சுங்கச்சாவடி என்றாலே பலரது நினைவுக்கு வருவது, அனைத்து சைஸ்களிலுமான வாகனங்கள் பல நூறு மீட்டர்கள் தூரத்திற்கு வரிசைக்கட்டி நிற்பதால் ஏற்படும் டிராஃபிக் ஜாம் தான். குறிப்பாக பண்டிகை காலங்களில் சென்னையிலிருந்து சொந்த ஊருக்கு கிளம்பும் ஒருவர் சென்னையை தாண்டுவதற்குள்ளேயே நொந்து நூடுல்ஸ் ஆகிவிடுவார்கள். டோல்கேட்டை கடக்கும்போது கட்டணம் செலுத்த ஏற்படும் தாமதமே இதற்கு முக்கிய காரணம் என்று சொல்லப்பட்டு வருகிறது. இந்த டிராஃபிக்கில் மாட்டிக்கொண்டு படும் அவஸ்தைகளை கதைகதையாக விவரிக்கலாம். இதையெல்லாம் மாற்றுவதற்கு டிஜிட்டல் இந்தியா செயல்திட்டங்களில் ஒன்றான ஃபாஸ்டேக் முறை இருக்கும் எனவும், நெடுஞ்சாலை டோல்கேட்டில் கட்டணம் வசூலிப்பதற்கு தேவைப்படும் மனிதவளத்தை குறைத்து கணினிதிறன் பயன்பாட்டை அதிகரிக்கும் என்றும் சொல்லப்பட்டது.
இந்நிலையில் தமிழகத்தில் உள்ள 48 சுங்கச்சாவடிகள் உட்பட நாடு முழுவதும் உள்ள அனைத்து சுங்கச்சாவடிகளிலும் பிப்ரவரி 15 முதல் கார், லாரி, பஸ், வேன் உள்ளிட்ட வாகனங்களுக்கு ஃபாஸ்டேக் கட்டாயமாகிறது. ஃபாஸ்டேக் இல்லாமல் சுங்கச்சாவடிக்கு வரும் வாகனங்கள் இரண்டு மடங்கு கட்டணத்தை அபராதமாகச் செலுத்த நேரிடும் என்று தேசிய நெடுஞ்சாலைத்துறை ஆணையம் தெரிவித்துள்ளது. மேலும், தேவை உள்ளவர்கள் ஃபாஸ்டேக் பெறுவதற்காக சுங்கச்சாவடிகளுக்கு அருகே முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன. அதேபோல் ஃபாஸ்டேக் இணையதளம் மூலமும் விண்ணப்பித்து ஃபாஸ்டேக் பெற்றுக்கொள்ளலாம்.
பணமதிப்பிழப்பை அமல்படுத்திய பிறகு பிரதமர் மோடி கொண்டுவந்த டிஜிட்டல் இந்தியா செயல்திட்டத்தின் அடிப்படையில் தோன்றியதுதான் இந்த ஃபாஸ்டேக் முறை. 2019ஆம் ஆண்டு டிசம்பர் முதல் இந்த ஃபாஸ்டேக் செயல்திட்டத்தை அமல்படுத்தியது மத்திய அரசு. இதனை கட்டாயமாக்க பலமுறை அவகாசம் கொடுக்கப்பட்ட நிலையில், அடுத்த மாதம் முதல் இந்தியா முழுவதுமுள்ள அனைத்து டோல்கேட்டிலும் ஃபாஸ்டேக் கட்டாயமாக்கப்படுகிறது. ஃபாஸ்டேக் அட்டை ஒருவரது வாகனத்தில் ஒட்டப்படவில்லை என்றால் அபராதத் தொகையாக இரண்டு மடங்கு கட்டணத்தை செலுத்தி டோல்கேட்டை கடக்க வேண்டும். மெட்ரோவில் பயணம் செய்ய உதவியாக இருக்கும் மெட்ரோ ஸ்மார்ட் கார்டு போன்று இந்த ஃபாஸ்டேக் அட்டை செயல்பட உள்ளது. இதுவரை 75 சதவிதம் வாகனங்களில் ஃபாஸ்டேக் ஒட்டப்பட்டுவிட்டதாக ஆய்வுகளில் தெரிவிக்கப்பட்டுள்ளன.
நாட்டின் தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள 560 டோல்கேட்களும் இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தின் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவரப்பட்டு, இந்த முறை முழுவதுமாக அமலாகும்போது டோல்கேட்களில் இனி மனித உழைப்புக்கு இடமில்லை என்று மத்திய அரசு அறிவித்தது. டோல்கேட்டை வாகனங்கள் கடக்கும்போதே, ரேடியோ அலைவரிசை தொழில்நுட்பத்தின் அடிப்படையில், ஃபாஸ்டேக் அட்டையின் மூலம் பணம் செலுத்தப்பட்டு, நமது பயணம் விரைவாக, அதேசமயம் எளிதாக அமைய வழிவகை மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் மத்திய அரசு இந்த ஃபாஸ்டேக் குறித்து தெரிவித்தது.
குறைவான மனிதவளத்துடன் கணினிதிறன் போதும் என்று சொன்னாலும் இத்திட்டம் தொழில்நுட்ப குறைபாடுகள் இல்லாமல் இருக்க தற்போதைய சூழலில் வாய்ப்புகள் குறைவே. அதுபோல, இந்த செயல்திட்டத்திலும் சில தொழில்நுட்ப கோளாறுகள் இதுவரை பதிவுசெய்யப்பட்டுக் கொண்டுதான் இருக்கின்றன. இந்த முறை அறிமுகப்படுத்தப்பட்டபோது பல டோல்கேட்களில் ஃபாஸ்டேகை ஸ்கேன் செய்யும் கருவி சரியாக செயல்படவில்லை. அதனால் ஃபாஸ்டேக் வைத்திருந்தும் அதில் தேவையான பணம் வைத்திருந்தும் இந்த குளறுபடிகளால் டோல்கேட்டை கடக்க முடியாமல் மீண்டும் பழையமுறையில் கட்டணம் செலுத்தும் வரிசைக்கு சென்று பணத்தை செலுத்திவிட்டு டோலை கடந்தார்கள். தமிழகத்தில் கடந்த பொங்கல் சமயத்தில் நிறைய பயணிகள் இதனால் அவதிக்குள்ளானார்கள்.
ஒருசிலருக்கு டோலில் ஏற்கனவே கட்டணத்தை ஃபாஸ்டேக் முறையில் செலுத்திவிட்டாலும், அடுத்த டோலில் கட்டணம் செலுத்தப்படவில்லை, பிளாக் லிஸ்ட்டில் உள்ளது என்று கட்டணத்தை வசூல் செய்திருக்கின்றனர் டோல் பணியாளர்கள். இதனால் ஃபாஸ்டேக் பயனர்கள் சிங்கிள் ட்ரிப்க்கு இரண்டுமுறை கட்டணம் செலுத்த வேண்டிய சூழல் உருவானது.
டோலை கடந்தவுடனேயே கட்டணம் செலுத்தியதற்கான மெசேஜ் வருவதில்லை, சிறிது நேரம் கழித்தே அதற்கான மெசேஜ் வருகிறது. இதனால் எவ்வளவு கட்டணம் செலுத்தப்பட்டது என்பது பலருக்கும் குழப்பமாகவே உள்ளது. நாற்பது ரூபாய் கட்டணம் எடுத்துக்கொள்ள வேண்டிய இடத்தில் அறுபது அல்லது இரண்டு மடங்காகவும் கட்டணம் எடுத்துக்கொள்ளப்படும் சம்பவங்களாலும் மக்கள் பெரும் சிரமத்திற்கு ஆளாக வேண்டிய நிலை சில இடங்களில் ஏற்பட்டது. சிலருக்கு நான்கு டோல்களில் கட்டணம் செலுத்தி, அவர்கள் வீட்டிற்கு சென்று காரை நிறுத்திய பிறகு ஐந்தாவது முறையாக கட்டணம் எடுத்துக்கொள்ளப்படுவதாகவும் சில புகார்கள் எழுந்தன. இதுபோன்ற தொழில்நுட்ப கோளாறுகள் குறித்து தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தின் இணையதளம் வாயிலாக புகாரளித்து, அதுதொடர்பான தரவுகளையும் கொடுத்தால் மீண்டும் நமது வங்கி கணக்கிற்கு பணம் மீண்டும் செலுத்தப்படும் என்று அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். அதாவது, உணவு டெலிவரி செயலிகளில் ரி-ஃபண்ட் தருவதுபோல வைத்துக்கொள்ளலாம்.
ஏற்கனவே டோல்கேட்டில் அதிகப்படியான கட்டணங்கள் வசூலிக்கப்படுகின்றன எனவும், டோல்கேட் அமைப்பை நெடுஞ்சாலைகளில் இருந்து அப்புறப்படுத்த வேண்டும் எனவும் பலர் போராடி வருகின்றனர். இதில் இதுபோன்ற தொழில்நுட்ப கோளாறுகளாலும் பணம் பறிபோய், அதற்கும் புகாரளித்துக்கொண்டு சுற்றவேண்டுமா என்கின்றனர் சிலர்.