எப்பொழுதும் திரில்லர் மற்றும் சென்டிமெண்ட் படங்களையே பெரிதாக தேர்வு செய்யும் விஜய் ஆண்டனி இந்த முறை கிட்டத்தட்ட ஒரு சூப்பர் ஹீரோ போன்று மக்களுக்காக சேவை செய்யும் நாயகனாக ஹிட்லர் படம் மூலம் களம் இறங்கி இருக்கிறார். ஜென்டில்மேன், சிட்டிசன் பட பாணியில் தனக்கு ஏற்பட்ட அநீதி மற்ற யாருக்கும் ஏற்பட்டு விடக்கூடாது என்ற பழிவாங்கும் நாயகன் கதாபாத்திரத்தை வேறு ஒரு விதத்தில் உருவாக்கி ஹிட்லர் மூலம் நம்மை சந்திக்க வந்திருக்கும் விஜய் ஆண்டனி ரசிகர்களின் வரவேற்பை பெற்றாரா?
சென்னைக்கு நண்பனுடைய ரூமில் தங்கிக் கொண்டு வேலை தேடும் இளைஞராக வரும் விஜய் ஆண்டனி ரயிலில் சந்திக்கும் ரியா சுமனை துரத்தி துரத்தி காதலிக்கிறார். இவரது காதல் அடுத்த கட்டத்திற்கு செல்கிறது. இதற்கிடையே அமைச்சராக இருக்கும் சரண் ராஜ் வரும் தேர்தலில் எப்படியாவது வெற்றி பெற்று அடுத்த சி.எம். ஆகி விட வேண்டும் என்ற நோக்கில் தொகுதிக்கு ஒவ்வொரு வழியில் வேறு வேறு விதத்தில் பணம் அனுப்புகிறார். ஆனால் அந்த பணமும் தொடர்ந்து ஒரே ஒரு நபரால் ஒவ்வொரு இடத்தில் வேறு வேறு விதமாக கொள்ளையடிக்கப்படுகிறது. இதனை ஆப் தி ரெகார்ட் துப்பறிய போலீஸ் அதிகாரியான கௌதம் மேனன் நியமிக்கப்படுகிறார். அவரும் படாத பாடுபட்டு கொள்ளையர்கள் யார் அவர்கள் எங்கிருந்து வந்தனர் என கண்டுபிடிக்கும் முயற்சியில் இறங்குகிறார். இறுதியில் அந்த பணத்தை கொள்ளை அடித்தது விஜய் ஆண்டனி தான் என நிரூபணம் ஆகிறது. விஜய் ஆண்டனி ஏன் அந்த பணத்தை கொள்ளை அடித்தார்? அதற்கான பின்னணி என்ன? என்பதே ஹிட்லர் படத்தின் மீதி கதை.
90களில் நாம் பார்த்த பல்வேறு திரைப்படங்களின் பாதிப்பை உள்ளடக்கி கிட்டத்தட்ட ஜென்டில்மேன், சிட்டிசன் போன்ற படங்களை அப்படியே பட்டி டிங்கரிங் பார்த்து உல்ட்டா செய்து அதே சாயலில் இப்படத்தை உருவாக்கி ரசிக்க வைக்க முயற்சி செய்திருக்கிறார் வானம் கொட்டட்டும் இயக்குநர் தனா. முந்தைய படமான வானம் கொட்டட்டும் படத்தை சிறப்பாக கொடுத்த அவர் இந்தப் படத்தில் கமர்சியல் பாதைக்கு திரும்ப முயற்சி செய்து சறுக்கலை சந்தித்துள்ளார். ஒரு ஊர் அந்த ஊரில் இருக்கும் நாயகன் அந்த நாயகனை சார்ந்தவர்களுக்கு ஏற்படும் அநீதி அதற்காக அந்த நாயகன் ஒரு கூட்டத்தை சேர்த்துக்கொண்டு போராடும் கதைக்களம். இதில் கொஞ்சம் திருத்தங்கள் செய்து மக்களை ரசிக்க வைக்க முயற்சி செய்திருக்கிறார் இயக்குநர் தனா.
படத்தில் வரும் காதல் காட்சிகள் ஃபிரஷ்ஷாகவும் அழகாகவும் அமைந்திருக்கிறது. என்னதான் பழைய காட்சிகளாக இருந்தாலும் அதற்கு புது முலாம் பூசப்பட்டு அவை ரசிக்கவும் வைக்கிறது. அதேபோல் கொள்ளை அடிக்கும் சம்பவங்கள், விஜய் ஆண்டனியின் பிரசன்ஸ், திரைக்கதையின் வேகம் ஆகியவை சற்றே ஆறுதலாக அமைந்திருந்தாலும் கதை கருவும் கதாபாத்திர தன்மைகளும் நம் ஏற்கனவே பார்த்து பழகிய ஒரு விஷயமாக இருப்பதால் அவை நமக்கு பெரிதாக தோன்றவில்லை. இருந்தும் ஒரு 2 மணி நேரம் படத்தை எந்த ஒரு இடத்திலும் பெரிதாக தொய்வில்லாமல் ஒரு சீரான படமாக கொடுத்து போரடிக்காமல் பார்த்துக் கொண்டிருக்கிறார் இயக்குநர் தனா. லாஜிக் பார்க்காமல் வெறும் என்டர்டைன்மெண்டுக்காக மட்டும் படம் பார்க்கும் ரசிகர்களுக்கு கண்டிப்பாக இப்படம் ஏமாற்றம் அளிக்காது.
விவேக் மெர்வின் இசையில் பாடல்களை காட்டிலும் பின்னணி இசை சிறப்பாக அமைந்திருக்கிறது. பாடல்கள் ஏனோ எங்கேயோ கேட்டது போல் இருந்தாலும் மனதில் ஒட்ட மறுக்கிறது. இருந்தாலும் பின்னணி இசை அதையெல்லாம் சரி செய்து படத்தையும் கரை சேர்க்க உதவி இருக்கிறது. நவீன் குமார் ஒளிப்பதிவில் கொள்ளை சம்பவங்கள் மற்றும் ரயில் சம்பந்தப்பட்ட காட்சிகள் சிறப்பாக காட்சிப்படுத்தப்பட்டு புதுசாக அமைந்திருக்கிறது.
90களில் மட்டும் இந்த படம் வந்திருந்தால் இந்த படம் ஒரு பிளாக்பஸ்டர் வெற்றியை பெற்று இருக்கும். ஏனோ நாம் அதை எல்லாம் கடந்து வந்து விட்டோம். இப்பொழுது வேறு ஒரு தளத்திற்கு தமிழ் சினிமா வந்து விட்டது. இன்னமும் அதே போன்ற ஒரு உணர்ச்சி பொங்கக்கூடிய கதாநாயகன் போராடக்கூடிய படமாக இப்படத்தை கொடுத்திருப்பது இந்த கால 2கே ரசிகர்களுக்கு எந்த அளவு போய் சேரும் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். அதேபோல் கதையும் கதைக்களமும் சற்றே ஆழமான விஷயமாக இருந்தாலும் அதை காட்டிய விதத்தை இன்னும் கூட வேறு விதத்தில் சிறப்பான முறையில் உலக தரமாக கொடுத்திருந்தால் இந்த படம் இன்னும் சிறப்பாக அமைந்து பிளாக்பஸ்டர் ஹிட் ஆக அதிக வாய்ப்பு இருக்கிறது. மற்றபடி லாஜிக் பார்க்காமல் வெறும் மேஜிக் மட்டுமே முக்கியம் என செல்லும் ரசிகர்களுக்கு நிச்சயம் இந்த படம் ஏமாற்றம் அளிக்காமல் ரசிக்க வைக்க செய்யும்!
ஹிட்லர் - இவர் வில்லன் இல்லை!