Skip to main content

அமெரிக்காவை விட இது குழப்பமா இருக்கே... ஜெர்மன் தேர்தல் முறை!

Published on 05/11/2020 | Edited on 05/11/2020

 

bundestag

 

 

நேற்று காலையிலிருந்து அரசியல் பேசாவதர்கள், தெரியாதவர்கள் கூட ‘பைடனா ட்ரம்பா’ என்று கேள்வி கேட்டு வருகிறார்கள். அந்த அளவிற்கு அமெரிக்க தேர்தல் வாக்கு எண்ணிக்கை சுவாரஸ்யத்தை ஏற்படுத்தியிருக்கிறது என்றுதான் சொல்ல வேண்டும். கரோனா அச்சுறுத்தலால் இந்த முறை அதிகப்படியான தபால் வாக்குகள் மூலம் 10 மில்லியன் பேர் வாக்கு செலுத்தியுள்ளனர். இன்னும் தேர்தல் வாக்கு எண்ணிக்கை போய்க்கொண்டுதான் இருக்கிறது. நாளை வரை வாக்கு எண்ணிக்கை நடைபெற்றுக்கொண்டே வரும் என்றே தோன்றுகிறது. இதற்கெல்லாம் பலரும் வைக்கும் விமர்சனம் அமெரிக்காவின் தேர்தல் வாக்கு முறை. எல்க்டோரல் காலேஜ் என்று சொல்லப்படும் அந்த பழங்காலத்து முறைதான். பலருக்கும் இன்னும் இதுகுறித்து முழுதாக தெரிய வாய்ப்பில்லை, ஆனால் ஒரு மோசமான அல்லது சிக்கலான தேர்தல் முறை என்பது தெரிந்துவிட்டது.

 

அமெரிக்காவில் மட்டும்தானா இதுபோன்ற தேர்தல் முறை என்றால் கண்டிப்பாக இல்லை. ஒவ்வொரு நாட்டு தேர்தல் முறையிலும் எதாவது ஒரு விஷயம் அல்லது முழு முறையே நியாயமற்றதாக தோன்றுகிறது அல்லது விநோதமான ஒன்றாக தோன்றுகிறது. அந்த வரிசையில் விநோதம், சிக்கல், குழப்பம் என்று பலவற்றையும் உள்ளடக்கிய ஒரு தேர்தல் முறை, ஜெர்மனியின் புண்டஸ்டக் தேர்தல். ஜெர்மனியின் கூட்டாட்சி பாராளுமன்றத்தை புண்டஸ்டக் என்று அழைக்கின்றனர். உலகிலேயே மிகவும் குழப்பமான கடினமான தேர்தல் முறைகளில் ஒன்றுதான் இந்த புண்டஸ்டக் தேர்தல் என்று அரசியல் விமர்சகர்கள், அரசியல் ஆர்வமுள்ளவர்கள் பலரும் தெரிவிக்கின்றார்கள். கிட்டத்தட்ட ஜெர்மனி மக்கள் பலருக்குமே இந்த முறை பற்றிய புரிதல் இல்லை என்று கூட சொல்லலாம். இந்த தேர்தலில் போட்டியிடும் சில அரசியல்வாதிகளையும் கூட அந்த லிஸ்ட்டில் சேர்த்துக்கொள்ளலாம். 

 

தேர்தலில் ஒரு கட்சி பெறும் மொத்த வாக்கு எண்ணிக்கையும் அக்கட்சியில் போட்டியிடும் வேட்பாளர்கள் வெற்றி பெறும் தொகுதி எண்ணிக்கையும் விகிதாச்சார அடிப்படையில் ஓரளவு இணையாக இருக்க வேண்டும் என்பதே இந்த தேர்தல் முறையின் நோக்கம். இதுதான் அந்த கடினமான புரிந்துக்கொள்ள மிகவும் சிரமமான தேர்தல் முறை. 

 

புண்டஸ்டக் தேர்தலில் வாக்கு செலுத்த வாக்கு பதிவு மையத்திற்கு சென்றால் உங்கள் கையில் இரண்டு வாக்கு சீட்டுகள் கொடுப்பார்கள். ஒரு வாக்கு சீட்டில் அந்த தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர்க்கு வாக்கு செலுத்த வேண்டும். அதே வேளையில் இரண்டாவதாக மற்றொரு வாக்கு சீட்டு கொடுக்கப்படும், அதில் தேர்தலில் போட்டியிடும் கட்சிகளில் எதாவது ஒரு கட்சிக்கு வாக்கு செலுத்த வேண்டும். இந்த விஷயம்தான் நமக்கு வியப்பை அளிக்கிறது. பொதுவாக ஒரு தேர்தலில் கட்சி என்பது அடையாளமாக இருக்கும் ஆனால், ஜெர்மனியில் அதற்கும் வாக்கு என்பதை தெரிந்துக்கொள்ளும்போது வியப்பையும் அளிக்கிறது. வெற்றிபெறும் வேட்பாளர்களுக்கு கண்டிப்பாக புண்டஸ்டக்கில் சீட் கிடைத்துவிடும். புண்டஸ்டக் பாராளுமன்றத்தில் அடிப்பையாக 598 இருக்கும், அந்த மொத்த சீட்டில் 299 சீட்டுகள் போட்டியிட்டு வெற்றிபெற்ற போட்டியாளர்களுக்கு கிடைத்துவிடும். மீதம் இருக்கும் 299 சீட்டுகள், கட்சி பெற்றிருக்கும் வாக்குகளை வைத்து முடிவு செய்யப்படும். 

 

புண்டஸ்டக் பாராளுமன்றத்தில் கட்சிகளுக்கு சீட் கிடைக்க வேண்டும் என்றால் தேர்தலில் கண்டிப்பாக 5 சதவீத வாக்குகளையாவது பெற்றிருக்க வேண்டும். இல்லையென்றால் மூன்று வேட்பாளர்களாவது வெற்றி பெற்றிருக்க வேண்டும். அப்போதுதான் அந்த கட்சிக்கு புண்டஸ்டக்கில் கதவு திறக்கப்படும்.மேலும், இந்த தேர்தல் முறையில் சிக்கலான இப்படி வர்ணிக்கக்கூடிய தேர்தல் விதிமுறை ஒன்று இருக்கிறது. கட்சி பெற்றிருக்கும் வாக்கு எண்ணிக்கையை விட வேட்பாளர்கள் பெற்றிருக்கும் வாக்கு எண்ணிக்கை அதிகமாக இருந்தால், புண்டஸ்டக் பாராளுமன்றத்தில் அக்கட்சிக்கு மேலும் இடம் ஒதுக்கப்படுகிறது. அப்படி நடப்பதால் புண்டஸ்டக் பாராளுமன்றத்தில் அடிப்படையாக இருக்கும் 598 சீட் என்பது மேலும் கூடும். இந்த விதிமுறை பலருக்கும் புரியாத புதிராக இருக்கிறது. கடந்த 2017ஆம் ஆண்டு நடைபெற்ற ஜெர்மனி புண்டஸ்டக் தேர்தலின் முடிவில், 709 சீட்டுகள் பாராளுமன்றத்தில் இடம்பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. ஐபிஎல் மேட்ச் போல இந்த ஜெர்மன் தேர்தலுக்கு கால்குலேட்டர்லாம் வேண்டும் போலவே.

 

தற்போது புண்டஸ்டக் பாராளுமன்றத்தில் பெரும்பான்மையானவர்களை கொண்டுள்ள கட்சியின் தலைவர் சேன்ஸ்லராகி ஜெர்மனியை ஆள்வார். ஒரு கட்சிக்கு பெரும்பான்மை கிட்டவில்லை என்றால் புண்டஸ்டக்கில் இடம்பிடித்திருக்கும் மற்ற கட்சிகளில் எதாவது ஒன்று அல்லது தேவையான கட்சிகளுடன் கூட்டணி வைத்துக்கொண்டு ஜெர்மனியின் ஆட்சியை பிடிக்கின்றார்கள். இப்படி பல விநோதமான தேர்தல் வழக்கங்களை கொண்டு செயல்படுகிறது ஜெர்மனி தேர்தல்...