Skip to main content

தனி ஒருவனாக அணியை தன் தோளில் சுமந்தவர்...

Published on 02/05/2019 | Edited on 02/05/2019

2003-ஆம் ஆண்டு நடந்த ஒரு போட்டியில் ஆஸ்திரேலியா - வெஸ்ட் இண்டீஸ் அணிகள் விளையாடியபோது டீப் மிட் விக்கெட்டில் இருந்த ஃபீல்டரை மாற்றி டீப் பாயிண்டில் நிறுத்தினார் கில்கிறிஸ்ட். இப்போது மொத்தம் டீப் பாயிண்டில் இரு ஃபீல்டர்கள். தவறானது என்று முனுமுனுக்கிறார் பேட்ஸ்மேன். அடுத்த பந்தில் டீப் மிட் விக்கெட் திசையில் சிக்ஸ் பறக்கிறது.

 

lara

 

ஆஃப் சைடில் அடிக்கச் சொல்லி சவால் விடுகிறார் கில்கிறிஸ்ட். தற்போது டீப் பாயிண்டில் ஃபீல்டு செட் செய்யப்பட்ட இரு ஃபீல்டர்களுக்கும் இடையில் இரண்டு அடுத்தடுத்த பவுண்டரிகள் அடிக்கப்படுகிறது. அந்த பேட்ஸ்மேன்தான் லாரா எனும் ஜாம்பவான். நேர்த்தியாக ஃபீல்டர்களுக்கு இடையே பந்தை அடிப்பதில் லாரா ஒரு மேதை.      
 

வெஸ்ட் இண்டீஸ் அணி அடித்த மொத்த ரன்களில் 20% ரன்கள் லாரா அடித்ததுதான். டெஸ்ட் போட்டிகளில் அணி வீரர்கள் எடுத்த மொத்த ரன்களில் 40% ரன்களுக்கு மேல் 20 முறை எடுத்துள்ளார். தான் விளையாடிய காலங்களில் தனி ஒரு வீரராக அணியை தன் தோளில் சுமந்துள்ளார் என்பதை இந்த புள்ளிவிவரங்கள் விவரிக்கின்றன. இன்று லாராவின் பிறந்தநாள். 
 

லாரா குடும்பத்தில் 11 குழந்தைகள் இருந்தனர். லாரா 10-வது குழந்தை. ஆறு வயதாக இருந்தபோது, அவரது தந்தை உள்ளூரில் ஹார்வர்டு பயிற்சியளிப்பு மையத்திற்கு அனுப்பி வைத்தார். சிறு வயதிலிருந்தே பயிற்சியில் ஈடுபட்டதன் மூலம் பேட்டிங் நுட்பத்தை நன்கு அறிந்திருந்தார்.
 

லாராவுக்கு 1989-ஆம் ஆண்டு வெஸ்ட் இண்டீஸ் அணியில் விளையாடும் வாய்ப்பு கிடைத்தது. ஆனால் தந்தை இறந்ததன் காரணமாக அப்போது பங்கேற்க முடியவில்லை. 1990-ல் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு முதல் டெஸ்ட் போட்டியில் விளையாடினார். 
 

டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் முதன்முறையாக 2004-ஆம் ஆண்டு இங்கிலாந்து அணிக்கு எதிராக கேப்டனாக இருந்து 43 பவுண்டரிகள், 4 சிக்ஸர்கள் உட்பட 400* ரன்கள் விளாசினார். அதற்கு முன்பு இங்கிலாந்து அணியுடன் 1994-ஆம் ஆண்டு 375 ரன்கள் எடுத்து அசத்தியுள்ளார். 

 

lara

 

131 டெஸ்ட் போட்டிகளில் 11953 ரன்கள், அதிகபட்சமாக 400* ரன்கள், சராசரி 52.89. 299 ஒருநாள் போட்டிகளில் 10405 ரன்கள், அதிகபட்சமாக 169 ரன்கள், 40.49 சராசரி.   
 

லாரா ஆஸ்திரேலியா, இங்கிலாந்து போன்ற அணிகளுடன் அதிகமாக விளையாடியுள்ளார். ஆனால் அவர் இந்திய அணியுடன் அதிகம் விளையாடாத காரணத்தால் அவரின் சாதனைகள், திறமைகள் இங்கு பெரும்பாலும் அறியப்படாமல் உள்ளது.  
 

சச்சின் விளையாடிய காலகட்டத்தில் சச்சினுக்கு நிகராக மிகச்சிறந்த பேட்ஸ்மேனாக வலம்வந்த லாரா பல இக்கட்டான சூழ்நிலைகளில் அணிக்காக தனி ஒரு வீரராக லோவ் ஆர்டர் பேட்ஸ்மேன்களுடன் அதிகமாக விளையாடியுள்ளார். 
 

பொதுவாக நல்ல திறமை உள்ள வெஸ்ட் இண்டீஸ் வீரர்கள் போதுமான ஆதரவு, அடிப்படை கட்டமைப்பு இல்லாமல் இருந்து வருகின்றனர். இதை கவனத்தில் கொண்டு கிரிக்கெட் வாரியம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என லாரா ஓய்வின் போது வலியுறுத்தியிருந்தார். 
 

லாரா பற்றிய தகவல்கள் 
 

லாராவின் தாயார் புற்றுநோயால் இறந்ததன் காரணமாக பெர்ல் மற்றும் பண்டி லாரா அறக்கட்டளை என்ற பெயரில் ஒரு புற்றுநோய் சிகிச்சை மையம் வைத்துள்ளார்.  
 

மிகச்சிறந்த இடதுகை பேட்ஸ்மேனான லாரா 1993-ஆம் ஆண்டு ஆஸ்திரேலியாவில் சிட்னி மைதானத்தில் முதல் சதமாக 277 ரன்கள் அடித்து அசத்தினார். அதன் நினைவாக தனது குழந்தைக்கு சிட்னி என்ற பெயர் வைத்துள்ளார். 
 

2009-ஆம் ஆண்டு அமெரிக்கா ஜனாதிபதி பராக் ஒபாமா வெஸ்ட் இண்டீஸ் வந்தபோது, நட்சத்திர வீரரான லாராவை சந்தித்தார். லாராவின் திறமையை பாராட்டி "மைக்கேல் ஜோர்டன் ஆஃப் கிரிக்கெட்" என்று பெருமைப்படுத்தினார். 
 

சச்சின் டெண்டுல்கர் லாராவின் நெருங்கிய நண்பர். சச்சின் டெஸ்ட் போட்டிகளில் அதிக ரன்கள் எடுத்த லாராவின் சாதனையை முறியடித்த போது,  சச்சினுக்கு பரிசு வழங்கினார். மேலும் சச்சினின் புகழ்பெற்ற மும்பை உணவகத்தை லாரா திறந்து வைத்தார். "உலகின் சிறந்த வீரர் சச்சின்" என்று லாரா கூறினார். 

 

lara

 

டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் இதுவரை 9 இரட்டை சதம், 2 முச்சதம் அடித்த ஒரே வீரர் என்ற சாதனை படைத்துள்ளார். 
 

டெஸ்ட் விளையாடும் அனைத்து நாடுகளுடனும் சதமடித்துள்ளார்.
 

டெஸ்ட் கிரிக்கெட்டில் ஒரே ஓவரில் அதிகபட்சமாக 28 ரன்கள் எடுத்து கலக்கியுள்ளார். ஒரே ஓவரில் 26 ரன்களும் எடுத்துள்ளார். 
 

சிறந்த கிரிக்கெட் வீரருக்கான விஸ்டன் கிரிக்கெட்டர் விருதை 1995-ஆம் ஆண்டு பெற்றார்.  
 

லாரா பற்றி பிரபலங்களின் கருத்துகள் 

 

ஸ்பின் மற்றும் மீடியம் ஃபாஸ்ட் பவுலிங்கில் லாரா விளையாடுவதை போல வேறு எந்த வீரரின் ஆட்டத்தையும் கண்டதில்லை. – மைக்கல் ஹோல்டிங். 
 

அணியை சோதனை காலங்களில் தனது தோளில் சுமந்து அணிக்கு மிகச்சிறந்த பங்களிப்பை அளித்துள்ளார். – ரிக்கி பாண்டிங்.
 

மிகச்சிறந்த வீரர் என்றும், பவுலிங் செய்ய கடினமான வீரர் லாரா தான் என்றும் முரளிதரன் கூறியுள்ளார். 2001-ஆம் ஆண்டு இலங்கை சுற்றுப்பயணம் மேற்கொண்ட வெஸ்ட் இண்டீஸ் அணியில் லாரா விளையாடிய 6 இன்னிங்ஸ்களில் 688 ரன்கள், சராசரி 114.66.