ஒரு மிகப்பெரிய மண்டையோட்டின் குறுக்கே சில எலும்புகள் சிதறிக் கிடப்பதைப் போன்ற தோற்றத்தோடு புதிய நெபுலா ஒன்றை விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். அதற்கு ஸ்கல் அண்ட் க்ராஸ்போன் நெபுலா என்று பெயர் வைத்துள்ளனர்.
நெபுலா என்றால் நமது சூரிய மண்டலத்துக்கு அப்பால், பிரபஞ்சத்தின் விளிம்பில் ஹைட்ரஜன், ஹீலியம் உள்ளிட்ட பல்வேறு வாயுக்களும் தூசுகளும் நிறைந்த மேகக்கூட்டம் ஆகும். நெபுலா என்பது லத்தீன் மொழி வார்த்தை. இதற்கு பனிமூட்டம், புகை என்று அர்த்தம். இந்த நெபுலாக்களில் உள்ள வாயுக்களின் ஈர்ப்பில்தான் புதிய நட்சத்திரங்கள் உருவாகின்றன. நட்சத்திரங்களாக உருவாகாத வாயுக்கள் மற்றும் தூசுகள் இணைந்து கோள்களாக உருவாகின்றன.
ஏற்கெனவே, எறும்பு நெபுலா, கழுகு நெபுலா, பூனைக்கண் நெபுலா, எஸ்கிமோ நெபுலா, சுருள் நெபுலா, குதிரைத்தலை நெபுலா என்று நெபுலாக்களின் தோற்றத்துக்கு ஏற்ப பல பெயர்களை வைக்கப்பட்டுள்ளன.
இப்போது கண்டுபிடித்துள்ள நெபுலா மிகச்சமீபத்தில் அதாவது, 10 முதல் 20 லட்சம் ஆண்டுகளுக்கு முன் உருவான புதிய நட்சத்திரக்கூட்டத்தின் தொடக்கமாகும். பூமியிலிருந்து சில பத்தாயிரக்கணக்கான ஒளி ஆண்டுகள் தூரத்தில் இது இருக்கிறது என்கிறார்கள். இரண்டு படங்களை ஐரோப்பியன் விண்வெளி ஆராய்ச்சி மையம் வெளியிட்டுள்ளது. மாண்ட்ரில் குரங்கின் மண்டையோடு போல பயங்கர உருவத்துடன் இது இருப்பதாக விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.