"எங்க தாத்தா ஒன்னு சொல்லுவார் சார். எல்லோரும் சமம்னா யாரு ராஜா?.... அவுங்கவங்க அவுங்கவங்க இடத்துல இருக்கணும்னு. அவர் மட்டும் இன்னைக்கு இருந்திருந்தா 'போயா... ம**"னு சொல்லிருப்பேன் சார்" என்று சாதி ஏற்றத்தாழ்வை வாழ்க்கை நெறிமுறை போல சொல்லி வலியுறுத்தும் தனது தாத்தாவைப் பற்றி மயில்சாமி நடித்துள்ள 'வில்லாளன்' பாத்திரம் பேசும்போது திரையரங்கம் கைதட்டல்களால் அதிர்கிறது. அத்தகைய தாத்தாக்களை, அப்போதே அதை விட மோசமாகத் திட்டிய (தனது செயல்பாட்டால்) ஒரு தாத்தாவை பெற்ற மாநிலம் தமிழகம். இருந்தாலும் ஆண்டாண்டு காலமாய் ஆழம் பெற்றுப்போன நோய்க்கு ஒரு மருத்துவர் போதவில்லை என்பது உண்மை. இன்றும் அவ்வப்போது, ஆங்காங்கே நடக்கும் சம்பவங்கள் அதை நிரூபிக்கின்றன. அந்த மிச்ச சொச்ச மிருகங்களின் மனசாட்சியை உலுக்கிக் கேட்கிறது உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் வெளிவந்திருக்கும் 'நெஞ்சுக்கு நீதி'.
'மதம், இனம், சாதி, பாலினம், பிறந்த இடம் உள்ளிட்ட எதன் அடிப்படையிலும் எந்த ஒரு இந்திய குடிமகனுக்கும் பாகுபாடு காட்டக்கூடாது' என்று சொல்லும் இந்திய அரசியலமைப்பு சட்டத்தின் பிரிவான 'ஆர்டிகள் 15'ஐ அடிப்படையாகக் கொண்டு அதே தலைப்பில் சில ஆண்டுகளுக்கு முன்பு இந்தியில் வெளியாகி பெரும் வெற்றியை பெற்று, விவாதங்களை உண்டாக்கிய படம் 'ஆர்டிகள் 15'. அந்தத் திரைப்படத்தின் ரீமேக்காக உருவாகி வெளிவந்துள்ளது 'நெஞ்சுக்கு நீதி'. மிக முக்கியமாக சொல்லப்பட வேண்டிய ஒரு சமூக பிரச்சனை, ஒரு கதை, அதை தமிழ்நாட்டுக்குப் பொருந்தும் வகையில் சொல்வது எப்படி? இன்றும் பொழுதுபோக்கு அம்சமாகவே பெரும்பாலானோரால் பார்க்கப்படும் சினிமாவில் அந்தக் கதையை சுவாரசியமாகக் கொண்டு வருவது எப்படி? இந்த இரண்டு சவால்களிலும் வென்றிருக்கிறார் இயக்குநர் அருண்ராஜா காமராஜ். இந்தி படத்தில் சில சிறு மாற்றங்களை செய்து தமிழகத்தின் அரசியல் - சமூக சூழல், வரலாற்றுக்கு ஏற்ப செம்மையாக உருவாக்கியிருக்கிறார்.
பொள்ளாச்சி அருகே உள்ள ஒரு கிராமத்தில் கூலியை 30 ரூபாய் உயர்த்திக் கேட்கும் ஒடுக்கப்பட்ட சமூகத்தை சேர்ந்த பெண்களுக்கு நேரும் கொடுமை... அதை விசாரிக்கும் பொறுப்பை ஏற்பது தமிழக கிராமங்களின் சமூக சூழல் முழுமையாக தெரியாத, வெளிநாட்டில் படித்து வந்த IPS அதிகாரி விஜயராகவன் (உதயநிதி)... அதற்கான விசாரணை நடந்து நீதி கிடைப்பதில் உள்ள தடங்கல்கள்... இப்படி பயணிக்கும் கதையில் சாதி என்ற அமைப்பின் 360 டிகிரியையும் கையாண்டிருக்கிறார் இயக்குநர் அருண்ராஜா காமராஜ். 'இந்த கடையில எல்லாம் நம்ம டீ குடிக்கக் கூடாது, இது பன்னிக அதிகம் இருக்கும் இடம்' என்று பேசும் மனநிலை தொடங்கி, ஒடுக்கப்பட்ட இனத்தை சேர்ந்த பெண் சமைத்தார் என்பதற்காக பள்ளி மாணவர்களுக்கான சத்துணவு கீழே கொட்டப்படுவது, சட்டம் பற்றிய கவலையும் மனிதர்கள் என்ற எண்ணமும் இல்லாமல் இன்றும் நிகழும் மனிதக் கழிவுகளை மனிதர் சுத்தம் செய்யும் கொடுமை, 30 ரூபாய் கூலி கேட்டதற்காக வதைத்துக் கொலை செய்யப்படும் கொடுமை என ஒவ்வொன்றையும் சொல்லி சாதி என்ற நோய் மனநிலை எவ்வளவு ஆழமாக இறங்கியிருக்கிறது என்பதையும் எவ்வளவு நுட்பமாகவும் நுணுக்கமாகவும் அந்தப் படிநிலைகள் பராமரிக்கப்படுகின்றன என்பதையும் உண்மை பொங்க சொல்லி இருக்கிறார்.
உதயநிதியின் தேர்வுகளில் இந்தப் படம் உச்சம் என்று சொல்லலாம். சமூக நீதி மண்ணில் 'நெஞ்சுக்கு நீதி'க்கான தேவையும் இருக்கிறது என்பதை உணர்ந்து அவர் நடித்திருக்கும் இந்தப் படம் அவரது அரசியல் பொறுப்புணர்வையும் காட்டுகிறது. நடிப்பில் பக்குவம் கூடியிருக்கிறது. இது தொடர வேண்டும். பெரியார் புத்தகத்தை பார்த்தாலே எரியும் பாத்திரத்தில் சுரேஷ் சக்கரவர்த்தி, தவறென்று தெரியாமல் வழி வழியாக சொல்லப்பட்ட பொய்களை நம்பி ஏற்றத்தாழ்வு பார்க்கும் பாத்திரத்தில் மயில்சாமி, தனக்கான உரிமையை பயன்படுத்தி காவல்துறை பணிக்கு வந்துவிட்டாலும் கூட ஆதிக்க திமிரில் திரிபவர்களின் கைகளில் பொம்மையாக இருக்கும் ஒடுக்கப்பட்ட இனத்தை சேர்ந்த 'மலைச்சாமி' பாத்திரத்தில் இளவரசு, அடக்கப்பட்ட வலி தாங்காமல் அத்துமீறி போராடும் தனது நண்பனை கெட்ட வழியில் போன குற்றவாளியாகப் பார்க்கும் 'வாசன்' பாத்திரத்தில் அப்தூல் லீ, அடி வாங்கியே பழக்கப்பட்ட மக்களில் இருந்து திமிறி எழுந்து திருப்பி அடிக்கும் போராளி 'குமரன்' பாத்திரத்தில் ஆரி என படத்தின் ஒவ்வொரு பாத்திரமும் சமூகத்தின் பல அடுக்குகளின் பிரதிநிதிகளாக உருவாக்கப்பட்டுள்ளன. உதயநிதி மட்டுமே நாயகனாக அல்லாமல் ஒவ்வொரு பாத்திரமும் நாயகனாகும் தருணங்கள் படத்தில் உள்ளன.
அனைவரும் சமம் என சொல்லும் சட்டத்தை நடைமுறைப்படுத்தும் இடத்தில் இருக்கும் காவல்துறைக்குள்ளேயே சாதியை அடிப்படையாகக் கொண்டு நிலவும் ஏற்ற தாழ்வுகள், பிற அரசு அலுவலகங்கள், அமைப்புகளில் இது பரவி இருக்கும் விதம், அந்த துறைகளின் இயக்கத்தையே இந்த சாதி உணர்வும் வெறியும் பாதிக்கும் சூழல் என ஒவ்வொன்றையும் தயங்காமல் விரிவாக விவரித்துள்ளது படம். 'தீட்டுன்னா என்ன' என்று ஆரம்பித்து, நம் சமூகத்தில் எத்தனை அடுக்குகள், பிரிவுகள், உட்பிரிவுகள் என பேசும் அந்தக் காவல் நிலைய காட்சி இந்த உண்மைகளின் உச்சம். அந்தக் காட்சியில் நமக்கு சிரிப்பு வருகிறது, ஆனால் அது நம் சமூகம் குறித்த அவமானமும் வெட்கமும் கலந்த சிரிப்பு. "அந்த தண்ணில அவுங்க குளிச்சா வராத அழுக்கு, நாங்க குடிச்சா வந்திருமா சார்?" என்ற ஆதங்கம்... "பல நூறு வருஷமா நாங்க பட்டினி கிடந்தோம், அந்த பசியே உங்களுக்கு தெரியாதப்போ, நாங்க உண்ணாவிரதம் இருந்தா நீங்க மதிப்பீங்களா?" என்ற கொதிப்பு... "சாமில இருந்து சாப்பாடு வரைக்கும் நாங்க தீட்டு, எங்க பொண்ணுகளை நாசம் பண்ண மட்டும் தீட்டு இல்லையாடா?" என்ற கோபம்... இப்படி படத்தின் ஒவ்வொரு வசனமும் ஆயிரம் உணர்வுகளை அழுத்தமாக வெளிப்படுத்தியுள்ளன. வசனங்கள் மூலம் மிகச் சிறப்பான பங்களித்துள்ளார் தமிழரசன் பச்சமுத்து.
பெரும்பாலான விசயங்கள் சரியாக இருக்கின்றன. அதையும் தாண்டி, தமிழகத்தில் சமூக நீதி இயக்கங்கள், ஒடுக்கப்பட்டோருக்கான அரசியல் இயக்கங்கள், மனித உரிமை இயக்கங்கள் தீவிரமாக செயல்படும் நிலையில், படத்தில் இப்படி ஒரு கொடுமை நடந்திருக்கும் இடத்தில் எந்த இயக்கமும் களமிறங்கவில்லையா என்ற கேள்வி வருகிறது. (அதற்கு பதிலாக ஒரு வசனம் இருந்தாலும்) அதுபோல, இத்தனை ஆய்வுகள் செய்து உண்மைகள் நிறைந்து எடுக்கப்பட்ட படத்தில் சிறு நெருடலும் இருக்கிறது. இப்படிப்பட்ட கொடூரங்கள் நடக்கும்போது அதிகாரத்துக்கு அஞ்சாமல் தைரியமாக களத்தில் இறங்கிய ஊடகங்கள் இருக்க, சற்றும் பொருத்தமற்ற ஊடக அடையாளங்கள் களத்தில் இருப்பது போன்று முக்கியமான காட்சிகளில் படமாக்கப்பட்டுள்ளன. இதிலும் உண்மைதன்மை முக்கியம்தானே?
நாய்க்குப் பெயர் வைத்தும், மனிதர்களை 'அதுங்க' என்றும், அழைக்கும் கூட்டத்திடம் சட்டையை கழற்றி சண்டை போடும் ஹீரோவாக இல்லாமல் சட்டப்படியே போராடி நீதியை நிலைநாட்டுகிறார் நாயகன் 'விஜயராகவன்' பாத்திரத்தில் உதயநிதி. படத்தின் க்ளைமாக்சில் நடப்பது போல முழு மனமாற்றம் நிகழும், அதுவும் தமிழ்நாட்டில் விரைவாக நிகழும் என்ற நம்பிக்கையை ஏற்படுத்துகிறது படம். கலைஞரின் தலைப்பான 'நெஞ்சுக்கு நீதி'க்கு மரியாதை சேர்த்துள்ளது திரைப்படம். இதற்கு நெஞ்சை நிமிர்த்தி ஒரு சல்யூட் அடிக்கலாம்.