உலகத்தில் மிக அதிகமாக இருப்பது மிடில் க்ளாஸ் மக்கள் தான். ஏதாவது ஒரு நிறுவனத்தில் வேலை செய்து, சம்பளம் வாங்கி, என்றாவது ஒரு நாள் அந்த நிறுவனத்தின் உரிமையாளர் அளவுக்கு உயரலாம் என்று கனவு மட்டுமே காண்பவர்கள், அல்லது கனவு காணக்கூடத் தயாராக இல்லாதவர்கள் அனைவரும் மிடில் க்ளாஸ்தான். பொருளியல் ஆதிக்கம் நிறைந்த இந்த உலகில் இந்த ஒப்பீடுகளைத் தவிர்க்க முடியாது. பணியாளருக்கும் ஒரு நிறுவனத்தின் உரிமையாளராக உயர்ந்தவருக்கும், அதாவது மிடில் க்ளாஸுக்கும் வேர்ல்ட் க்ளாஸுக்கும் எண்ண அளவிலேயே உள்ள 10 வேறுபாடுகளை இங்கு பார்க்கலாம்...
- மிடில் க்ளாஸ் மனிதர் ஏற்கனவே உள்ள ஒரு இலக்கை நோக்கி போட்டி போடுவார்... வேர்ல்ட் க்ளாஸ் மனிதரோ தனக்கென ஒரு இலக்கை தானே உருவாக்கி அதை நோக்கி முன்னேறுவார்...
- மிடில் க்ளாஸ் மனிதர் சவால்கள், ஆபத்துகளைத் தவிர்க்கவே விரும்புவார். வேர்ல்ட் க்ளாஸ் மனிதரோ சவால்கள், ஆபத்துகளை நிர்வகிப்பார்கள். ஒரு விஷயத்தை தவிர்த்து ஓடுவதற்கும் அந்த விஷயத்தை நின்று நிர்வகிப்பதற்கும் உள்ள வித்தியாசம் தான் நம்மை வெற்றியாளராகவோ தோல்வியாளராகவோ உருவாக்குகிறது...
- மிடில் க்ளாஸ் மனிதர் எப்போதும் அதிர்ஷ்ட மனநிலையில் இருப்பார். அதாவது உலகின் செல்வம் மிகக் குறைந்தது என்றும் அது யாரேனும் அதிர்ஷ்டமுள்ள ஒருவருக்குத்தான் கிடைக்கும் என்றும் நினைப்பார். வேர்ல்ட் க்ளாஸ் மனிதரோ உலகின் செல்வம் மிகுதியானது, அதை எடுத்துக்கொள்வது நம் கையில்தான் இருக்கிறது என்று நினைப்பார்...
- மிடில் க்ளாஸ் மனிதர் பாதுகாப்பிற்காக வளர்ச்சியை தியாகம் செய்வார், வேர்ல்ட் க்ளாஸ் மனிதரோ வளர்ச்சிக்காக பாதுகாப்பை தியாகம் செய்வார்...
- திடீரென ஒரு பெரிய வேலை செய்ய வேண்டி வந்தால், தான் அதில் மாட்டிக்கொண்டதாக நினைப்பார் மிடில் க்ளாஸ் மனிதர். ஆனால் வேர்ல்ட் க்ளாஸ் மனிதரோ அது தனது பொறுப்பு என்று நினைத்துச் செயல்படுவார்...
- மிடில் க்ளாஸ் மனிதர் பணத்திற்கு தன் நேரத்தையும் உழைப்பையும் விற்பார். ஆனால் வேர்ல்ட் க்ளாஸ் மனிதரோ தனது எண்ணத்தை, புதிய திட்டங்களை பணமாக்குவார்...
- மிடில் க்ளாஸ் மனிதர் உள்ளுணர்வை புறக்கணிப்பார். ஆனால், வேர்ல்ட் க்ளாஸ் மனிதர் தனது உள்ளுணர்வை நம்பி அதில் பயணிப்பார்...
- மிடில் க்ளாஸ் மனிதர் எளிதாக விரக்தியடைந்துவிடுவார், ஆனால் வேர்ல்ட் க்ளாஸ் மனிதரோ தளராமல் செயல்படுவார்...
- தான் கற்றது போதும், தன் வேலைக்கு அதுவே அதிகம் என்று நினைப்பவர் மிடில் க்ளாஸ் மனிதர். மேலும் மேலும் கற்கும் ஆர்வமும் தேடலும் இருப்பவர் வேர்ல்ட் க்ளாஸ் மனிதர்...
- மிடில் க்ளாஸ் மனிதர் வாழ்க்கை முழுவதும் பிற மனிதர்களைக் கண்டு பயப்படுவார். அவர்களால் தனக்கு ஆபத்தோ, அவர்கள் தன்னை ஏமாற்றிவிடுவார்களோ, அவர்கள் தன்னை முந்தி மேலே சென்று விடுவார்களோ என்று சந்தேகப்படுவார். ஆனால், வேர்ல்ட் க்ளாஸ் மனிதரோ ஒவ்வொரு மனிதரையும் அன்பாக, நம்பிக்கையாகப் பார்ப்பார்.
உலகப்புகழ் பெற்ற தன்னம்பிக்கை பேச்சாளர் ஸ்டீவ் ஸீபோல்டு கூறும் இந்த பத்து குணாதிசயங்களில் குறைந்தது எட்டில் நீங்கள் எந்தப் பக்கம் இருக்கிறீர்களோ அந்த வகை தான் நீங்கள். 'நான் ஐந்து இந்தப் பக்கம் ஐந்து அந்தப் பக்கம் இருக்கிறேன். நான் மிடில் க்ளாஸும் வேர்ல்ட் க்ளாஸும் கலந்து செய்த கலவை' என்று சொன்னால், நீங்கள் உங்களையே ஏமாற்றிக் கொள்கிறீர்கள் என்று அர்த்தம். ஆம், நீங்கள் மிடில் க்ளாஸா வேர்ல்ட் க்ளாஸா என்பதை, உங்களை நீங்களே ஏமாற்றிக்கொள்ளாமல், உங்கள் எண்ண ஓட்டம், வாழ்வில் உங்கள் அணுகுமுறை ஆகியவற்றை இங்கு பொருத்திப் பாருங்கள். பின்னர், ஒரு வேளை, நம்மில் பெரும்பாலானோர் போல நீங்களும் மிடில் க்ளாஸாக இருக்கிறீர்கள் என்றால் அவற்றை மாற்றிக் கொண்டு வேர்ல்ட் க்ளாஸாவதை நோக்கி நடைபோடலாம். இல்லையேல் இப்படியே தொடரலாம். சரி, தவறு என்று எதுவுமில்லை, எல்லாம் நம் தேர்வுதான்!