உளவியல் தன்மை கொண்ட பல்வேறு வகையான தகவல்களைப் பிரபல மனநல மருத்துவர் ராதிகா முருகேசன் நம்மோடு பகிர்ந்து கொள்கிறார். அந்த வகையில் பெற்றோர்கள் குழந்தைகள் உறவினை பற்றி விளக்குகிறார்.
பெற்றோர்கள் குழந்தைகளைப் பற்றி பேச ஆரம்பிக்கும்போதே குற்றங்களை அடுக்கி தான் பேசுகிறார்கள். அப்படி இல்லமால் அவர்கள் போக்கில் பேசி அன்றைய தின அப்டேட்ஸ் கேட்பது, அவர்களின் நண்பர்கள் பற்றி விசாரிப்பது, சோஷியல் மீடியா பற்றி என்று பொதுவாக பேசவேண்டும். என்னிடம் கவுன்சிலிங் வரும் குழந்தைகளிடம் நான் பேசும்போது நன்றாக பேசுவார்கள். ஆனால், அதுவே அவர்களது பெற்றோர்கள் பேசும்போது அந்தளவு ஈடுபாடு காட்டுவதில்லை. அந்த மூன்றாம் மனிதர் மன நல மருத்துவராக தான் இருக்கவேண்டும் என்று இல்லை. ஒரு நல்ல ஆசிரியராகவோ குடும்ப நண்பராகவோ இருக்கலாம்.
இந்த தலைமுறை பழமையும் அன்றி புதுமையும் அன்றி இரண்டும் கலந்த தலைமுறையாக இருக்கிறது. பெற்றோர்களும் தனக்கும் சரி என்று பட்டதையே பிள்ளைகளையும் கடைபிடிக்க சொல்கிறார்கள். அது திருமணத்திலும் சரி டிகிரி படிப்பிலும் சரி. குடும்பத்தில் அனைவரும் என்ஜினீயர் என்றால் தன் பிள்ளையும் அதையே தேர்ந்தெடுக்க வேண்டும் என்றுதான் பார்க்கிறார்கள். அந்தப் பிள்ளைகளும் பெற்றோரிடம் தனக்கு அக்கௌன்டன்ட் ஆகவே விருப்பம் என்று சொல்லவே தயங்குகின்றனர்.
பெற்றோர்கள் தான் ஒரு தலைமுறை முழுக்க கடந்து வந்து எல்லாவற்றையும் பார்த்து வந்ததால் தனக்கு மட்டுமே எல்லாமும் தெரியும் என்ற மனோபாவம் இல்லமால் தங்கள் குழந்தைகளுக்கு ஒன்றும் தெரியாமல் இல்லை; அவர்களுக்கும் தனிப்பட்ட ஆசைகள் இருக்கும் என்று புரிந்து கொள்ள வேண்டும். எந்த ஒரு குறுக்கீடும் இன்றி அவர்கள் பேச வருவதை எந்த ஒரு பரிசீலனையும் செய்யாமல் கேட்க வேண்டும். இன்னொரு பக்கம் குழந்தைகளுக்கும் தன்னுடைய தேவை என்ன, எதிர்கால கனவு, சுய மதிப்பு என்று எதுவும் தெரியாமல் இருக்கிறார்கள். எனவே அவர்கள் சிறு வயதில் தவறவிட்டது, பேரெண்டல் ட்ராமாவால் பாதிக்கப்பட்டது என அத்தனையும் தனக்கு வரும் பார்ட்னர் மூலம் சரி செய்து கொள்ள பார்க்கிறார்கள்.
இது போல தான், இந்தக் கால குழந்தைகள் பள்ளி பருவத்திலேயே தங்களுக்கென்று பார்ட்னர்ஸ் வைத்திருப்பதை நிறைய பார்க்க முடிகிறது. பார்ட்னரும் இவர்களை எதிர்கொள்ள முடியாத முதிர்ச்சி இல்லாத நபராக இருக்குமோது இன்னும் சிக்கல்கள் அதிகமாக ஆகிறது. அன்றைய காலத்தில் காதல் தோல்வி என்பதற்கு வாய்ப்பே மிக குறைவு. தொடர்பு கொண்டு பேசுவது என்பதே எளிதாக நடந்தது இல்லை. இன்றைய தலைமுறை இளைஞர்களுக்கும், குழந்தைகளுக்கும் கைகளிலே போன் இருப்பதால் வாய்ப்பு என்பது அதிகமாக கிடைக்கிறது. ஒரு தோல்வி ஆனாலும் எக்ஸ்பிரிமெண்ட் போல அடுத்து அடுத்து முயற்சி செய்து பார்க்கிறார்கள். இதில் தவறில்லை. ஆனால் ஒரு தவறான ரிலேஷன்ஷிப்பிற்குள் சென்று விட்டால் அதிலிருந்து சரியாக வெளியே வரவும் அதிலிருந்து கற்று கொள்ளவும் தெரிய வேண்டும்.
அதே போல 30 வயது இளைஞர்களுக்கும் கூட ரிலேஷன்ஷிப்பில் வரும் வரை எல்லாம் சரியாக இருக்கிறது. ஆனால், அதுவே திருமணம் ஆகி குடும்பம் என்று உள்ளே வரும்போது அந்த வீட்டு மாமனார் மாமியார் வந்திருக்கும் பெண்ணிற்கு வைக்கும் பாரம்பரிய எதிர்பார்ப்பினால் தான் சிக்கல் வருகிறது. இதுவே விவாகரத்து வரை செல்ல காரணமாக இருக்கிறது. சிரமமாக இருந்தாலும் இதை அந்தப் பெண்ணுடைய கணவனே சரி செய்யவேண்டும்.