Skip to main content

உறவுகளின் சென்டிமெண்ட் ஒர்க்கவுட் ஆனதா? - 'மெய்யழகன்' விமர்சனம்!

Published on 28/09/2024 | Edited on 28/09/2024
karthi arvind swamy meiyazhagan movie review

விஜய் சேதுபதி, த்ரிஷா நடித்த ‘96’ திரைப்படம் சிறுவயது காதல் உணர்வுகளை மென்மையான முறையில் வெளிப்படுத்தி பார்ப்பவர்களை பரவசப்படுத்தியது. அந்தப் படம் கொடுத்த ஊக்கத்தில் தற்போது அதே போன்ற ஒரே இரவில் நடக்கும் கதையாக இந்த மெய்யழகன் படம் உருவாகி இருக்கிறது. இந்தப் படத்தில் குடும்ப உறவுகளை மையப்படுத்தி அதனுள் இருக்கும் அன்பு பாசத்தை வெளிப்படுத்தும் படமாக உருவாக்கி இருக்கும் இயக்குநர் பிரேம் குமார் சென்ற படத்தில் நமக்கு கொடுத்த பரவசத்தை இப்படத்திலும் கொடுத்திருக்கிறாரா, இல்லையா?

தஞ்சாவூரில் இருக்கும் நீடாமங்கலம் என்ற கிராமத்தில் பூர்வீக வீட்டில் குடியிருக்கும் சிறு வயது அர்விந்த் சுவாமி ஒரு சொத்து தகராறு காரணமாக அவர்கள் வீடு வேறு ஒருவருக்கு கை மாறி விட பின்பு மொத்த குடும்பமும் தஞ்சாவூரை காலி செய்துவிட்டு சென்னைக்கு குடியேறுகின்றனர். 22 வருடங்கள் கழித்து அர்விந்த் சுவாமியின் உறவினர் முறை தங்கைக்கு திருமணம். அதற்காக மீண்டும் தஞ்சாவூருக்கு வருகிறார் அர்விந்த் சுவாமி. வந்த இடத்தில் சம்பிரதாயமாக திருமணத்தில் தலை காட்டி விட்டு இரவோடு இரவாக சென்னைக்கு கிளம்பி விட வேண்டும் என்ற எண்ணத்தோடு இருக்கும் அர்விந்த் சுவாமியை அவரது உறவுக்காரரான பெயர் தெரியாத கார்த்தி விழுந்து விழுந்து கவனிக்கிறார். அர்விந்த் சுவாமியுடன் நிழல் போல் கூடவே இருந்து கொண்டு அவரை அத்தான்... அத்தான்... என அன்பு தொல்லை கொடுக்கிறார். ஆனால் கார்த்தியை யார் என்று அரவிந்த்சாமிக்கு ஞாபகம் வரவில்லை. அவரும் எவ்வளவோ முயற்சி செய்தும் கார்த்தி தனக்கு எந்த முறையில் உறவு என கண்டுபிடிக்க முடியவில்லை.

karthi arvind swamy meiyazhagan movie review

ஒரு கட்டத்தில் கடைசி பேருந்தை மிஸ் செய்யும் அர்விந்த் சுவாமிக்கு தன் வீட்டில் ஓர் இரவு தங்க தஞ்சம் கொடுக்கிறார் கார்த்தி. அந்த ஓர் இரவில் இருவருக்கும் ஆன உரையாடல்கள், நிகழ்வுகள், அன்பு, பாசம், நேசம், அழுகை, பால்ய நினைவுகள் ஆகியவை ஒருவருக்கொருவர் பரிமாறிக் கொள்கின்றனர். போற போக்கில் அர்விந்த் சுவாமிக்கு தான் யார் என்ற உண்மையை கார்த்தி மூலம் உணர்ந்து கொள்ளும் அளவுக்கு இருவரது நட்பு ஓர் இரவில் வளர்ந்து விடுகிறது. இருப்பினும் கார்த்தியின் பெயர் என்ன என்பது மட்டும் அர்விந்த் சுவாமிக்கு கேள்விக்குறியாகவே இருக்கிறது. கடைசியில் கார்த்தியின் பெயரை அவருக்கே தெரியாமல் அர்விந்த் சுவாமி கண்டுபிடித்தாரா, இல்லையா? என்பதே படத்தின் மீதி கதை.

96 படத்தை போல் மிகவும் எளிமையான ஒரு கதையை வைத்துக் கொண்டு கிட்டத்தட்ட மூன்று மணி நேரம் படத்தை உணர்ச்சி பொங்க உறவினர்களுக்குள் இருக்கும் நட்பை வெளிப்படுத்தும் படி இந்த மெய்யழகனை உருவாக்கி இருக்கிறார் இயக்குநர் பிரேம்குமார். பிரிந்த உறவுகளை மீண்டும் காணக்கூடிய வாய்ப்பு ஏற்படும் போது இருக்கக்கூடிய தவிப்பை மிக எதார்த்தமாகவும், ஜனரஞ்சகமாகவும் காட்டி இருக்கிறார். ஒரு சிறுகதை போல் இருக்கும் உணர்வை இப்படம் மூலம் கடத்தி அதன் மூலம் ரசிக்க வைக்கும் முயற்சி செய்திருக்கும் இயக்குநர் அதற்கான பலனை இப்படம் மூலம் பெற்று இருக்கிறார்.

karthi arvind swamy meiyazhagan movie review

முதல் பாதி முழுவதும் எந்த ஒரு சலசலப்பும் இல்லாமல் தெளிந்த நீரோடை போல செல்லும் திரைப்படம் இரண்டாம் பாதியில் ஏனோ சில ஃபிளாஷ்பேக் காட்சிகள் மூலம் தொய்வு ஏற்பட்டு சற்றே அயற்சியை கொடுத்திருக்கின்றன. குறிப்பாக கார்த்தி வருகைக்கு பின்னர் கலகலவென நகரும் திரைப்படம் போகப்போக இரண்டாம் பாதியில் பலவிதமான ஸ்பீடு பிரேக்கர்கள் இடையே பயணித்து பார்ப்பதற்கு எப்போது முடியும் என்ற உணர்வை கொடுத்து விடுகிறது. அதுவே இந்த படத்திற்கு சற்றே மைனஸ் ஆக அமைந்திருக்கிறது. இருந்தும் கதையும், அதற்கு ஏற்றார் போல் இருக்கும் திரை கதையும், கதை மாந்தர்களின் உணர்வுகளும் எதார்த்த வாழ்வியலை அப்படியே பிரதிபலித்து போற போக்கில் சலனமின்றி ரசிக்கும் படியாக அமைந்திருக்கிறது. அது படத்தை கரை சேர்க்க முயற்சி செய்ய உதவி இருக்கிறது. 

கள்ளம் கபடம் இல்லாத வெள்ளந்தியான மனிதராக அப்படியே வாழ்ந்திருக்கிறார் நடிகர் கார்த்தி. இரண்டரை மணி நேரம் படத்தை தனி ஒரு மனிதனாக அவர் தாங்கி பிடித்திருக்கிறார். சின்ன சின்ன முக பாவனைகள் மற்றும் வசன உச்சரிப்புகள் மூலம் அப்படியே அந்த ஊர்க்காரரை போல் பாவனைகளை வெளிப்படுத்தி அதன் மூலம் ரசிக்க வைத்திருக்கும் கார்த்தி எதார்த்தமான நடிப்பை மிக மிக நேர்த்தியாக வெளிப்படுத்தி மீண்டும் ஒருமுறை கைத்தட்டல் பெற்றிருக்கிறார். படத்தின் தலைப்புக்கு ஏற்றார் போல் மிகவும் உண்மையாக நடந்து கொள்ளும் தன்மை கொண்ட நபராக வரும் கார்த்தி காட்சிக்கு காட்சி கவருகிறார். இவருடன் படம் முழுவதும் பயணிக்கும் நபராக வரும் அர்விந்த் சுவாமி பரிதவிப்பு, பாசம், நேசம், ஏமாற்றம், குற்ற உணர்ச்சி ஆகிய உணர்ச்சிகளை மிக நேர்த்தியாகவும் எதார்த்தமாகவும் வெளிப்படுத்தி தானும் ஒரு சிறந்த நடிகர் என்பதை மீண்டும் ஒரு முறை நிரூபித்திருக்கிறார். படத்தில் இவரது சத்தம் சற்று குறைவாக இருந்தாலும் இவரின் கதாபாத்திரம் மிகவும் சத்தமாக அமைந்து படத்திற்கு பக்கபலமாக அமைந்திருக்கிறது. இவருக்கும் கார்த்திக்குமான கெமிஸ்ட்ரி மிக மிக சிறப்பாக அமைந்திருக்கிறது.

karthi arvind swamy meiyazhagan movie review

அர்விந்த் சுவாமியின் மனைவியாக வரும் தேவதர்ஷினி தனக்கு கொடுத்த கதாபாத்திரத்திற்கு நியாயம் செய்திருக்கிறார். கார்த்தியின் மனைவியாக வரும் ஸ்ரீ திவ்யா சிறிது நேரமே வந்தாலும் மனதில் பதிகிறார். பொதுவாக வழக்கமான கதாநாயகியாக நடிக்கும் ஸ்ரீ திவ்யா இந்த படத்தில் மாறுபட்ட கதாபாத்திரத்தில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார். முக்கிய கதாபாத்திரத்தில் வரும் ஜெயப்பிரகாஷ் ராஜ்கிரண் இளவரசு மற்றும் உற்றார் உறவினர்கள் அவரவர் வேலையை சிறப்பாக செய்து படத்திற்கு வலு சேர்த்திருக்கின்றனர். 

மகேந்திரன் ஜெயராஜூ ஒளிப்பதிவில் தஞ்சை காவிரி மற்றும் அதை சுற்றி உள்ள பகுதிகள் மிக மிக அழகாக காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. குறிப்பாக அவையெல்லாம் இரவு நேர காட்சிகளிலும் கூட அழகாக மின்னுகின்றன. கோவிந்த் வசந்தா இசையில், ‘யாரோ இவன் யாரோ...’ பாடல் சிறப்பு. பின்னணி இசையில் ஆங்காங்கே சிலரை கலங்க வைத்து இருக்கிறார். இருந்தும் ஏனோ 96ல் அவர் கொடுத்த இசை இந்த படத்தில் சற்றே மிஸ்ஸிங். 

karthi arvind swamy meiyazhagan movie review

படம் ஆரம்பித்து முதல் பாதி முழுவதும் குடும்ப உறவுகளை வைத்து சிறப்பாக திரைக்கதை அமைத்த இயக்குநர் இரண்டாம் பாதியில் வாடிவாசல், தூத்துக்குடி துப்பாக்கி சூடு, மன்னர் காலத்து கதை என கதைக்கு வெளியே சென்று விட்டு மீண்டும் கதைக்குள் வந்து, விட்ட இடத்தில் இருந்து பிடிக்க முயற்சி செய்வதில் சறுக்களை சந்தித்து இருக்கிறார். இருந்தும் சின்ன சின்ன விஷயங்கள் கூட அடுத்தவர் வாழ்வில் பெரிய பெரிய மாற்றங்கள் செய்து விடும் என்ற ஒற்றை வரி கதையை எடுத்துக் கொண்டு அதன் மூலம் உறவுகளின் அன்பு பாசத்தை மிக அழகாகவும் எதார்த்தமாகவும் வெளிப்படுத்தி இருக்கிறார். இந்த மெய்யழகன் நிச்சயம் பார்ப்பவர்களை ஓரளவுக்கு கலங்கடிக்க செய்வான். 

மெய்யழகன் - உண்மைக்கு நெருக்கமானவன்!

சார்ந்த செய்திகள்