தமிழகத்தில் இன்னும் மூன்றே நாட்களில் கரோனா போய்விடும் என்று முதல்வர் பழனிசாமி அறிவித்து நான்கு நாட்களுக்குமேலாகிவிட்டது. ஆனால், கரோனா பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை இன்னும் அதிகரித்துக் கொண்டுதான் இருக்கிறதே தவிர குறையவில்லை. 40,000 பேரிடம் பரிசோதனை செய்யப் போவதாகவும் 10,000 படுக்கைகள் கொண்ட தனிமைப்படுத்தும் வார்டுகளையும் ஏற்பாடு செய்துகொண்டிருக்கிறது சென்னை மாநகராட்சி.
இதுகுறித்து, நம்மிடம் பேசும் சமூக சமத்துவத்திற்கான டாக்டர்கள் சங்கத்தின் செயலாளர் டாக்டர் சாந்தி நம்மிடம், "தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியால் நியமிக்கப்பட்ட மருத்துவ நிபுணர் குழுகூட, நோயாளிகளின் எண்ணிக்கை குறையவில்லை என்பதால் ஊரடங்கு நாட்கள் முடியும்போது இன்னும் இரண்டுவாரங்களுக்கு விரிவுபடுத்தப் படவேண்டும் என்றுதான் அரசுக்கு பரிந்துரைத்தார்கள். அப்படியிருக்க, எந்த அடிப்படையில் இப்படிச் சொன்னார் என்பது தெரியவில்லை. அதேபோல், அதிகப்படியான பரிசோதனைகளை செய்யவேண்டும். அந்த டேட்டாவை வைத்துக்கொண்டுதான் ஒரு முடிவு வரமுடியும் என்றும் அவரால் நியமிக்கப்பட்ட நிபுணர் குழு பரிந்துரைத்திருக்கிறது.
நல்லெண்ண அடிப்படையில் மக்களுக்கு நம்பிக்கையூட்டுவதற்காகச் சொல்லியிருப்பதாக எடுத்துக்கொள்ளலாமே தவிர அறிவியல் பூர்வமாக எடுத்துக் கொள்ள முடியாது. அதேபோல், சமீபத்தில் கரோனா பணக்காரர்களுக்கான வியாதி என்றும் சொல்லிவிட்டார். ஆனால், இதற்கு முந்தைய பிரஸ் மீட்டில் சாதி, மதம், இனம் எல்லாம் இந்த நோய் பார்க்காது என்று சொன்னார். அதுதான், உண்மை.
அதேபோல், ஐந்து லட்சம் ரேபிட் பரிசோதனை கிட்கள் ஆர்டர் செய்திருப்பதாகச் சொன்னார்கள். ஊரடங்கிலிருந்து வெளியில் வரவேண்டும் என்றால் அறிவியல்பூர்வமான புள்ளிவிவரங்களுடன்தான் வரமுடியும். ஊரடங்கு என்பது அவசரத்திற்குத் தற்காலிகமாகப் பாதுகாத்துக்கொள்ள ஏற்படுத்திக் கொண்டது. ஆனால், கடுமையாக உழைக்கிறார்களே தவிர, பொருளாதார இழப்புகளைச் சரிசெய்து அந்த நாட்களை மிகவும் அறிவியல்பூர்வமாக ஆக்கப்பூர்வமாகப் பயனுள்ளதாக மாற்றியிருக்க வேண்டும். தமிழக அரசு பயன் படுத்திக்கொள்ளவில்லை.
உதாரணத்துக்கு, ஸ்டான்லி மருத்துவமனையில் அட்மிட் ஆகியிருந்த நோயாளி இறந்ததும் டெஸ்ட் ரிசல்ட்டை பார்க்காமலேயே உடலைக் கொடுத்துவிட்டார்கள். கீழக்கரை சென்றபிறகு தான் தெரிகிறது டெஸ்ட் ரிப்போர்ட்படி அந்த நோயாளிக்கு கரோனா இருந்திருக்கிறது. இதற்குள், எத்தனைபேருக்கு கரோனா தொற்றியிருக்கும்? சென்னையிலும் விழுப்புரத்திலும் இப்படி நடந்திருக்கிறது.
மற்றநாடுகளில் 10 லட்சம் பேருக்கு 10,000 முதல் 20,000 வரை பரிசோதிக்கிறார்கள். 1 சதவீதம் என்கிற அடிப்படையில் பார்த்தால் கூட 7 கோடி மக்கள் தொகையில் குறைந்தபட்சம் 7 லட்சம் பேரிலிருந்து 17 லட்சம் பேருக்காவது பரிசோதிக்கவேண்டும். ஆனால், முதல் கட்டமாக கேட்டதோ 5 லட்சம் கிட்கள், வந்ததோ 36,000 கிட்கள்தான் என்றால் எப்படி போதுமானதாக இருக்கும்? சமூகப் பரவல் தொடங்கிவிட்டதை அரசு மறைக்கிறது என்றே சந்தேகப்பட வைக்கிறது. ஊரடங்கால் ஏற்படும் பல கோடி ரூபாய் நஷ்டத்தைத் தடுப்பதோடு பரிசோதனைகளை அதிகப்படுத்தி சமூகப்பரவலை தடுக்கவேண்டும். மாநிலத்தின் முதல்வர் என்பதால் அக்கறையோடும் அறிவியல் பூர்வமாகவும் பேசவேண்டும்''’என்கிறார் அவர்.
மருத்துவர்கள் பலரும், முதல்வரின் நம்பிக்கை குரலைப் பாராட்டினாலும் அதன் மறுபக்கத்தை சுட்டிக்காட்டவும் தவறவில்லை. விரைவு பரிசோதனைகள் தொடரும் போதும், ஊரடங்கு தளரும் போதும் புதிய பாதிப்புகள் தெரியவரும். அப்போது தான் உண்மையான பாதிப்பு எண்ணிக்கை வெளியாகும். மே-ஜூன் மாதத்தில் க்ளைமாக்ஸ் தெரியும் என்கிறார்கள்.
சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் புதியதாக எலும்பு, மூட்டு அறுவை சிகிச்சைக்காக கட்டப்பட்ட எட்டு அடுக்கு கட்டடத்தை கரோனோ வார்டாக மாற்றியுள்ளனர். சென்ற மாதம் மூன்று மாடிகளில் மட்டும் இயங்கி வந்த இந்த வார்டு, இப்போது விரிவு படுத்தப்பட்டு ஐந்து மாடிகள் முழுவதும் கரோனோ வார்டாக பயன்படுத்தப்பட்டு வருகிறது. மீதமுள்ள மூன்று மாடிகளையும் கரோனோ வார்டாக மாற்றும் வேலைகள் ஜரூராக நடைபெற்று வருகிறது. ஒரு தளத்திற்கு 20 முதல் 25 பெட்டுகள் உள்ளது. மொத்தம் எட்டு இடங்களில் சுமார் 200 பெட்டுகள் தயார் செய்யப்பட்டுவருகிறது என்று கூறுகிறார்கள் மருத்துவமனை ஊழியர்கள்.
படங்கள் : ஸ்டாலின், அசோக், குமரேஷ்