Skip to main content

இவங்களையெல்லாம் ஏன் கூட்டிட்டு வர்றீங்க... விஜயபாஸ்கர் மீது கோபத்தில் பீலா ராஜேஷ்... எடப்பாடியின் திட்டம்!

Published on 20/04/2020 | Edited on 20/04/2020


கரோனாவை வேகமாகச் சோதனை செய்ய 25 ஆயிரம் ரேபிட் டெஸ்ட் கிட்டுகள் சென்னை விமான நிலையத்தில் வந்து இறங்கியிருக்கின்றன. சீனாவைச் சேர்ந்த வெண்டர் மேட்ரிஸ் என்கிற கம்பெனியிடம் 50 ஆயிரம் கிட்டுகளுக்கு ஆர்டர் கொடுத்து அதில் 24 ஆயிரம் கிட்டுகள் வந்திருக்கிறது. இன்னும் ஒரு சில நாட்களில் 4 லட்சம் கிட்டுகள் வர இருக்கிறது. எடப்பாடி பழனிசாமி தமிழ்நாட்டில் கரோனா கட்டுப்படுத்தப் பட்டுள்ளது எனச் சொல்லும் சூழ்நிலையில் லட்சக்கணக்கான டெஸ்டிங் கிட்டுகள் எதற்கு எனக் கேள்வி எழுப்புகிறார்கள் சுகாதாரத்துறை அதிகாரிகள்.


இந்த ரேபிட் டெஸ்ட் கிட்டுகள் மட்டுமல்ல... பி.பி.இ. எனப்படும் கரோனாவில் இருந்து மருத்துவத்துறை ஊழியர்களைப் பாதுகாக்கும் உடைகள், மாஸ்க்குகள், கைகளைக் கழுவும் சானிடைசர்கள், உயிர் காக்க உதவும் வெண்டிலேட்டர்கள் என ஆயிரம் கோடி ரூபாய் அளவிற்குத் தமிழக அரசு கரோனாவுக்காக பொருட்களை வாங்க ஆர்டர் கொடுத்துள்ளது. அவை மிகவும் தாமதமாக ஒவ்வொன்றாக வந்து சேர்ந்து கொண்டிருக்கிறது.

 

 

admk



ஏன் இந்த நிலை என்று கோட்டையில் உள்ள அதிகாரிகளிடம் விசாரித்தோம். “ஆயிரம் கோடி ரூபாய் ஆர்டரை சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர்தான் கொடுத்துள்ளார். அவருக்கும் எடப்பாடிக்கும் ஒத்துவரவில்லை. எடப்பாடி ஆயிரம் கோடி ரூபாயில் 150 கோடி ரூபாய் கட்சி நிதியாகத் தர வேண்டும் என்றார். விஜயபாஸ்கரோ 40 கோடி ரூபாய்க்கு மேல் தர முடியாது என மறுத்தார். அதனால் விஜயபாஸ்கரை இந்தக் கொள்முதலில் இருந்து எடப்பாடி கழட்டிவிட்டார். நேர்மையான அதிகாரி எனப் பெயர் பெற்ற உமாநாத் ஐ.ஏ.எஸ். அவர்களை இந்த கொள்முதல் கமிட்டிக்கு தலைவராக நியமித்தார். அவரும் தலைமைச் செயலாளர் சண்முகமும் இணைந்து எந்தக் கம்பெனிகளிடம் எந்தப் பொருட்கள் கிடைக்கும் என ஒரு லிஸ்ட்டைத் தயாரித்து முதல்வரிடம் கொடுத்தனர்.
 

http://onelink.to/nknapp


முதல்வர் அந்த லிஸ்டை அவருக்கு நெருக்கமான நண்பர்களிடம் கொடுத்தார். அவர்கள் குறிப்பிட்ட கம்பெனிகளிடம் பேசினார்கள். அந்தப் பேச்சுவார்த்தையில் 40 சதவிகிதம் வரை விலையில் கமிஷனாகக் கேட்கப்பட்டது. அதில் இழுபறி ஏற்படவே பொருட்கள் வருவது தாமதமானது. தமிழக அரசு ஆர்டர் செய்த அதே சீன கம்பெனிகளிடம் அமெரிக்க அரசும் ஆர்டர் செய்திருந்தது. அமெரிக்காவின் விலை பேச்சுவார்த்தை நேர்மையாக இருக்கவே அவர்களுக்குப் பொருட்களை அனுப்பி விட்டு கமிஷன், கட்டிங் போன்றவற்றில் இழுபறியாக இருந்த தமிழகத்திற்கு கடைசியாக சீன கம்பெனிகள் அனுப்பியது. இதுதான் இந்த பொருட்கள் தாமதமாக வந்ததற்கு காரணம் என்கிறார்கள் சுகாதாரத்துறை அதிகாரிகள்.

 

ias



விஜயபாஸ்கர் சுகாதாரத்துறையிலேயே ஒதுக்கப் பட்டவுடன் சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷின் கை சுகாதாரத்துறையில் ஓங்கிவிட்டது. தமிழகம் முழுவதும் சுகாதாரப் பணியாளர்கள் கரோனாவை எதிர்கொள்வதற்கான பாதுகாப்பு உடைகள் இல்லை என்கிற குமுறல் கேட்கிறது.

மருத்துவமனைகளில் பணியாற்றும் சீனியர் டாக்டர்கள் ஒரு வாரம் கரோனா வார்டுகளில் தங்கி சிகிச்சை அளிக்கிறார்கள். அதன் பிறகு அவர்களை நட்சத்திர விடுதிகளில் தமிழக அரசு தங்க வைக்கிறது. அதே நேரத்தில் பயிற்சி மருத்துவர்கள், செவிலியர்கள், சுகாதாரப் பணியாளர்கள் ஆகியோருக்கு தங்கும் வசதிகள் எதையும் தமிழக அரசு செய்து தரவில்லை. நோயாளிகளுக்கு வழங்கப்படும் சத்தான உணவுகள் கூட அவர்களுக்குத் தரப்படுவதில்லை என நெல்லை மாவட்டத்தைச் சார்ந்த மருத்துவர் ஒருவர் இந்தத் துறையின் சீனியர் அதிகாரியான உமாநாத் ஐ.ஏ.எஸ்.ஸிடம் புகார் தெரிவித்திருந்தார்.

அவர் அந்தப் புகாரை பீலா ராஜேஷிடம் எடுத்துச் சொல்லி கோவை மருத்துவக் கல்லூரியில் இரண்டு பயிற்சி மருத்துவர்களுக்கு கரோனா நோய் வந்துவிட்டது. அதுபோல போதிய பாதுகாப்பு உடையில்லாமல் பணியாற்றும் இதர மருத்துவர்களுக்கும் சுகாதாரப் பணியாளர்களுக்கும் வர வாய்ப்பு உள்ளது. இதை நெல்லையைச் சேர்ந்த டாக்டர் ஒருவரே என்னிடம் தெரிவிப்பதாகச் சொன்னார். அந்த நெல்லை டாக்டர் பீலா ராஜேஷ் நடத்திய வீடியோ கான்பரன்ஸிலும் கலந்து கொண்டார். அவரை வீடியோ கான்பரன்ஸில் பார்த்த பீலா ராஜேஷ் டென்ஷன் அடைந்தார். அவர், பீலாவிடம் உமாநாத் ஐ.ஏ.எஸ்.ஸிடம் சொன்ன புகாரை விவரித்தார். உடனே எதுவும் பேசாமல் நீங்கள் வெளியேறுங்கள் என வீடியோ கான்பரன்ஸிலிருந்து அந்த அதிகாரியை வெளியேற்றினார் என விவரிக்கிறார்கள்.

அதேபோல் ஆளும் கட்சி சேனலான நியூஸ் ஜெ.வுக்கு கரோனா அப்டேட் எதையும் தனியாகக் கொடுக்க வேண்டாம் என ஒரு உத்தரவு பிறப்பித்துள்ளாராம். திருவெற்றியூர் பகுதியில் கரோனா நோய் பாதிப்புகளை பார்வையிட வந்த அமைச்சர் விஜயபாஸ்கருடன் பத்திரிகையாளர்கள் இணைந்து சென்றார்கள். பத்திரிகையாளர்கள் முன்பே அமைச்சரிடம் இவங்களையெல்லாம் ஏன் கூட்டிட்டு வர்றீங்க என கோபம் காட்டிய பீலாவின் செல்வாக்கைப் பார்த்து பத்திரிகையாளர்கள் வாயடைத்துப் போனார்கள்.


"கரோனா விசஷயத்தில், தமிழக சுகாதாரத்துறையில் நடைபெறும் குளறுபடிகளைத் தெரிந்து வைத்துள்ள நபர் என்ற அடிப்படையில் பீலா ராஜேஷ் எங்காவது அந்தத் தவறுகளைப் பற்றி நேரடியாகவோ, மறைமுகமாகவோ பேசிவிடுவார் என்கிற மேல்மட்டத்தின் பயம்தான் சுகாதாரத் துறைச் செயலாளரின் செல்வாக்கு உயர்வதற்கு காரணம்'' என்கிறார்கள் சுகாதாரத்துறை அதிகாரிகள்.

இதற்கிடையே பீலாவின் நண்பரான ஊட்டி கலெக்டர் இன்னசென்ட் திவ்யா, தெங்கு மரகடா என்கிற கிராமத்தில் டெங்கு காய்ச்சலால் பலியான மருத்துவருக்கு கரோனா பாதிப்பு இருக்கலாம் என ஆளும்கட்சிக்கு நெருக்கமான நியூஸ் ஜெ செய்தி வெளியிட்டதற்கு எதிராக அவர் நேரடியாக அந்த சேனல் அமைந்திருக்கும் நுங்கம்பாக்கம் காவல்நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன் பிறகு முதல்வர் அலுவலகத்தில் இருந்த அதிகாரிகள் அவசர அவசரமாக தலையிட்டு அந்தப் புகார் சமரசமாக முடித்துக்கொள்ளப்பட்டது என எழுதி வாங்கிய சம்பவமும் நடைபெற்றுள்ளது.
 

http://onelink.to/nknapp


ஒரு பக்கம் கரோனா பணக்கார நோய், அது தமிழகத்தில் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது என முதல்வர் பேசி வருகிறார். மறுபக்கம் கோடிக் கணக்கான ரூபாய் மதிப்புள்ள பொருட்கள் வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்யப்படுகிறது. இன்னொரு பக்கம் அதிகாரிகளின் ஆதிக்கம் என கரோனா நோய்த் தடுப்பு நடவடிக்கைகளில் தமிழகத்தில் பெரிய கூத்தே நடைபெற்றுக் கொண்டிருக்கிறது என்கிறார்கள் சுகாதாரத்துறை அதிகாரிகள்.