பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் இன்று மாலை அமைச்சரவை கூட்டம் நடைபெறுகிறது. பிரதமராக இரண்டாவது முறை பதவியேற்று மோடி தலைமையில் நடைபெறும் முதல் அமைச்சரவை கூட்டம் இதுவாகும். மத்திய அமைச்சர்களாக பதவியேற்று கொண்டவர்களுக்கு இது வரை இலாக்காக்கள் ஒதுக்கப்படாமல் உள்ள நிலையில் மீண்டும் பிரதமரை சந்தித்து ஆலோசனை செய்கிறார் மத்தியமைச்சர் அமித்ஷா. அதனைத் தொடர்ந்து அமைச்சரவை கூட்டம் நடைபெறும் என டெல்லி வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றனர். மத்திய அமைச்சர்களுடன் பிரதமர் நரேந்திர மோடி நாட்டின் வளர்ச்சி, பொருளாதாரம், புதிய திட்டங்கள் குறித்து தீவிர ஆலோசனை செய்கிறார்.
மேலும் 2014-2019 ஆம் ஆண்டுகளில் மத்திய அரசு கொண்டு வந்த திட்டங்களில் எந்தெந்த திட்டங்கள் மக்களிடம் சென்றடையவில்லை, எந்த திட்டங்களில் மக்கள் அதிகளவு பயனடைந்து உள்ளனர் என்பது குறித்தும், மத்திய அமைச்சர்களுடன் ஆலோசனை செய்கிறார். அதே போல் 2019-2024 ஆம் ஆண்டுகளின் தொலைநோக்கு திட்டங்கள் குறித்தும், இளைஞர்களுக்கு வேலை வாய்ப்புகள் ஏற்படுத்தும் திட்டங்கள் குறித்தும் ஆலோசனை செய்து, பல அதிரடி அறிவிப்புகளை வெளியிடவுள்ளார் பிரதமர் நரேந்திர மோடி. இரண்டாவது முறையாக பதவி ஏற்றுள்ள பிரதமர் நரேந்திர மோடி கோப்பில் இடும் முதல் கையெழுத்து என்னவாக இருக்கும் என இந்திய மக்கள், இளைஞர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கும் நிலையில், இளைஞர்களின் வேலை கல்வி, வேலை வாய்ப்பு தொடர்பான திட்டங்களில் கையெழுத்திடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.