காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக் கோரி தமிழகம் முழுவதும் போராட்ட களமாக மாறி இருக்கிறது. இந்தப் போராட்டங்களுக்கு எல்லாம் காரணமாக இருப்பது, உச்சநீதி மன்றம் வழங்கிய அந்த ஆறு வார கெடுவிற்குள் மத்திய அரசு காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காததே. இன்று வரை தமிழகம் தான் இதைப் பற்றிப் பேசுகிறதே தவிர, மத்திய அரசுக்கு அந்த எண்ணம் இப்போதைக்கு இல்லை என்பது அடுத்தடுத்து நீதிமன்றத்தில் அது கொடுக்கும் ஓட்டை விளக்கங்களிலேயே தெரிகிறது.
இந்தியாவிற்கு சுதந்திரம் கிடைத்த பின்னர், பல மாநிலங்கள் ஆறுக்கும் நீருக்கும் முழு உரிமை கொண்டாட ஆரம்பித்தன. இதனால் கொண்டுவரப்பட்ட சட்டம் தான் இன்டர் ஸ்டேட் வாட்டர் டிஸ்ப்யூட் ஆக்ட் 1956 (மாநிலங்களுக்கிடையேயான நதி நீர் பங்கீட்டு தாவா சட்டம்). இப்படி நீருக்காக ஏதேனும் சர்ச்சை மாநிலங்களுக்கு இடையில் உருவாகினால் மத்திய அரசு குறுக்கிட்டு அந்தப் பிரச்சனைக்கு தீர்வு கொடுக்க வேண்டும். அதுவும் ஒத்துவரவில்லை என்றால் தீர்ப்பாயம் அமைத்து, விவகாரத்தை சுமுகமாக முடிக்க வேண்டும் என்கிறது இச்சட்டம். பிரச்சனையுடைய மாநிலங்கள் முதலில் அவர்களுக்குள்ளேயே பேசித் தீர்த்துக்கொள்ளவேண்டும். இதில் தீர்வு கிடைக்கவில்லை எனில் மத்திய அரசை அணுகலாம் என்றும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
பல தலைமுறைகளாக தீராது தொடர்கிறது காவிரி பிரச்சனை. இந்தியாவில் தமிழ்நாடு, கர்நாடகா இரண்டு மாநிலங்கள் மட்டும் தான் நதி நீரைப் பகிர்ந்து கொள்கிறதா? வேறு மாநிலங்களுக்கிடையில் பிரச்சனைகள் எதுவும் இல்லையா என்றால் எழுபதாண்டு கால சுதந்திர இந்தியாவில் பல மாநிலங்கள் நீரைப் பகிர்ந்து கொள்வதற்கு சண்டை போட்டுக்கொண்டு தான் இருக்கின்றன. இந்தியாவில் மூன்று நதிகளுக்கு தீர்ப்பாயம், மேலாண்மை வாரியம் அமைக்கப்பட்டிருக்கிறது. அந்த மூன்று நதிகள் கிருஷ்ணா, கோதாவரி மற்றும் நர்மதை.
போலாவரம் அணை திட்டம்
கிருஷ்ணா, கோதாவரி நதிகளுக்கான தீர்ப்பாயம் 1969 ஆண்டில் அமைக்கப்பட்டது. இந்த நதி மஹாராஷ்டிரா, கர்நாடகா மற்றும் ஒருங்கிணைந்த ஆந்திரபிரேதசத்தில் பாய்கிறது. ஆர்.எஸ்.பாச்சாவத் தலைமையில் அமைக்கப்பட்ட இந்த தீர்ப்பாயம் 1973ஆம் ஆண்டில் கிருஷ்ணா நதி உருவாகும் மாநிலமான மஹாராஷ்டிரத்துக்கு 560 டிஎம்சி , கர்நாடகாவுக்கு 700 டிஎம்சியும் அதில் 170 டிஎம்சி மேல் கர்நாடகாவின் நீர் பாசனத்திற்காகவும், ஆந்திராவுக்கு 800 டிஎம்சியும் பகிர்ந்துகொள்ளுமாறு தீர்ப்பாயம் முடிவு செய்தது.
முப்பது வருடங்கள் கழித்து 2004ஆம் ஆண்டில் மீண்டுமொரு தீர்ப்பாயத்தை அமைத்தனர். 2010ஆம் ஆண்டு அதன் தீர்ப்பை அளித்தது. அதில் மஹாராஷ்டிராவுக்கு 666 டிஎம்சி, கர்நாடகாவுக்கு 911 டிஎம்சி மற்றும் ஆந்திராவுக்கு 1001 டிஎம்சி என்று பகிர்ந்தார்கள். ஆந்திராவுக்கு இது மகிழ்ச்சிகரமான தீர்ப்பாக இல்லை. மீண்டும் மேல் முறையீடு செய்தது ஆந்திரா. 2013ஆம் ஆண்டில் மீண்டும் 811 டிஎம்சி நீரும் அதற்கு மேல் 200 டிஎம்சி உபரி நீரை தாராளமாக பயன்படுத்திக்கொள்ளலாம் என்றும் அதில் தெரிவித்தனர். இதனால் தீர்ப்பாயத்தின் தீர்ப்பை எதிர்த்து ஆந்திரா உச்சநீதிமன்றத்தை அணுகியது. அதே கால கட்டத்தில் ஆந்திராவில் இருந்து பிரிந்த தெலுங்கானாவும் இதில் நான்காவது மாநிலமாக இணைந்து நீரை பகிர்ந்துகொள்ள நின்றது. உச்சநீதி மன்றத்தில் இன்றும் இது வழக்கில் உள்ளது.
கிருஷ்ணா நதி
கிருஷ்ணா நதி நீருக்கு தீர்ப்பாயம் அமைக்கப்பட்டதை அடுத்து, அதே ஆண்டில் அக்டோபர் மாதம் கோதாவரி நீர் சர்ச்சைக்கும் ஆர்.எஸ்.பாச்சாவத் தலைமையில் தீர்ப்பாயம் அமைக்கப்பட்டது. கோதாவரி நீரை ஆந்திர பிரேதசம், மத்திய பிரேதசம், சட்டிஸ்கர், ஒடிஷா மற்றும் கர்நாடகா ஆகிய ஐந்து மாநிலங்கள் பகிர்ந்து கொள்கின்றனர். மதராஸ், பம்பாய், ஹைதராபாத் மற்றும் மத்திய பிரேதசம் ஆகியவை மாகாணங்களாக இருக்கும்பொழுதே நதிகளுக்கு என்று ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தம் போடப்பட்டது. மொழிவழி மாநிலங்களாக பிரிக்கப்பட்ட பொழுது புது சட்டங்கள் தேவைப்பட்டது. 1980ஆம் ஆண்டில் இதற்கு தீர்ப்பளித்தார் பச்சாவத். மேலே சொல்லப்பட்டது போல, கோதாவரி நதியின் ஓட்டத்திற்கு ஏற்றாற்போல, அவரவர் தேவைக்கு ஏற்ப பகிர்ந்தனர். கோதாவரி கடைசியாக பாயும் மாநிலமான ஆந்திராவில் 80 டிஎம்சி நீரை கிருஷ்ணா நதியுடன் இணைத்து கர்நாடகாவுக்கும், மஹாராஷ்டிராவுக்கும் தருகிறது. ஆந்திரா- தெலுங்கானா பிரிவினையின் போது போலாவரம் அணை திட்டம் ஒரு மிகப்பெரிய பிரச்சனையாக இருந்தது. ஆந்திராவின் கோதாவரி மாவட்டங்களுக்கு பாசனத்துக்கு பயன்படும் அதே வேளையில் அந்த அணை வந்தால் தெலுங்கானாவின் பல கிராமங்கள் பாதிக்கப்படலாம் என்றும் அச்சம் நிலவியது. ஒடிஷா மாநிலமும் எதிர்ப்பு தெரிவித்த இந்த திட்டம் மத்திய அரசின் நிதி பிரச்சனையில் இருக்கிறது. ஆந்திரா இந்த திட்டத்தை முயன்று வருகிறது.
சர்தார் சரோவர் அணை
இந்த இரண்டு நதிகளுக்கும் தீர்ப்பாயம் அமைத்த அதே 1969ஆம் வருடத்தில் அக்டோபர் மாதம் நர்மதா நதிக்கும் தீர்ப்பாயம் அமைக்கப்பட்டது. 1976ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் நீதியரசர் ராமசாமி தீர்ப்பளித்தார். இதில் குஜராத், மத்திய பிரேதசம், மஹாராஷ்டிரா மற்றும் ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களுக்கு நீர் பகிரப்பட்டது. சர்தார் சரோவர் அணை கட்ட திட்டமிடப்பட்டு அணையின் உயரம் 455 அடியாக இருக்க வேண்டும் என்றனர். ஆனால், சர்தார் சரோவர் அணைக்கு மிகப்பெரிய எதிர்ப்புகள் பல முனைகளில் இருந்து வந்தன. அணை கட்ட ஆயிரக்கணக்கான கிராமங்கள் காலி செய்யப்பட வேண்டியிருந்ததால் அவர்களுக்கு நஷ்ட ஈடு, குடியேற்றம் என்று பல தீராத பிரச்சனைகள் தொடர்ந்தன. கடைசியில் இந்த அணை 56 வருடங்கள் கழித்து கடந்த வருடம் செப்டம்பர் மாதம் திறந்து வைக்கப்பட்டது.
இதே போன்று பல மாநிலங்களில் நதிகளின் சரியான பகிர்வுக்காக இன்றும் சர்ச்சைகளும், விவாதங்களும் நீதி மன்றங்களில் வழக்குகளும் இருக்கின்றன. மேலே சொல்லப்பட்ட நதிகளுக்கு பல வருடங்கள் கழித்து எப்படியோ தீர்ப்பாயமோ மேலாண்மை வாரியமோ நியமிக்கப்பட்டு நீரைப் பெற்றுவிட்டனர். உச்ச நீதி மன்றத்தின் தீர்ப்பையும் நடைமுறைப்படுத்தாமல், அதன் படி நீரும் தராமல், காவிரி மேலாண்மை வாரியமும் அமைக்கப்படாமல் தமிழ்நாடு- கர்நாடக பிரச்சனை நீள்கிறது. 'ஸ்கீம்' என்றால் என்ன என்று நீதிமன்றத்தை கேட்கிறது மத்திய அரசு. மேலாண்மை வாரியமா, ஆணையமா, தீர்ப்பாயமா, மேற்பார்வை குழுவா என்று வார்த்தைகளைக் காட்டி மக்களை குழப்பிக் கொண்டிருக்கின்றன பிரச்சனையை தீர்க்க வேண்டிய அதிகாரங்கள். அரசியல் பசிக்கு தமிழகத்தின் விவசாயம் பலியாகிறது.