மகாராஸ்டிரா மாநிலத்தில் முதல்வர் ஏக்நாத் ஷிண்டே தலைமையில் சிவசேனா மற்றும் பா.ஜ.க கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது. இதில் கடந்த ஜூலை மாதம் 2 ஆம் தேதி தேசியவாத காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த அஜித் பவார் மற்றும் தனது ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் 8 பேர், பா.ஜ.க மற்றும் ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான சிவசேனா அணியில் இணைந்தனர். அதனைத் தொடர்ந்து, மகாராஸ்டிரா துணை முதலமைச்சராக அஜித் பவார் பதவி ஏற்றுக் கொண்டார். அவரது அணியைச் சேர்ந்த 8 பேர் முதலமைச்சர் ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான அமைச்சரவையில் அமைச்சர்களாகப் பதவி ஏற்றுக்கொண்டனர். துணை முதலமைச்சர் அஜித் பவாருக்கு நிதி மற்றும் திட்டமிடல் துறை வழங்கப்பட்டது. அதேபோல், அவரது அணியைச் சேர்ந்த 8 அமைச்சர்களுக்கும் இலாகாக்கள் ஒதுக்கப்பட்டன.
இதையடுத்து, பாஜக கூட்டணியில் இணைந்த அஜித் பவார் உள்பட 9 சட்டமன்ற உறுப்பினர்களுக்கு எதிராகத் தேசியவாத காங்கிரஸ் கட்சி சார்பில் கட்சித்தாவல் தடைச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கத் தீர்மானம் கொண்டுவரப்பட்டது. பாஜக கூட்டணி அமைச்சரவையில் இணைந்த அஜித் பவார் உள்ளிட்ட 9 எம்.எல்.ஏ.க்களை தகுதி நீக்கம் செய்ய தேசியவாத காங்கிரஸ் கட்சி சார்பில் சட்டப்பேரவை சபாநாயகரிடம் மனு அளித்துள்ளனர். மேலும் சரத்பவார்தான் கட்சியின் நிறுவனர், தலைவராகவும் தொடர்கிறார் எனத் தேர்தல் ஆணையத்திற்கு தேசியவாத கட்சி சார்பில் கடிதம் எழுதப்பட்டுள்ளது.
இருப்பினும், அஜித் பவார் அவ்வப்போது சரத் பவாரை சந்தித்து ஆலோசனை பெற்று வருகிறார். அதன்படி, ஜூலை மாதம் 17 ஆம் தேதி தெற்கு மும்பையில் உள்ள ஓய்.பி.சவான் மண்டபத்தில் அஜித்பவாரும் அவரது ஆதரவு எம்.எல்.ஏ.க்களும் தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவாரை சந்தித்தனர். சரத்பவாரை சந்தித்த பின், பிரபுல் பட்டேல் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேட்டி அளித்தார். அதில், கட்சியின் ஒற்றுமையை பாதுகாக்க நடவடிக்கை எடுக்கும்படி சரத்பவாரிடம் வலியுறுத்தியதாகக் கூறினார். அதனைத் தொடர்ந்து இரண்டு நாட்கள் கழித்து மீண்டும் அஜித் பவார், சரத் பவாரை சந்தித்து ஆலோசனை நடத்தினார். இது மகாராஷ்டிரா அரசியல் வட்டாரத்தில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்த நிலையில், கடந்த 12 ஆம் தேதி இந்தியா முழுவதும் தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட்டது. இதில் தேசியவாத காங்கிரஸ் கட்சித் தலைவர் சரத்பவார் வீட்டில் தீபாவளி கொண்டாட்ட விழா நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் அஜித்பவாரும் கலந்து கொண்டுள்ளார். அது தொடர்பான புகைப்படத்தை சரத்பவாரின் மகள் சுப்ரியா சுலே எம்.பி. தனது சமூக வலைத்தளங்களில் பதிவிட்டுள்ளார். கட்சியைக் கைப்பற்ற சரத்பவாருக்கும், அஜித்பவாருக்கும் இடையே போட்டி நிலவி வந்தாலும் அவர்கள் ஒன்றாக சேர்ந்து தீபாவளி பண்டிகையைக் கொண்டாடியது அரசியல் வட்டாரத்தில் பெரும் வியப்பை ஏற்படுத்தி உள்ளது.