Skip to main content

விஜயேந்திரருக்கு ஆதரவாக பேசினாரா கமல்?

Published on 25/01/2018 | Edited on 25/01/2018
விஜயேந்திரருக்கு ஆதரவாக கருத்து சொன்னாரா கமல்? 

பத்திரிகையாளர் சந்திப்பில் நடந்தது என்ன?  





இன்று காலை சென்னை விமானநிலையத்தில் பத்திரிகையாளர்களை சந்தித்தார் நடிகர் கமல்ஹாசன். 

அப்பொழுது ஒரு பத்திரிகையாளர், “காஞ்சி மடாதிபதி  தமிழ்தாய் வாழ்த்து பாடலுக்கு எழுந்து நிற்காதது பற்றி என்ன நினைக்கிறீர்கள்” என்ற கேள்விக்கு கமல்  சற்று குழப்பமான முகபாவத்துடன் “என்னதுங்க?” என்றார். 

கடந்த இரு தினங்களாக  அரசியல் சுற்றுப்பயணம், ரசிகர்கள் சந்திப்பு, பொது நிகழ்ச்சிகள் என பரபரப்பாக இருந்த கமலின் உடல் மொழி இந்த சர்ச்சையை முன்பே அறிந்தது போல் தெரியவில்லை.

கேள்வியை விளக்கிய ஒரு நிருபர் “சங்கர மடத்தின் விஜயேந்திரர் ஒரு விழாவில் தமிழ்தாய் வாழ்த்து ஒலிக்கும் போது எழுந்து நிற்காமல் தேசிய கீதம் பாடும் போது மட்டும் எழுந்தார். நாட்டு பற்றை பறைசாற்றிய விஜயேந்திரர் மொழிபற்றை மதிக்கவில்லை என்ற சர்ச்சை உருவாகி இருக்கிறதே?” என்றார்.

 நிருபர் கேட்ட நீண்ட கேள்வி “மொழிக்கான மரியாதையை விஜயேந்திரர் கொடுக்க தவறிட்டாரா என்ற கருத்து இருக்கிறதே” என்று முடிய, அதற்கு பதிலளித்த கமல் “கண்டிப்பாக. அதற்காகவே  அதை கண்ட இடத்தில் போடக்கூடாது, எல்லாரும் ஒரு மாதிரியாக இருக்க மாட்டார்கள். சரியான இடத்தில் போட வேண்டும். திரையரங்கில் தேசிய கீதம் அவசியமில்லை என நான் கூறியது, இந்த மாதிரியான நிகழ்வுகளை தவிர்க்கத் தான்” என்று பொதுவாக பதிலளித்தார்.  

தொடர்ந்த நிருபர், “அவர்கள் தியானத்தில் இருந்ததாக விளக்கம் கொடுத்து இருக்காங்க?” என்று கேட்டதும், கமல் வழக்கமான கிண்டலுடன், “ஊழலின் போதும் மக்கள் தியானத்தில் இருந்துவிட்டார்கள், அதனால் தான் கண்டுகொள்ளவில்லை... தியானத்தில் இருப்பதாக கூறியதை ஏற்க முடியாது. அது அவரது கடமை, எழுந்து நிற்பதே எனது கடமை” என முடித்தார்.

காணொளி காட்சியில் கமல்  எந்த ஒரு இடத்திலும்  விஜயேந்திரருக்கு ஆதரவாக கருத்துக்கள் சொல்லவில்லை என்றாலும், சில ஊடகங்களில் வெளியான ஒரு வரிச் செய்திகளால் குழப்பம் ஏற்பட்டுள்ளது. 

அதாவது, “ஊழலின் போதும் மக்கள் தியானத்தில் இருந்துவிட்டார்கள்”, “தியானத்தில் இருப்பது அவரது கடமை, எழுந்து நிற்பதே எனது கடமை” என்ற தனித்தனி ஒருவரிச் செய்திகளால் அவர் சொன்ன கருத்து திரிந்து குழப்பம் ஏற்பட்டுள்ளது.  

பிப்ரவரி 21-இல் தனது கட்சியை பதிவு செய்து  தனது அரசியல் பயணத்தை  முறையாக துவங்கவுள்ளார் கமல்.  கட்சிக்கு ஏற்படும் தடங்கல்களையும், தன்னை சூழவிருக்கும்  குழப்பங்களையும் இவர் எப்படி சமாளிப்பார்  என்று சிலர் இவரை லேசாகவும், எப்படியும் சமாளித்து வெல்வார்  என்று ரசிகர்கள் இவரை பாஸாகவும் எண்ணுகின்றனர். 

பிரபு  

சார்ந்த செய்திகள்