கரோனா தொற்று மின்னல் வேகம் எடுத்திருப்பதோடு, அதன் உயிர்குடிக்கும் வேகமும் அதிகரித்திருக்கிறது. 28-ஆம் தேதி நிலவரப்படி தமிழகத்தில் மொத்தம் 82 ஆயிரத்து 275 பேர் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். இதுவரை தமிழகத்தில் ஏற்பட்டிருக்கும் கரோனா உயிர்ப் பலிகளின் எண்ணிக்கை 1,079-ஐ எட்டியிருக்கிறது. 28 ஆம் தேதி ஒரு நாளில் மட்டும் தமிழகத்தில் ஏற்பட்ட தொற்றின் எண்ணிக்கை 3 ஆயிரத்து 940-ஆக எகிறி பயமுறுத்த, அன்று மட்டும் 54 பேரின் உயிரைக் குடித்து பகீரை ஏற்படுத்திருக்கிறது கரோனா.
இந்தத் திகில் நிலவரம், மக்களின் நிம்மதியைத் தொலைத்து அவர்களிடையே மரண பீதியை ஏற்படுத்திக்கொண்டிருக்கிறது. கொடிய கரோனாவுக்கு முடிவே இல்லையா? அதைக் கட்டுபடுத்த என்னதான் தீர்வு? என்ற கேள்விகளை வாழப்பாடி உதயா மருத்துவமனையின் இயக்குநர்களில் ஒருவரான டாக்டர் சி.மோதிலாலிடம் வைத்தோம்.
மிகவும் நிதானத்தோடு பேசிய அவர், “இப்போதைய நிலை மிகவும் கவலைக்குரியாதாக இருக்கிறது. அதேசமயம் ஆங்கில மருத்துவத்தோடு, நம் சித்த மருந்துகளையும், ஆயுர்வேத, ஹோமியோ மருந்துகளையும் கொடுத்தால் கரோனா நோயாளிகளை பாதிப்பிலிருந்து மீட்கமுடியும் என்பதை நாம் அனுபவப் பூர்வமாகவே கண்டறிந்திருக்கிறோம். அதனால்தான், அரசு இதில் பாரபட்சம் பார்க்காமல் அனைத்து மருத்துவ முறைகளையும் கையிலெடுத்து கரோனா நோயாளிகளுக்கு தீவிரமாக சிகிச்சை கொடுத்துக்கொண்டிருக்கிறது. அதன் மூலம் கரோனா நோயாளிகள் வெற்றிகரமாகப் பெருமளவில் குணம்பெற்று வருகிறார்கள். இதுவரை தமிழகத்தில் 50 ஆயிரம் பேர்வரை கரோனாவிடம் இருந்து மீட்கப்பட்டிருக்கிறார்கள் என்பது ஆறுதலான செய்தி.
இப்படிக் கரோனா நோயாளிகளை மீட்கக் கூட்டு மருத்துவ டெக்னிக் நம் கையில் இருக்கும்போது, நாம் நினைத்தால் கரோனாவை எளிதாகக் கையாண்டு, அதைக் கடந்துவிடலாம். ஆனால் இப்படிப்பட்ட வலிமையான மருத்துவம் நம்மிடம் இருந்தும், ஒரு பக்கம் நோயாளிகள் குணம் பெற்று வீடு திரும்பிக்கொண்டிருக்கும் நிலையிலும், கரோனாத் தொற்றின் பரவல், கட்டுமீறிப் போய்க்கொண்டே இருக்கிறது என்றால் என்ன அர்த்தம்?
இதுவரை 5 ஊரடங்குகளைப் பிரகடனப்படுத்தியும் தொற்றின் வேகத்தைக் குறைக்க முடியவில்லை என்றால், அதற்குக் காரணம் ஊரடங்கில் தொடர்ந்து ஏற்படுத்தப்படும் தளர்வுகள்தான் என்பது என் தனிபட்ட கருத்து.
கரோனாவை நாம் கட்டுக்குள் கொண்டுவந்து, முழுமையாக அதை ஒடுக்கவேண்டும் என்றால் தமிழகம் முழுதிற்கும் தளர்வில்லா முழுமையான ஊரடங்கைக் குறைந்த பட்சம் 20 நாட்களுக்காவது கடுமையாகப் பிரகடனம் செய்யவேண்டும்.
அதற்கு முன்பாக, தளர்வில்லா முழு ஊரடங்கிற்கு மக்கள் தயாராக, சிறிது அவகாசம் கொடுக்கலாம். பின்னர் தெருவிற்கு ஒருகடை வீதம் திறக்கச் செய்து, அத்தியாவசியப் பொருள் தேவைப்படுவோருக்கு, அவற்றை அவர்களின் வீடுகளுக்கே கொண்டு போய் விநியோகிக்கச் செய்யலாம். இதையெல்லாம் செய்தால் மக்கள் தாமாக வீடடங்கி இருப்பார்கள்.
இப்படி முழுமையான தளர்வில்லாத ஊரடங்கை அமல்படுத்துவதோடு, அரசு ஒவ்வொரு வீட்டிற்கும் கரோனாவை எதிர்கொள்வதற்கான கூட்டு மருந்துகளை, அதன் விவரக் குறிப்போடு விநியோகிக்க வேண்டும். இதற்குப் பெரிதாக செலவாகாது. ஒரு குடும்பத்திற்கு அதிகப்படியாக 100 ரூபாய் அளவிற்கே இதற்குச் செலவாகலாம். கூடவே சத்தான உணவு முறைகளையும் மக்களிடம் பரிந்துரைக்க வேண்டும். இப்படியாக தமிழகம் முழுக்க அனைத்துக் குடும்பங்களுக்கும் அரசின் கூட்டுமருந்துகள் போய்ச் சேர்ந்துவிட்டால், முழுமையான தளர்வில்லா ஊரடங்குக் காலத்திலேயே, கரோனாவை முழுமையாகக் கட்டுக்குள் கொண்டுவந்துவிட முடியும்.
இதன்பின் மெல்ல மெல்ல தளர்வை ஏற்படுத்தி, இயல்பு நிலைக்கு நாம் விரைவில் வந்துவிட முடியும். கரோனாவால் பெரும் அழிவைச் சந்தித்த சீனா உள்ளிட்ட நாடுகள், இப்படிப்பட்ட தளர்வில்லா முழு ஊரடங்கு மூலம்தான், விரைந்து இயல்பு நிலையை மீட்டெத்திருக்கின்றன என்பதையும் நாம் கவனத்தில் கொள்ளவேண்டும்.
அரசு மட்டும் இப்படியொரு பெரும் முயற்சியில் இறங்கினால் போதாது. பொது மக்களும், அரசின் முயற்சிக்கு நூறு சதவீத ஒத்துழைப்பைத் தரவேண்டும். இன்று இன்னமும் பெரும்பாலானோருக்கு கரோனா பற்றிய விழிப்புணர்வு ஏற்படவில்லை என்பது வருத்தத்திற்குரியது. எனவே பொதுமக்கள் முதலில் விழிப்புணர்வோடு நடந்துகொள்ள வேண்டும். இல்லையென்றால் ’பாதிப்பு மக்களுக்கு; கெட்ட பெயர் அரசுக்கு’ என்ற நிலைதான் ஏற்படும்.
எனவே இப்போதைய தேவை, தளர்வில்லாத முழுமையான ஊரடங்கும், வீடு வாரியாகக் கூட்டு மருந்துகளின் விநியோகமும்தான்” என்கிறார் விரிவாகவே.
டாக்டர் மோதிலாலின் கருத்துகள், அதிக கவனத்துக்குரியவை.