ஒரு பக்கம் தன் சொந்த வாழ்க்கையில் ஏற்பட்ட பிரச்சனை காரணமாக கரண்ட் ட்ரெண்டில் இருக்கும் ஜெயம் ரவி. இன்னொரு பக்கம் தான் விட்ட இடத்தை பிடிக்க சில படங்களாக போராடி தோல்வி மட்டுமே தழுவி வரும் எம் ராஜேஷ் இந்த முறை ஜெயம் ரவி கூட்டணியில் பிரதர் படம் மூலம் அதை மீண்டும் கைப்பற்ற களம் இறங்கி இருக்கிறார்கள். இந்த இருவருக்கும் தற்பொழுது ஏதோ ஒரு வகையில் இருக்கும் பேட் டைமை இந்த பிரதர் படம் தீர்த்து வைத்ததா, இல்லையா?
வக்கீலுக்கு படித்த ஜெயம் ரவி அந்த படிப்பை முடிக்க முடியாமல் தவிக்கிறார். இதனால் அவர் வேலை வெட்டிக்கு செல்லாமல் வீட்டிலேயே இருந்து கொண்டு குறும்புத்தனம், அட்ரா சிட்டி செய்து உடன் இருப்பவர்களை காயப்படுத்துகிறார். ஜெயம் ரவியை எப்படியாவது திருத்தி வழிக்கு கொண்டு வர ஊட்டியில் திருமணம் ஆகி இருக்கும் அவரது அக்கா பூமிகா ஜெயம் ரவியை தன்னுடன் ஊட்டிக்கு அழைத்து சென்று விடுகிறார். போன இடத்தில் ஜெயம் ரவி அங்கேயும் தனது வழக்கமான அட்ராசிட்டியை செய்து அந்த குடும்பத்தையே பிரித்து விடுகிறார். இதனால் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளான ஜெயம் ரவியின் தந்தை அச்யுத் குமாருக்கு நெஞ்சுவலி ஏற்படுகிறது. அப்பாவை எப்படியாவது காப்பாற்ற வேண்டும் என்றால் பிரிந்த குடும்பத்தை ஒன்று சேர்த்தால் மட்டுமே முடியும் என்ற சூழல் ஏற்பட ஜெயம் ரவி எப்படி பிரிந்த குடும்பத்தை ஒன்று சேர்த்தார்? தன்னுடைய தவறுகளையும் அவர் எப்படி திருத்திக் கொண்டார்? என்பதே இப்படத்தின் மீதி கதை.
ஓரளவு சீரியல் ஆன கதையை எடுத்துக்கொண்டு அதை சீரியஸே இல்லாத ஒரு திரை கதையோடு தனது அக்மார்க் காமெடி காட்சிகள் மற்றும் சென்டிமென்ட் காட்சிகள் மூலம் படத்தை ரசிக்க வைக்க முயற்சி செய்திருக்கிறார் இயக்குனர் எம் ராஜேஷ். 10 வருடங்களுக்கு முன்பு எம் ராஜேஷ் எப்படி படம் எடுத்தாரோ அதே பாணியை இந்த காலகட்டத்திலும் கொடுத்திருக்கிறார். அந்த காலகட்டத்திற்கு அது ரசிக்கும் படியான படங்களாக இருந்தாலும் இந்த காலகட்டத்திற்கு அது ஏற்றுக்கொள்ளும் படியான படங்களாக இல்லாமல் இருப்பது இப்படத்திற்கு சற்றே மைனஸ் ஆக அமைந்திருக்கிறது. தற்போது இருக்கும் ட்ரெண்டில் சினிமாவும் கதை சொல்லும் விதமும் பலவிதமான பரிணாம வளர்ச்சியை பெற்று வேறு ஒரு தளத்தில் பயணித்துக் கொண்டிருக்கிறது. அதை புரிந்து கொண்டு அதற்கு ஏற்றார் போல் திரைக்கதை அமைக்காமல் தனக்கு என்ன வருமோ, தன்னுடைய பாணி எதுவோ அதை அப்டேட் செய்யாமல் அதே போன்று பிரதர் படத்தையும் கொடுத்திருக்கிறார் இயக்குனர் எம் ராஜேஷ். அது முந்தைய படங்கள் போல் அந்த அளவு ரசிக்கும்படி இருந்ததா என்றால் சற்று சந்தேகமே. இருந்தும் முதல் பாதி சுமாராக சென்றாலும் இரண்டாம் பாதி எந்தெந்த இடங்களில் விட்டதை பிடிக்க வேண்டுமோ அதை ஓரளவுக்கு நன்றாகவே பிடித்து ரசிகர்களை இழுத்துப் பிடித்திருக்கிறார். குறிப்பாக குடும்ப சூழல், அக்கா தம்பி செண்டிமெண்ட், மற்றும் குடும்ப செண்டிமெண்ட் ஆகியவைகள் இரண்டாம் பாதியில் சிறப்பாக அமைந்து படத்தையும் ஓரளவு கரை சேர்க்க உதவி இருக்கிறது. இரண்டாம் பாதியில் இருந்த அழுத்தமும் கதைக்கான சீரியஸ்னசும் முதல் பாதியிலும் இருந்திருந்தால் இந்த படம் கண்டிப்பாக தீபாவளி ரேஸில் ஒரு முக்கிய இடத்தை பெற்று இருக்கும்.
ஜெயம் ரவி வழக்கம் போல் தன்னுடைய குடும்ப படங்களில் எப்படி சார்மிங்கான நடிப்பை வெளிப்படுத்துவாரோ அதே போல் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி கவர்ந்திருக்கிறார். எந்தெந்த காட்சிகளுக்கு எவ்வளவு நடிக்க வேண்டுமோ அந்த அளவை சரியாக செய்து நடிப்பில் ஓவர் டூ செய்யாமல் தனக்கு என்ன வருமோ அதை சிறப்பாக மிகைப்படுத்தாமல் செய்து தனக்கு கொடுத்த கதாபாத்திரத்திற்கு என்ன தேவையோ அதை சரியாக கொடுத்திருக்கிறார். வழக்கமான நாயகியாக வந்து செல்லும் பிரியங்கா மோகன் வழக்கமான நடிப்பை படத்தில் கொடுத்துவிட்டு சென்றிருக்கிறார். அக்கா பூமிகாவுக்கு மிக அழுத்தமான ஒரு கதாபாத்திரம். இவருக்கும் ஜெயம் ரவிக்குமான கெமிஸ்ட்ரி இரண்டாம் பாதியில் நன்றாக ஒர்க் அவுட் ஆகி இருக்கிறது. அதற்கு இவர்களுக்குள் இருக்கும் அந்த பாண்ட் காரணமாக பார்க்கப்பட்டாலும் பூமிகாவின் நடிப்பு ஓரளவுக்கு வரவேற்பு தரும்படி இருக்கிறது. தனது வசன உச்சரிப்பில் மிகவும் கவனமாக இருக்கும் அவர் மிகவும் அழுத்தமாக வசனங்களை பேசுவது போல் வாய் அசைக்கிறார். அது பல இடங்களில் எதார்த்தமாக அமைந்திருந்தாலும் சில இடங்களில் மிகவும் ஆர்டிபிசியல் ஆக இருக்கின்றது. மற்றபடி தனக்கு கொடுத்த வேலையை சிறப்பாகவே செய்திருக்கிறார்.
தந்தை அச்யுத் குமார், தாய் சீதா ஆகியோர் வழக்கமான தாய் தந்தை கதாபாத்திரத்தில் என்ன செய்ய முடியுமோ அதையே இந்த படத்திலும் செய்து இருக்கின்றனர். படத்தில் ஜெயம் ரவிக்கு பிறகு சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி இருப்பது பூமிகாவின் மாமனார் ராவ் ரமேஷ். இவருக்கும் ஜெயம் ரவிக்கும் ஆனா கேட் அன் மவுஸ் கேம் சிறப்பாக அமைந்திருக்கிறது. அதற்கு ஏற்றார் போல் தனது சரவெடியான நடிப்பை ராவ் ரமேஷ் சிறப்பாக கொடுத்து காட்சிகளுக்கு வலு சேர்த்து இருக்கிறார். காட்சிக்கு காட்சி வெறுப்பேத்தும் படியான நடிப்பை சிறப்பாக கொடுத்து படத்தையும் தூக்கி நிறுத்தி இருக்கிறார். காமெடி காட்சிகளுக்கு பொறுப்பு ஏற்று இருக்கும் விடிவி கணேஷ் கிளைமாக்ஸ் காட்சிகள் மட்டும் குபேர் சிரிப்பு ஏற்படுத்தும்படி சிறப்பாக பங்களிப்பு கொடுத்திருக்கிறார். பூமிகாவின் மாமியாராக வரும் சரண்யா பொன்வண்ணன் வித்தியாசமான கதாபாத்திரத்தை சிறப்பாக செய்திருக்கிறார். பூமிகாவின் கணவராக வரும் நட்டி எதிர்பார்த்த அளவு கதாபாத்திரம் அவருக்கு அமையவில்லை. இருந்தும் அவருக்கான வேலையை தனக்கு கொடுத்த ஸ்பேசில் சிறப்பாக செய்திருக்கிறார். டான்ஸ் மாஸ்டர் சதீஷ் வழக்கமான அமெரிக்கன் மாப்பிள்ளை வேடத்தில் வந்து செல்கிறார். மற்றபடி உடனடித்த அனைவருமே அவரவர் வேலையை செவ்வனே செய்து விட்டு சென்று இருக்கின்றனர்.
விவேகானந்த் சந்தோஷம் ஒளிப்பதிவில் வழக்கமான ராஜேஷ் படங்கள் போல் இந்த படமும் மிகவும் கலர்ஃபுல்லாக இருக்கிறது. ஹாரிஸ் ஜெயராஜ் இசையில் மகா மெஷின் பாடல் இந்த கால ட்ரெண்டில் ஹிட் அடித்து இருக்கிறது. மற்றபடி அவரின் வழக்கமான பாடல்கள் ஓரளவு வரவேற்பு பெற்று இருக்கின்றன. பின்னணியில் எப்பொழுதும் போல் குடும்பங்கள் ரசிக்கும் படியான இசையை கொடுத்திருக்கிறார்.
இரண்டாம் பாதியில் சென்டிமென்ட் காட்சிகளுக்காக சிரத்தை எடுத்துக் கொண்டு ரசிக்கும்படி கொடுத்த இயக்குனர் எம் ராஜேஷ் அதே சிரத்தை முதல் பாதி படத்திற்கும், கதையின் சீரியஸ்னசுக்கும் கொடுத்திருந்தால் இந்த படம் தீபாவளி ரேசில் சிறப்பான பங்களிப்பை கொடுத்து இருவரின் பேட் டைமுக்கு சற்றே ஆறுதலாக அமைந்திருக்கும்.
பிரதர் - வழக்கமானவன்!