
சென்னை ஆழ்வார்பேட்டையில் மக்கள் நீதி மய்யம் கட்சியின் 8 ஆம் ஆண்டு தொடக்க விழா கூட்டம் நேற்று நடைபெற்றது. இதில் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் கலந்து கொண்டு உரையாற்றினார். அவர் பேசுகையில், ''மக்கள் நீதி மய்யத்தின் குரல் சட்டமன்றத்தில் ஒலிக்கும். எந்த மொழி வேண்டும் எந்த மொழி வேண்டாம் என்பது தமிழனுக்கு தெரியும். ரசிகர்கள் வேறு; வாக்காளர்கள் வேறு என்பதை எனது அனுபவத்தில் தெரிந்து கொண்டேன். 20 ஆண்டுக்கு முன்பே அரசியலுக்கு வந்திருக்க வேண்டும். அப்படியே முன்பே அரசியலுக்கு வந்திருந்தால் நாம் இன்று பேசியிருக்க வேண்டிய இடம் மாறி இருக்கும். வராதது என் தோல்விதான். இந்த ஆண்டு நமது குரல் நாடாளுமன்றத்தில் ஒலிக்கப் போகிறது'' எனப் பேசியிருந்தார்.

இந்நிலையில் 'ரசிகர்கள் வேறு வாக்காளர்கள் வேறா?' என கேள்வி எழுப்பி மக்கள் நீதி மய்யம் கமலஹாசனுக்கு தமிழக வெற்றிக்கழகம் பதிலடி கொடுத்துள்ளது. இது தொடர்பாக தவெகவின் இணை செய்தித் தொடர்பாளர் ரமேஷ் வெளியிட்டுள்ள அறிக்கையில், ''எம்ஜிஆரை போன்று ரசிகர்களை வாக்காளர்களாக மாற்றி விஜய் வெற்றி பெறுவார். ஊழல் கூடாரத்துக்கு எதிராக வீர வசனம் பேசிய கமல் இன்று அதே கூடாரத்தில் சுயநலனுக்காக இருக்கிறார். ஓய்வு காலத்தில் அரசியலுக்கு வந்துவிட்டு பிக் பாஸ் பணிகளை செய்து வந்தால் கமலுக்கு இந்த நிலைமை தான் ஏற்படும். எம்ஜிஆர் வெற்றியை சிவாஜியால் பெற முடியவில்லை. எம்ஜிஆர் போன்று ரசிகர்களை வாக்காளர்களாகவும் விஜய் மாற்றுவார்' என தெரிவித்துள்ளார்.