Skip to main content

"எதுமாதிரியும் இல்லாத புதுமாதிரியான பழைய படம்" அன்பறிவு - விமர்சனம்

Published on 07/01/2022 | Edited on 07/01/2022
bfdhfdhd

 

நட்பே துணை படத்துக்குப் பிறகு சிறு சறுக்கல்களைச் சந்தித்த நடிகர் ஹிப்ஹாப் தமிழா ஆதி நடிப்பில் ஓடிடியில் வெளியாகியுள்ள படம்  அன்பறிவு. ஆதிக்கு கடைசியாக வெளியான படங்களுக்கு போதிய வரவேற்பு கிடைக்காததால் வெற்றி பெற்றே ஆகவேண்டிய கட்டாயத்தில் ரிலீஸாகியுள்ள அன்பறிவு போதிய வரவேற்பைப் பெற்றதா...?

 

மதுரை உள்ள கிராமத்தில் பெரும் செல்வந்தராக இருக்கும் நெப்போலியன் மகள் ஆஷா ஷரத்தை திருமணம் செய்கிறார் சாய் குமார். இவர்களுக்கு இரட்டை ஆண் குழந்தை பிறக்கிறது. இதற்கிடையே நெப்போலியனின் உதவியாளராக இருக்கும் விதார்த் சூழ்ச்சி செய்து இவர்களின் குடும்பத்தைப் பிரிக்கிறார். இதனால் சாய்குமார் ஒரு குழந்தையைத் தூக்கிக்கொண்டு வெளிநாடு சென்றுவிடுகிறார். ஒரு மகன் தாயிடமும், ஒரு மகன் தந்தையிடமும் வளர்கிறார்கள். இந்த பிரிந்த குடும்பம் ஒன்று சேர்ந்ததா, இல்லையா? என்பதே அன்பறிவு படத்தின் மீதி கதை.

 

fdnbdfn

 

அரதப்பழசான ஒரு கதையை கலர்ஃபுல்லான குடும்பப்படமாக கொடுத்து ரசிக்கவைக்க முயற்சி செய்துள்ளார் இயக்குநர் அஷ்வின் ராம். நாம் இதுவரை பார்த்துப் பழகிய பல்வேறு படங்களின் சாயல்கள் இந்த படத்தில் தென்படுகிறது. இருந்தும் அவை பல இடங்களில் ரசிக்கும்படியும், நெகிழ்ச்சி உண்டாக்கும்படியும் அமைந்து அயர்ச்சியைத் தவிர்த்துள்ளது. இரட்டை சகோதரர்கள் சிறு வயதில் பிரிந்து, பின் பெரியவர்கள் ஆன பிறகு குடும்பத்தோடு ஒன்று சேர்வது என்ற அடித்துத் துவைத்த கதையை இன்றைய கால ரசிகர்கள் ரசிக்கும்படி ஆங்காங்கே பட்டி டிங்கரிங் பார்த்துப் பக்குவமாகக் கொடுத்து பாஸ் மார்க் வாங்கியுள்ளார் இயக்குநர் அஷ்வின் ராம்.

 

ngngf

 

அன்பு, அறிவு என இரு வேடங்களில் நடித்திருக்கும் ஹிப்ஹாப் ஆதி அந்தந்த கதாபாத்திரங்களுக்கு தகுந்தாற்போல் மாறுபாடு காட்டி நடித்துள்ளார். அன்பு கதாபாத்திரத்தில் முரடனாகவும், அறிவு கதாபாத்திரத்தில் ஹைஃபை இளைஞனாகவும் நடித்து கவனம் பெற்றுள்ளார். அதேபோல் அம்மா, அப்பா சம்பந்தப்பட்ட  செண்டிமெண்ட் காட்சிகளில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி ரசிக்கவைத்துள்ளார்.

 

தாத்தாவாக வரும் நெப்போலியன் தனது அனுபவ நடிப்பின் மூலம் படத்துக்கு தூணாக அமைந்துள்ளார். தாத்தாவுக்கும் பேரனுக்குமான கெமிஸ்ட்ரி நன்றாக ஒர்க்கவுட் ஆகியுள்ளது. அதேபோல் ஆதியின் தந்தை சாய்குமார், தாய் ஆடா ஷரத் ஆகியோர் போட்டிப் போட்டுக்கொண்டு நடித்துள்ளனர். இவர்களும் தனது அனுபவ நடிப்பை நிறைவாக வெளிப்படுத்தி கதாபாத்திரத்துக்கு உயிர் ஊட்டியுள்ளனர். வழக்கமான நாயகிகளாக வரும் காஷ்மீரா மற்றும் ஷிவானி ஆகியோர் வழக்கமான நடிப்பை வெளிப்படுத்திச் சென்றுள்ளனர்.

 

ngdjfrn

 

உறவாடிக் கெடுக்கும் வில்லனாக நடித்திருக்கும் விதார்த் கிடைக்கும் இடங்களில் எல்லாம் ஸ்கோர் செய்துள்ளார். நடிப்பில் தரமான வில்லத்தனம் காட்டி மிரட்டியுள்ளார். இவரது உடல்மொழியும், வசன உச்சரிப்பும் அதற்கு நன்கு ஒத்துழைப்பு கொடுத்துள்ளது. நண்பனாக வரும் தீனா, போலீசாக வரும் சஞ்சீவ், அடியாளாக வரும் அர்ஜை ஆகியோர் அவரவருக்குக் கொடுத்த வேலையைச் சிறப்பாகச் செய்து கவனம் பெற்றுள்ளனர்.

 

ஹிப்ஹாப் தமிழா ஆதியின் இசை வழக்கம்போல் சத்தமாகக் காதை கிழித்துள்ளது. இவரது பின்னணி இசை என்று சொல்வதை விடப் பின்னணி பாடல்கள் என்று தான் சொல்லவேண்டும். அந்த அளவு பின்னணி இசையில் கூட பாடல்களைத் தான் அதிகம் உபயோகப்படுத்தியுள்ளார். இருப்பினும், பின்னணி இசை பல காட்சிகளைப் பிரமாண்டமாக மாற்றியுள்ளது. மாதேஷ் மாணிக்கம் ஒளிப்பதிவில் கிராமத்து சம்பந்தப்பட்ட காட்சிகள் பிரமாண்டம்.

 

hghfd

 

அட்லீ படப் பாணியில் படம் முழுவதும் பல்வேறு படங்களின் சாயல்கள் தெரிந்தாலும் அவைகளை ரசிக்கும்படி கொடுத்துள்ளார் அட்லீயின் முன்னாள் உதவி இயக்குநரும், இப்படத்தின் இயக்குநருமான அஷ்வின் ராம்.

 

அன்பறிவு - அரச்ச மாவு!

 

 

சார்ந்த செய்திகள்