உத்தரபிரதேச மாநிலம், ஹாத்ரஸ் மாவட்டத்தில் உள்ளது ரஸ்காவன். இங்கு, 'டி.எல். பப்ளிக் ஸ்கூல்' என்ற தனியார் பள்ளி செயல்பட்டு வருகிறது. இப்பள்ளியில் கிரிதார்த் என்ற சிறுவன் 2-ம் வகுப்பு படித்து வந்தார். வீட்டில் இருந்து பள்ளி தூரம் என்பதால், தனியார் பள்ளிக்கு சொந்தமான பள்ளி விடுதியில் 7 வயது சிறுவன் கிரிதார்த் தங்கி கல்வி பயின்று வந்தார்.
இந்த நிலையில், செப்டம்பர் 23 ஆம் தேதி சிறுவனின் தந்தை கிரிஷன் குஷ்வாகாவை பள்ளி நிர்வாகத்தினர் தொலைபேசியில் தொடர்பு கொண்டு சிறுவன் கிரிதார்த் நோய்வாய்ப்பட்டுள்ளதாக கூறியுள்ளனர். இதைக்கேட்டு பதறிப் போன சிறுவனின் தந்தை குஷ்வாகா பள்ளிக்கு ஓடிச் சென்றுள்ளார். அப்போது, சிறுவனை தனியார் பள்ளியின் இயக்குநர் தினேஷ் பாகெல், தனது காரில் மருத்துவமனைக்கு கொண்டு செல்ல முயன்றுள்ளார். இதையடுத்து, தினேஷ் பாகெல் காரில் இருந்து சிறுவனை சடலமாக மீட்ட அவரது தந்தை குஷ்வாகா, சந்தேகம் அடைந்து போலீஸில் புகார் செய்தார். சிறுவனின் உடலை கைப்பற்றி பிரதே பரிசோதனை அனுப்பி வைத்த போலீசார், சிறுவன் இறப்பு குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டனர். அதில், தனியார் பள்ளி வளர்ச்சியும் புகழும் பெறுவதற்காக சிறுவன் நரபலி கொடுக்கப்பட்டதாக அதிர்ச்சியூட்டும் உண்மை தெரியவந்துள்ளது.
இது குறித்து விரிவாக பேசிய போலீசார், இந்த வழக்கில் பள்ளி உரிமையாளர் ஜசோதன் சிங், அவரது மகனும் பள்ளி இயக்குநருமான தினேஷ் பாகெல் மற்றும் 3 ஆசிரியர்கள் என 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். பள்ளி உரிமையாளர் ஜசோதன் சிங்கிற்கு பில்லி சூனியம் மீதுநம்பிக்கை உள்ளது. இதை அகற்றுவதற்காக கடந்த செப்டம்பர் 22 ஆம் தேதி இரவு பள்ளிக்கு பின்புறம் பூஜை நடத்தியுள்ளார்.
இதையடுத்து, சிறுவனை நரபலி கொடுக்க முடிவு செய்த அவர், விடுதியில் தூங்கிக் கொண்டிருந்த சிறுவனை தூக்கிவரச் செய்துள்ளார். இந்நிலையில், தூக்கத்தில் இருந்து விழித்த கிரிதார்த் பயத்தில் அலறியுள்ளார். இதனால், அலறல் சத்தம் கேட்டு நரபலி விவகாரம் வெளியே தெரிந்து விடும் என்பதால், சிறுவனை கழுத்தை நெரித்துகொன்றது விசாரணையில் அம்பலமானதாக போலீசார் கூறியுள்ளனர்.
நடந்த கொலையை மறைக்க சிறுவன் உடல்நலக் குறைவால் இறந்ததுபோல் நாடகமாடியதும், இந்த சம்பவத்தில் பள்ளிக்கு பின்புறம் பூஜை நடந்ததற்கான ஆதாரங்கள் கிடைத்திருப்பதாகவும், போலீசார் கூறினர். இதற்கு முன் கடந்த செப்டம்பர் 6 ஆம் தேதி மற்றொரு சிறுவனை நரபலி கொடுக்க பள்ளி உரிமையாளர் முயன்றுள்ளார். ஆனால் அம் முயற்சி தோல்வியில் முடிந்ததும் விசாரணையில் தெரிய வந்ததாக போலீசார் தகவல் தெரிவித்தனர்.
உத்தரபிரதேச மாநிலம் ஹாத்ரஸில் தனியார் பள்ளி வளர்ச்சிக்காக சிறுவனை நரபலிகொடுத்ததாக பள்ளி நிர்வாகத்தினர் 5 பேர் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.