம் இளங்கோவன் மூலமாக தெற்கு மா.செ. பதவியையும் பெற்றுவிட்டார். அமைச்சர் சேவூர் ராமச்சந்திரன் அமைப்பு செயலாளராக்கப்பட்டார்.

 

அக்ரி தெற்கு மா.செ.வாக முடிவு செய்யப்பட்டபோது, "எனது கலசப்பாக்கம் தொகுதிக்குள் அக்ரி வரக்கூடாது' என ஓ.பி.எஸ்.-இ.பி.எஸ்.சிடம் முரண்டு பிடித்தார் கலசப்பாக்கம் எம்.எல்.ஏ பன்னீர்செல்வம். இத்தனைக்கும் அக்ரியின் சொந்த கிராமம், நிலங்கள், காலேஜ், பள்ளி, தொழில் நிறுவனங்கள் உள்ளன. இதனால் அதிர்ச்சியானார் அக்ரி. எம்.எல்.ஏ.வுடன் சமாதானம் செய்துகொள்ளவும் முடியாது -முட்டி மோதவும் முடியாது என்பதால், கலசப்பாக்கம் தொகுதி சம்மந்தமேயில்லாத வடக்கு மாவட்டத்துடன் இணைக்கப்பட்டது.

 

திருவண்ணாமலை தெற்கு மாவட்டத்தில் அமைச்சரை வைத்து கோடிகளில் சம்பாதித்த ந.செ. செந்தில் உட்பட பல நிர்வாகிகள், அக்ரி மா.செ.வானதும் அவர் பக்கம் ஜம்பாகிவிட்டார்கள். "கட்சியின் அமைப்பு செயலாளரான நான் என் மாவட்டத்துக்குள் கட்சி நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ள முடியவில்லை. அமைச்சராக இருக்கேன், ஆனால் மாவட்டம் முழுவதும் அரசு நிகழ்ச்சிகளை நடத்த முடியவில்லை' என புலம்புகிறார். இப்போது, முன்னாள் மா.செவும், மாவட்ட கூட்டுறவு சங்க சேர்மனுமான ராஜனுக்கு தூது அனுப்பினார். அவரோ எதிர்க் கேள்வி கேட்க... நொந்துப்போய் உள்ளார் அமைச்சர் என்றார்கள்.

 

இதுபற்றி அமைச்சர் சேவூர் ராமச்சந்திரன் கருத்தறிய தொடர்பு கொண்டபோது, "சார் மீட்டிங்ல இருக்கார் பிஸி' என்றார்கள். இதுபற்றி நம்மிடம் பேசிய அமைச்சரின் ஆதரவாளர்கள், "அமைச்சரைப் பார்க்க வரும்போது பம்மிக்கிட்டு வருவார் அக்ரி. கொங்கு அமைச்சர்கள் உதவியுடன் எம்.பி. சீட் வாங்கினார், செலவெல்லாம் அமைச்சர்தான் செய்தார். தேர்தலில் தோற்றபின் அமைச்சராகவுள்ள தன் நண்பர்கள் மூலமாக வேலூர் - திருவண்ணாமலை மாவட்ட ஒன்றிய பால் கூட்டுறவு சங்கத்தில் இருந்து திருவண்ணாமலை மாவட்டத்தை பிரித்து தனி ஒன்றியமாக்கி அதன் சேர்மன் ஆனார். இப்போது தெற்கு மா.செ. பதவிக்கு வந்தபின், கட்சி நிகழ்ச்சி களுக்கு அமைப்பு செயலாளர் என்கிற முறையில்கூட அமைச்சரை அழைப்பதில்லை. அதிகாரிகளிடம் "தெற்கு மாவட்டத்தில் எந்த நிகழ்ச்சியாக இருந்தாலும் என்னை வைத்து மட்டுமே நடத்த வேண்டும், அமைச்சரை அழைக்கக்கூடாது' என மிரட்டலாக அக்ரி சொன்னது... அதிகாரிகள் மூலமாக அமைச்சருக்கு வந்தது. இதனால் தலைமை சொல்லும் கட்சி நிகழ்ச்சிகளில் மட்டுமே தெற்கு மாவட்டம் சென்று கலந்துகொள்கிறார். அரசு நிகழ்ச்சிகளை வடக்கு மாவட்டத்தில் உள்ள செய்யார், வந்தவாசி, ஆரணியில் வைக்கச் சொல்ல அதிகாரிகளும் அதன்படியே நடத்துகிறார்கள்'' என்றார்கள்.

 

தெற்கு மா.செ. அக்ரி.கிருஷ்ணமூர்த்தியின் கருத்தறிய தொடர்புகொண்டபோது, அவர் செல்போன் ரிங் போனது, எடுக்கவில்லை. அவருடன் இருப்பவர்களோ, "அமைச்சரைப் போய் இங்க வராதன்னு தடுக்க முடியுமா?, அதிகாரிகளிடம் அவரை அழைக்ககூடாதுன்னு சொல்ல முடியுமா? அதெல்லாம் உட்கட்சி எதிரிகள் கிளப்பும் வதந்தி. அக்டோபர் 30-ந் தேதி அமைச்சர் வராமல் போனதுக்கு காரணம், தேவர் ஜெயந்தியை முன்னிட்டு சிலைக்கு மாலை போட அழைக்கப்பட்டதால் அவர் அங்கு சென்றுவிட்டார்'' என்கிறார்கள். "மா.செ.வுக்கு பயந்து அமைச்சர் பம்முகிறார்' என்கிற தகவலே ஆளும் கட்சியான அ.தி.மு.க. தொண்டர்களிடம் பரவிக்கிடக்கிறது.

 

 

சார்ந்த செய்திகள்