Skip to main content

தேர்தலில் முக்கியம் சின்னமும்தான்... அதை எப்படி ஒதுக்குறாங்க?

Published on 16/12/2020 | Edited on 16/12/2020

 

kamal rajni

 

இன்னும் ஒருசில மாதங்களில் தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் நடைபெற இருக்கிறது. சுதந்திரத்திற்கு பிறகான தமிழக தேர்தலில் இந்த தேர்தல் பெரும் எதிர்பார்ப்பைக் கிளப்பி வருகிறது. அந்த வகையில், சட்டமன்ற தேர்தலை எதிர்கொண்டுள்ள மாநிலங்களைச் சேர்ந்த சில கட்சிகள் தங்களுக்கு பொது சின்னம் ஒதுக்கக் கோரி விண்ணப்பம் செய்திருந்தன. அதன்படி, தமிழகத்தைச் சேர்ந்த கட்சிகளுக்குச் சின்னங்களை ஒதுக்கி தேர்தல் ஆணையம் உத்தரவிட்டது. இதில் பலருக்கு எப்படி திமுக, அதிமுக, காங்கிரஸ், பாஜக போன்ற கட்சிகளுக்கு ஏற்கனவே சின்னங்கள் இருக்கின்றன. மற்ற புதிதாகப் போட்டியிடும் கட்சிகளுக்குத் தேர்தல் ஆணையம் எவ்வாறு சின்னங்களை ஒதுக்குகிறது என்ற கேள்விகள் இருக்கலாம். 

 

தேர்தல் ஆணையம்  ‘Election Symbols (Reservation and Allocation) Order 1968’ தேர்தல் சின்னங்கள் (ஒதுக்கீடு) 1968 ஆணையின் மூலம் அரசியல் கட்சிகளை அங்கீகரிக்கின்றது. அதிலிருந்து அரசியல் கட்சிகளுக்காகச் சின்னங்கள் ஒதுக்குவதை தேர்தல் ஆணையம், சில விதிமுறைகளுக்கு உட்பட்டு நடைமுறைப்படுத்தி வருகிறது. தேர்தல் ஆணையம், ரிஸர்வ்ட் சின்னம் மற்றும் ஃப்ரீ சின்னம் என இரு வகையாக சின்னங்களைக் குறிப்பிடுகிறது. இவற்றில் 'ரிஸர்வ்ட் சிம்பள்' என்று சொல்லப்படுவது, ஏற்கனவே பதிவு செய்யப்பட்டு தேர்தல் ஆணையத்தின் நிபந்தனைகளுக்கு உட்பட்ட அங்கீகரிக்கப்பட்ட கட்சிகளுக்கு ஒதுக்கப்பட்ட சின்னங்களாகும். 

 

அது என்ன அங்கீகரிக்கப்பட்ட கட்சிகள் என்று கேட்கிறீர்களா? தேர்தல் ஆணையம் கட்சிகளை மூன்றாகப் பிரிக்கிறது. அங்கீகரிக்கப்பட்ட தேசிய கட்சிகள், அங்கீகரிக்கப்பட்ட மாநிலக் கட்சிகள் மற்றும் பதிவுசெய்யப்பட்ட அங்கீகரிக்கப்படாத கட்சிகள். 

 

தேர்தல் ஆணையத்தின் விதிமுறைகளை பூர்த்தி செய்யும்பட்சத்தில் பதிவு செய்யப்படும் கட்சிகளுக்கு அங்கீகாரம் வழங்கப்படும், அதேபோல அவர்கள் கேட்கும் சின்னமும் பொதுப் பட்டியலிலிருந்து ஒதுக்கிவைக்கப்படும்.

 

தேர்தலில் போட்டியிடப் பதிவு செய்யப்பட்ட புது கட்சிகளுக்கும், பல வருடங்களாகப் போட்டியிட்டும் தேர்தல் ஆணையங்களின் விதிமுறைகளை பூர்த்தி செய்யாத கட்சிகளுக்கும் பொது பட்டியலில் இருக்கும் சின்னத்திலிருந்து தேர்தல் ஆணையம் சின்னத்தைத் தருகிறது. பதிவுசெய்யப்பட்ட அங்கீகரிக்கப்படாத கட்சிகளைப் பொறுத்தவரை அவை போட்டியிடும் தொகுதிகள் வரையறுக்கப்பட்ட அளவுக்கு மேல் இருந்தால் பொதுச்சின்னப் பட்டியலிலிருந்து அந்த கட்சி கோரும் ஒரு சின்னம் தேர்தலின் போது வழங்கப்படும். குறைவான தொகுதிகளில் மட்டுமே அக்கட்சி போட்டியிட்டால் ஒவ்வொரு தொகுதியில் இருக்கும் பொது சின்னப் பட்டியலிலிருந்து ஒவ்வொரு சின்னம் வழங்கப்படும்.

 

தேர்தல் ஆணையத்தின் பொது சின்னங்கள் பட்டியலில் ஆட்டோ ரிக்‌ஷா, மட்டை, பேட்டரி டார்ச், வாக்கிங் ஸ்டிக், பலூன், மோதிரம், பெல்ட் உள்ளிட்ட 197 சின்னங்கள் உள்ளன. இதில் கரும்பு விவசாயி நாம் தமிழர் கட்சிக்கும், பிரஷர் குக்கர் சின்னம் அமமுகவுக்கும் ஒதுக்கப்பட்டுள்ளது. புதிதாகப் பதியப்பட்டுள்ள மக்கள் சேவை கட்சி-க்கு ஆட்டோ ரிக்‌ஷா ஒதுக்கப்பட்டுள்ளது. இதுதான் ரஜினிகாந்தின் பதியப்பட்ட கட்சி என்றும் சொல்லப்படுகிறது. கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் டார்ச் லைட் சின்னத்தில் போட்டியிட்ட கமலின் மக்கள் நீதி மய்யம் கட்சி இந்தமுறையும் சட்டமன்ற தேர்தலுக்கு பேட்டரி டார்ச் பொது சின்னமாக வேண்டும் எனக் கோரிக்கையை வைத்தது. ஆனால், அந்த சின்னத்தைத் தேர்தல் ஆணையம்  எம்.ஜி.ஆர் மக்கள் கட்சிக்கு ஒதுக்கியுள்ளது. புதுச்சேரியில் போட்டியிடும் மநீம கட்சிக்கு பேட்டரி டார்ச் சின்னம் ஒதுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில்,  ‘எப்பாடுபட்டாலும் போராடி பேட்டரி டார்ச் லைட் சின்னத்தை மீட்பேன்’ என்று சூளுரைத்துள்ளார் கமல்ஹாசன்.

 

இந்திய அரசியலில் சின்னம் என்பது ஒரு கட்சிக்கு வாக்கு சேகரிப்பதில் மக்களைக் கவர்வதில் முக்கிய பங்காற்றுகிறது. ஒரு பொருளை விளம்பரம் செய்யும் நிறுவனமானது, தனது பிராண்டை மக்கள் மனதில் பதியவைப்பது எப்படி முக்கியமோ, அதுபோன்றதுதான் அரசியல் கட்சிக்கு சின்னமும்.