குடும்ப நல வழக்குகள் பலவற்றை கையாண்டது குறித்த அனுபவங்களை ‘வழக்கு எண்’ என்ற தொடரின் வழியே தொடர்ச்சியாக வழக்கறிஞர் சாந்தகுமாரி பகிர்ந்து வருகிறார். அந்த வகையில் ஒரு வழக்கைப் பற்றி இன்று பார்ப்போம்.
நரசிம்மன் என்பவருடைய வழக்கு இது. இவருக்கு திருமணமாகி, நன்றாக தான் சென்று கொண்டிருந்தது. திடீரென்று, ஆறு மாதம் கழித்து பையன் செயழிலந்தவன் கூறி மனைவி டைவர்ஸ் கேஸ் போட்டிருக்கிறார். இது பற்றி பையன் என்னிடம் கூறி வருத்தப்பட்டான். உடனே, இருவீட்டாரிடம் நான் பேச வேண்டும் என்று பையனுடைய அப்பாவிடம் சொன்னேன். அவரும் சம்மதித்து, ஒரு தேதியை ஃபிக்ஸ் செய்தோம். அன்றைய நாளில், பையன், அவனுடைய அப்பா அம்மா வந்துவிட்டார்கள். ஆனால், பெண் வீட்டார் ஆறு பேர் கொண்டு படைபலத்துடன் வந்து எகிறி எகிறி பேசினார்கள். அதன் பிறகு, எப்படியோ அவர்களை சமாதானம் செய்து அனுப்பி வைத்தோம்.
நரசிம்மன், தன் மனைவியுடன் சேர்ந்து வாழ ஆசைப்பட்டதால், அவனை கூப்பிட்டு ரெஸ்டிடூசன் ஆஃப் காஞ்ஜுகல் ரைட்ஸ் போட்டோம். மனைவி காரணமில்லாமல் பிரிந்து வாழ்ந்திருக்கிறார். அதனால், தன்னுடன் சேர்ந்து வாழ வேண்டும் என்று மனுவை போட்டோம். இந்த மனு போட்ட உடனேயே, நரசிம்மனால் தாம்பத்திய உறவு கொடுக்க முடியாது, அதனால் தன்னால் கணவனோடு சேர்ந்து வாழ முடியாது என்று 10 பக்கத்துக்கு அந்த பெண்ணும் ஒரு மனு போடுகிறாள். முதலிரவில் நரசிம்மனை கட்டிபிடிக்க வரும்போது, கணவன் மயங்கி விழுந்துவிட்டான் என்றெல்லாம் அந்த மனுவில் குறிப்பிடுகிறாள். பெண் அனுப்பிய மனுவை வைத்து, நரசிம்மனை தனியாக அழைத்து விவரத்தைக் கேட்டேன்.
வாழ்க்கையிலே முதன் முறையாக ஒரு பெண் அருகில் வந்ததால் அப்படி பதற்றமடைந்தது உண்மை தான். ஆனால், சிறிது நேரம் இரண்டு பேரும் அமர்ந்து தங்களை பற்றி பேசியதில் தன்னுடைய நிலைமை சரியாகிவிட்டது. அதன் பிறகு, மனைவியின் உதவியுடன் தங்களுக்குள் தாம்பத்திய உறவு நடந்துவிட்டது. திருமண வாழ்க்கையும் நன்றாக தான் சென்றது. தனியார் யுனிவர்சிட்டியில், 15,000 ரூபாய் வருமானத்தில் தான் வேலை செய்கிறேன். ஏனென்றால், அந்த யுனிவர்சிட்டியிலே பிஎச்டி படித்தும், வெளியே ஒரு டிப்ளமோ கோர்ஸும் படிக்கிறேன். பெரிய சம்பளத்திற்கு வேலை பார்த்தால், இதையெல்லாம் படிக்க முடியாது. தன்னுடைய சகோதரன், நல்ல கம்பெனியில் வேலை செய்து 75,000 ரூபாய் அளவிற்கு சம்பளம் வாங்குகிறான். இதனால், தன்னையும், தன் சகோதரனையும் சேர்த்து சம்பளத்தை வைத்து கம்பேர் பண்ணி பேசி மனைவி குறை கூறி கொண்டே இருப்பாள். சகோதரன் அணியும் ஆடை பற்றி, அழகை பற்றி தன்னிடம் புகழ் பாடிக்கொண்டிருப்பாள். இது தனக்கு பிடிக்காமல் போனதால், மனைவியுடன் அதைப் பற்றி பேசவேண்டாம் என்று சொல்வேன். உடனே சண்டை போட்டு அடிக்கடி அவளுடைய அம்மா வீட்டுக்குச் சென்றுவிடுவாள். அப்பா சொன்னதன் பேரில், அவளும் சில நாட்கள் கழித்து தன் வீட்டுக்கு வந்துவிடுவாள். இந்த கம்பேரிசன் அதிகமாகி, தன் மீது உள்ள மரியாதை அவளிடம் இல்லாமல் போய்விட்டது. இப்படி பேசுவதால், அவளை கொஞ்ச கொஞ்சமாக பிடிக்காமப் போய் அவளை விட்டு தள்ளியே இருந்தேன். இதனால், தங்களுக்குள் தாம்பத்திய உறவு நடக்கவில்லை என்று கூறினான்.
இரண்டு பேரும் கேஸ் போட்டதால், சமரசம் செய்வதற்காக இரு வீட்டார்களும் கோர்ட்டுக்கு வந்தார்கள். ஆனால், எதுவும் நடக்கவில்லை. இதற்கிடையில், நரசிம்மன் தன்னுடன் சேர்ந்த வாழ மனைவியிடம் கேட்டால், மாமனார் பெயரில் உள்ள வீட்டை உன் பெயரில் எழுதி வாங்கினால் சேர்ந்து வாழத் தயார் என்கிறாள் மனைவி. நரசிம்மன் இதற்கு மறுப்பு தெரிவித்ததால், அபார்ட்மெண்ட் வாங்கிக் கொடுக்க வேண்டும் என்கிறாள். இரண்டு வருடம் தன்னுடன் தன் வீட்டில் இருந்தால், அபார்ட்மெண்ட் வாங்கி தனிக்குடித்தனம் செல்லலாம் என்று நரசிம்மன் சொல்கிறான். இதனால், நரசிம்மனுக்கு பைத்தியம் பிடித்துவிட்டது, சைகாட்ரிஸ்ட் டாக்டரிடம் அனுப்ப வேண்டும் என்கிறாள். இதனால், மன உளைச்சலுக்கு ஆளான, நரசிம்மன் மனைவியை விட்டு பிரிவதாக ஒப்புக்கொண்டு சொன்னான்.
மெயிண்டெனன்ஸ், திருமண செலவுகள் என 15 லட்ச ரூபாய் கொடுக்க வேண்டும் என்று பெண் வீட்டார் முடிவு சொன்னார்கள். ஆனால், திருமண செலவுகளை எல்லாம், பையனுடைய அப்பா தான் செய்திருக்கிறார். மேலும், பெண்ணுக்கு, பையன் வீட்டிலிருந்து 10 பவுன் நகை போட்டிருக்கிறார்கள். பையனுக்கு, பெண் வீட்டார் 1 மோதிரம், 1 பிரேஸ்லெட் போட்டிருக்கிறார்கள். கடைசி வரை 15 லட்ச ரூபாய் கொடுக்க வேண்டும் என்று முடிவோடு இருந்தார்கள். நாங்கள் முடியவே முடியாது என்று சொன்னதால், சமரச மையத்தில் செட்டில் ஆகவில்லை. நரசிம்மன் ஆண்மையற்றவன், பைத்தியம் என்று மனைவி சொன்னதால் நரசிம்மனை ஹாஸ்பிட்டலுக்கு டெஸ்டுக்கு அனுப்பலாம் என்று கோர்ட்டில் நானே பெட்டிசன் போட்டேன். பெண் இதற்கு மறுப்பு தெரிவித்து கோர்ட்டுக்கு வரவே இல்லை. இதன் மூலம், பையன் மீது அவள் வைத்த குற்றச்சாட்டு அனைத்தும் பொய் என நிரூபனமாகிவிட்டது. இதனால், ஒருதலைபட்சமாக பையனுக்கு சாதகமாக தீர்ப்பளித்தனர். மருமகள் திரும்பி வராவிட்டால், தாங்கள் கொடுத்த 10 பவுன் நகையும் அவளே வைத்துக்கொள்ளட்டும். ஒரு வேளை கோர்ட்டுக்கு திரும்பி வந்தால், அந்த 10 பவுன் நகையை கேட்போம் என்று பையனுடைய அப்பாவும் சொல்லிவிட்டார். ஆனால், கடைசி வரை அந்த பெண் கோர்ட்டுக்கு வரவே இல்லை. இதனால், பையனுக்கு சாதகமாக தீர்ப்பளித்து விவாகரத்து கிடைத்தது.