பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவராக இருந்த ஆம்ஸ்ட்ராங்(52) கடந்த ஜூலை மாதம் 5ஆம் தேதி (05.07.2024) வெட்டிப் படுகொலை செய்யப்பட்டார். ஒரு தேசியக் கட்சியின் மாநில தலைவர் அவரின் சொந்த பகுதியிலேயே படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தமிழகம் முழுவதும் பேசு பொருளாக மாறியது. தமிழ்நாட்டின் சட்ட ஒழுங்கு குறித்த கேள்வி இந்திய அளவில் விவாதமானது. உள்ளூர் தலைவர்கள் முதல் தேசிய தலைவர்கள் வரை பலரும் சட்ட ஒழுங்கை பற்றி கேள்வி எழுப்ப ஆரம்பித்தனர்.
உடனே சுதாரித்துக்கொண்ட முதல்வர் ஸ்டாலின், சென்னை காவல் ஆணையராக இருந்த சந்தீப் ராய் ரத்தோரை மாற்றியதோடு, அந்த இடத்திற்கு புதிய காவல் ஆணையராக ஏடிஜிபி அருண் ஐ.பி.எஸை நியமித்தார். அறிவிப்பு வெளியான சில மணிநேரத்திலேயே சென்னை கமிஷ்னராக பதவி ஏற்றுக்கொண்ட அருண் ஐ.பி.எஸ் ‘இனி ரவுடிகளுக்கு புரியும் மொழியில் நடவடிக்கை எடுக்கப்படும்’ என்று கூறி திடுக்கிட வைத்தார். சொன்னபடியே நடவடிக்கைகளையும் தொடங்கியிருக்கிறார் அருண். கமிஷ்னராக பொறுப்பேற்ற இரண்டரை மாதங்களில் சென்னையில் மூன்று என்கவுண்டர்கள் அரங்கேறியுள்ளது. மூன்றில் ஒன்று ஆம்ஸ்ராங் கொலை சம்பந்தப்பட்டது.
முதல் என்கவுண்டர்;
ஆம்ஸ்ட்ராங் வழக்கில் 4வது குற்றவாளியாக சேர்க்கப்பட்ட திருவேங்கடத்தை, கொலைக்குப் பயன்படுத்திய ஆயுதத்தைப் பறிமுதல் செய்வதற்காக காவல்துறையினர் மணலியில் உள்ள அவரது வீட்டிற்கு அழைத்துச் சென்றனர். செல்லும் வழியில் திருவேங்கடம் தனக்கு இயற்கை உபாதை கழிக்க வேண்டும் என்று வாகனத்தை நிறுத்த சொன்னதாகவும், வாகனம் நிறுத்தப்பட்டபோது போலீசாரை தாக்கிவிட்டுத் தப்பிக்க முயன்றதாகக் கூறப்படுகிறது. அப்போது தற்காப்புக்காக திருவேங்கடம் என்கவுண்டர் செய்யப்பட்டார் என்று போலீஸ் தரப்பு கூறியது.
இரண்டாவது என்கவுண்டர்;
பிரபல வடசென்னை ரவுடி காக்கா தோப்பு பாலாஜி மீது கொலை வழக்கு உள்பட 50க்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளது. புதன்கிழமை(18.9.2024) அன்று கொடுங்கையூர் அருகே போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தபோது, ஒரு கார் வேகமாக நிற்காமல் சென்றுள்ளது. உடனே காரை போலீசார் விரட்டி பிடித்தனர். அப்போது காருக்குள் இருந்த காக்கா தோப்பு பாலாஜி போலீஸ் வாகனத்தின் மீது சுட்டதாகவும், தற்காப்புக்காக போலீசார் திருப்பி சுட்டத்தில் காக்க தோப்பு பாலாஜி உயிரிழந்துள்ளதாகவும் கூறப்படுகிறது. ஆனால், பாலாஜியை திட்டமிட்டே போலீசார் என்கவுண்டர் செய்துவிட்டதாக அவரது குடும்பத்தினர் குற்றம்சாட்டுகின்றனர்.
மூன்றாவது என்கவுண்டர்;
நீதிமன்றத்தால் தேடப்படும் குற்றவாளியாக அறிவிக்கப்பட்ட தென் சென்னை ரவுடியான சீசிங் ராஜாவை வேளச்சேரியில் உள்ள பார் ஊழியரை துப்பாக்கிக் காட்டி மிரட்டிய வழக்கில் போலீசார் நேற்று ஆந்திராவில் வைத்து கைது செய்தனர். இந்த வழக்கில் துப்பாக்கியை பறிமுதல் செய்ய அழைத்துச் சென்ற போது சீசிங் ராஜா, போலீசாரை நோக்கி சுட்டதாகவும், தற்காப்புக்காக போலீசார் சுட்டதில் சீசிங் ராஜா உயிரிழந்தாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர். சீசிங் ராஜா மீது 10க்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் இருந்ததாக கூறப்படுகிறது.
சென்னை கமிஷ்னராக அருண் பதவியேற்று மூன்று மாதங்கள் கூட முடியாத நிலையில் சென்னையில் மூன்று என்கவுண்டர்கள் நடந்துள்ளது. இது ஒருபக்கம் ரவுடிகளுக்கு அச்சத்தைக் கொடுத்தாலும், மனித உரிமை மீறல் என்கின்றனர் சமூக செயற்பாட்டாளர்கள். நம் நாட்டில் கொலை, கொள்ளை, பாலியல் உள்ளிட்ட கொடூர குற்றங்களில் ஈடுபட்டவர்கள் மீது என்கவுண்டர்கள் நடத்தப்பட்டுள்ளது, நடத்தப்படுகிறது. ஆனால், இதுவரை என்கவுண்டரில் கொல்லப்பட்டவர்கள் யாரும் பணக்காரர்களோ, அதிகாரம் படைத்தவர்களோ அல்ல. இது எதுவுமே இல்லாத எளிய பின்புலத்தை சார்ந்தவர்கள். அதிகாரம் படைத்தவர்கள் செய்யும் கொடூர குற்றங்களில் சம்பந்தப்பட்டவர்கள் ஏன் என்கவுண்டர் செய்யப்படுவதில்லை, கழிவறையில் வழுக்கி விழுவது இல்லை. இங்கு எந்த குற்றம் என்பது கணக்கில்லை யார் குற்றம் செய்கிறார்கள் என்பதுதான் முக்கியம். இந்திய அரசியலமைப்பு முன் அனைவரும் சமம் தானே?
அதற்காக எளிய பின்புலத்தில் இருந்தால் கொடூர குற்றங்கள் செய்யலாம் என்பதில்லை, அவர்கள் செய்த குற்றங்களை நியாயப்படுத்தவும் முடியாது. ஆனால் இங்கு நீதிமன்றத்தின் மூலம் அவர்களுக்கு உரியத் தண்டனை வாங்கி கொடுக்க வேண்டுமே, தவிர போலிசாரே நீதிபதியாக மாறி தீர்ப்பு எழுதுவது எந்த விதத்தில் நியாயம்...?