Skip to main content

அழித்துவிட்டு அருமையை உணர்ந்த சீனா! - சிட்டுக்குருவியின் கதை  

Published on 20/03/2018 | Edited on 21/03/2018

மார்ச் 20 – உலக சிட்டுக்குருவிகள் தினம்

வீட்டுக்குருவி, ஊர்க்குருவி என அழைக்கப்பட்ட சிட்டுக்குருவி இன்று அரிய வகை குருவியாக மறுவி வருகிறது. உலகளவில் பல நாடுகளில் வாழ்ந்த சிட்டுக்குருவி இனம் இன்று அரிய வகை பறவையினமாகி வருகிறது என பறவையியல் அறிஞர்கள் கவலையோடு உலக நாடுகளை வலியுறுத்தி வருகின்றனர்.

 

sparrowசிட்டுக்குருவிகள் காடுகளில் பெரும்பாலும் வாழாது. மனிதர்களோடு மனிதராகத்தான் வாழும். மனிதனின் வாழ்க்கை இயல்பை போல அது தன் இயல்பை மாற்றிக்கொள்ளும். அதன் ஆயுள்காலம் 13 ஆண்டு காலமாகும். வைக்கோலால் தான் அது தனது வீட்டை கட்டும். சூரிய உதயத்துக்கு முன்பே தனது கீச் குரல்களால் வீட்டில் உள்ளவர்களை எழுப்பும். அதே போல் சூரியன் மேற்கே மறையும்போது தன் கூட்டுக்கு சிட்டுக்குருவி வந்துவிடும். இந்தியாவில் டெல்லி அரசின் மாநில பறவையிது.

20 ஆண்டுகளுக்கு முன்பு நம் வீட்டில் ஒரு அங்கத்தினராய் சிட்டுக்குருவி கூடு கட்டி வாழும். கீச், கீச் என்கிற அதன் சத்தமே  இனிமையானது. அந்த சத்தத்தை இன்றைய தலைமுறை கேட்காமலே வளர்கிறது. அதுமட்டுமல்ல விவசாயிகளின் நண்பனாகவும் இருந்தது சிட்டுக்குருவி. வயல்வெளிகளில் பயிர்களில் உள்ள பூச்சிகளே அதன் உணவுகளாக இருந்தன. அந்த சிட்டுக்குருவி இனம் தற்போது உலகளவில் குறைந்துவிட்டது.

அந்த இனம் அழிவதற்குக் காரணம், ஜன்னல் வைக்காத வீடுகள், கான்கிரீட் கட்டிடங்கள், நிலங்களில் ரசாயனம் தெளிப்பது, டெக்னாலஜி வளர்ச்சி போன்றவை. இதனால் வெகுவாக அழிந்துவிட்ட அந்த இனத்தை காக்க வேண்டும் என பறவையியல் அறிஞர்கள் ஒன்று கூடி சிட்டுக்குருவிகளுக்காக ஒரு தினத்தை உருவாக்க வேண்டுமென விவாதித்தார்கள்.

உலக அளவில் பிரபலமான சுற்றுச்சூழல் ஆர்வலரான முகமது திலாவர் என்பவர் தான் சிட்டுக்குருவி இனத்தை காக்க விழிப்புணர்வு பணியில் குதித்ததோடு, சிட்டுக்குருவியை வளர்க்க பெரிய அளவில் முயற்சி எடுத்தார். சிட்டுக்குருவி அழிந்து வரும் இனம் என ஐ.நாவை அறிவிக்க வைத்ததில் முக்கிய பங்கு இவருடையது. 2009ல் அறிஞர்கள் ஒன்றுக்கூடி ஒவ்வொரு ஆண்டும் மார்ச் மாதம் 20ந்தேதி சிட்டுக்குருவி தினமாக அறிவித்து சிட்டுக்குருவியை பாதுகாக்க விழிப்புணர்வு ஏற்படுத்துவது என முடிவு செய்தார்கள். அதன்படி 2010ல் இருந்து செய்தும் வருகிறார்கள். இந்த விழிப்புணர்வு பணியில் அரசு 98 சதவிதம் கவனம் செலுத்தவில்லை என்பது இங்கு கவனிக்கதக்கது.

 

sparrow dayசீனாவில் ஆட்சிக்கு வந்த மாவோ, விவசாய நிலங்களை அழிக்கும் பறவை இனங்கள் எதுயென கண்டறிந்து கொன்றுவிடுங்கள் என தனது அரசு அலுவலர்களுக்கு உத்தரவிட்டார். அவர் போட்ட உத்தரவால் சீனாவில் அதிகம் பாதிக்கப்பட்டது சிட்டுக்குருவி. பின், காலம் கடந்து அது தவறென தெரிந்து, சிட்டுக்குருவி விவசாயிகளின் நண்பன் என்பதை உணர்ந்து அதனை அழிப்பதை சீனா நிறுத்தியது.

உலகளவில் ஏற்கனவே பறவையினங்களில் மைனா, பருந்து, ஆந்தை, மயில் போன்றவை அழிந்து வரும் பறவையினங்கள் பட்டியலில் உள்ளது. தற்போது சிட்டுக்குருவியையும் இடம் பிடிக்க வைத்துள்ளோம்.

ஏய் குருவி, சிட்டுக்குருவி என்கிற பாடல் வழியாகத்தான் வருங்கால தலைமுறை சிட்டுக்குருவியை கேட்டும், புகைப்படமாக பார்த்து வளர வேண்டிய கட்டாயத்தில் நாம் இந்த உலகை மாற்றியுள்ளோம் என்பதை நினைத்து வெட்கப்படவேண்டும். சிட்டுக்குருவி இனத்தை பெருக்க சில தனியார் அமைப்புகள் உலகம் முழுவதும் அதனை வளர்க்கவும், பாதுகாக்கும் பணியில் கிராம மக்களை ஈடுப்படுத்தி வருகிறார்கள் என்பது பாராட்டுதலுக்குரியது. முடிந்தால் நாமும் சிட்டுக்குருவி நம் வீட்டு முற்றத்தில் கூடு கட்டினால் அதனை அகற்றாமல் வாழ வழிச்செய்வோம்.  

 

Next Story

சாமி படத்திற்கு போட்ட அகல் விளக்கு; குடிசைகள் எரிந்து நாசம்

Published on 26/06/2024 | Edited on 26/06/2024
Akal lamp for Sami photo; The huts were destroyed by fire

குடிசை வீட்டில் சாமி படத்திற்கு முன் ஏற்றப்பட்ட அகல் விளக்கிலிருந்து தீ பரவி 2 குடிசை வீடுகள் எரிந்து நாசமான சம்பவம் ஈரோட்டில்  பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஈரோடு மாவட்டம் நம்பியூர் அருகே காந்திபுரத்தில் இன்று நள்ளிரவில் 2 குடிசை வீடுகள் திடீரென தீப்பிடித்து எரிந்தது. இதனைக் கண்டு அதிர்ச்சியடைந்த அக்கம்பக்கத்தினர் இதுகுறித்து உடனடியாக நம்பியூர் தீயணைப்புத்துறைக்கு தகவல் கொடுத்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்புத் துறையினர் தண்ணீரை பீய்ச்சியடித்து நீண்ட போராட்டத்திற்கு பிறகு தீயை அணைத்தனர். எனினும் இந்த தீவிபத்தில் இரண்டு குடிசைகளும் முற்றிலும் எரிந்து சேதமடைந்தன.  

இதுகுறித்து நம்பியூர் போலீசார் விசாரணை நடத்தியதில் காந்திபுரம் மேடு பகுதியில், கண்ணையன் (65) என்பவர் தனது குடிசையில் சாமி படத்தின் முன்பு அகல் விளக்கில் தீபம் போட்டுள்ளார். அது காற்றின் வேகத்தால் தீப்பிடித்து விபத்து ஏற்பட்டுள்ளது. இவர் வீடு அருகே அங்கமுத்து (77) என்பவர் குடிசை வீடு உள்ளதால் இந்த தீ விபத்தில் அவர் வீடும் முற்றிலும் எரிந்து சேதமடைந்தது. தீ விபத்து நடந்த போது கண்ணையன் மற்றும் அங்கமுத்து ஆகியோர் அவரவர் வீட்டில் இருந்தனர். தீ விபத்து நடந்ததும் அவர்கள் குடிசையை விட்டு வெளியே வந்ததால் அதிர்ஷ்டவசமாக உயிர்த்தப்பினர். எனினும் இந்த விபத்தில் இருசக்கர வாகனம், தள்ளுவண்டி, துணிகள், மரக்கட்டில்கள், மிதிவண்டி ஆகிவையும் எரிந்து சேதமானது. இதுகுறித்து நம்பியூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story

'இனப்படுகொலையின் கொடூர செயல்'-தண்டிக்கப்படுமா இஸ்ரேல்?

Published on 30/05/2024 | Edited on 30/05/2024
"Heinous Act of Genocide"

காசாவில் போர் தொடங்கி 237 நாட்கள் கடந்தும், இஸ்ரேல் தாக்குதலை தீவிரப்படுத்தி வரும் சூழலில், ரஃபா பகுதியில் கடந்த ஞாயிற்றுக்கிழமை (26.05.2024) புலம்பெயர்ந்த பாலஸ்தீனியர்கள் தங்கியிருந்த கூடாரங்கள் மீது இஸ்ரேல் நிகழ்த்திய கொடூர தாக்குதலில் 40க்கும் அதிகமான அப்பாவி மக்கள் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். மேலும், 200க்கும் அதிகமானோர் படுகாயங்களுடன் சிகிச்சை பெற்று வருகின்றனர். இத்தாக்குதலுக்கு சர்வதேச அளவில் கடும் கண்டனங்கள் எழுந்துள்ளன. அதேவேளையில், பாலஸ்தீனத்திற்கான ஆதரவும் வலுத்து வருகின்றன.

என்ன நடக்கிறது ரஃபாவில்?


கடந்தாண்டு அக்டோபர் 7ஆம் தேதி இஸ்ரேல் மீது ஹமாஸ் நடத்திய தாக்குதலில் 1,139 இஸ்ரேலியர்கள் கொல்லப்பட்டனர். அதற்குப் பதிலடியாக காசாவில் தாக்குதல் நடத்தி வரும் இஸ்ரேல் ராணுவம், ஹமாஸ் அமைப்பை அழிக்கும் வரை இந்தப் போர் தொடரும் என அறிவித்துள்ளது. காசாவில் இதுவரை 15,000க்கும் அதிகமான குழந்தைகள் உட்பட 36,000க்கும் அதிகமான பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டுள்ளனர். மேலும், 81,000க்கும் அதிகமானோர் படுகாயமடைந்துள்ளனர். இதுவரை 10,000க்கும் அதிகமான பாலஸ்தீனியர்கள் குறித்து எந்தத் தகவலும் இல்லை எனப் பாலஸ்தீன சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

"Heinous Act of Genocide"

காசாவின் ரஃபா நகரில் தாக்குதலை உடனடியாக நிறுத்துமாறு ஐ.நா.வின் சர்வதேச நீதிமன்றம் கடந்த வெள்ளிக்கிழமை (24.05.2024) அன்று இஸ்ரேலுக்கு உத்தரவு பிறப்பித்து இருந்தது. பணயக்கைதிகளின் நிலை குறித்து மிகுந்த கவலை கொள்வதாகத் தெரிவித்த நீதிமன்றம், அவர்களை உடனடியாக நிபந்தனையின்றி விடுவிக்க வலியுறுத்தியது. ஆனால், அந்த உத்தரவு வெளியான சில மணி நேரங்களில் இஸ்ரேல் காசா மீதான வான்வழித் தாக்குதலை தீவிரப்படுத்தியது. அதன் தொடர்ச்சியாக, இஸ்ரேல் தலைநகரமான டெல் அவிவ் மீது மிகப்பெரிய ஏவுகணைத் தாக்குதல் நடத்தியதாக ஹமாஸ் அமைப்பின் அல்-கஸ்ஸாம் ஆயுதப்படை பிரிவு தெரிவித்தது. அதைத் தொடர்ந்து காசாவின் ரஃபா நகரின் புலம்பெயர்ந்தோர் முகாம் மீது இஸ்ரேல் கொடூர தாக்குதலை நடத்தியது. இத்தாக்குதலில், ஹமாஸ் அமைப்பின் இரண்டு முக்கிய தளபதிகள் கொல்லப்பட்டதாக இஸ்ரேல் ராணுவம் தெரிவித்துள்ளது. ஆனால், அதனை ஹமாஸ் மறுத்துள்ளது. இந்தத் தாக்குதலில் இறந்தவர்களில் பெரும்பாலானோர் குழந்தைகள் மற்றும் பெண்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

இஸ்ரேலின் விளக்கம் – அமெரிக்கா என்ன சொல்கிறது?"இந்தத் தாக்குதல் மோசமான துயர நிகழ்வு" எனத் தெரிவித்தார் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு. போரில் தொடர்பில்லாத மக்களை பாதுகாப்பதற்கு தேவையான முயற்சிகளை எடுத்துள்ளதாக கூறிய அவர், "இலக்குகளை அடையும் வரை போரை முடிவுக்கு கொண்டு வரும் எண்ணம் இல்லை" எனத் திட்டவட்டமாக தெரிவித்தார்.

"Heinous Act of Genocide" -

"காசாவின் கொடூர மோதலில் இருந்து தங்களைக் காத்துக் கொள்ளும் வகையில் தஞ்சம் புகுந்த அப்பாவி மக்களின் உயிரை பலி வாங்கிய இஸ்ரேலின் இந்தத் தாக்குதல் நடவடிக்கையை நான் கடுமையாக கண்டிக்கிறேன்; காசாவில் பாதுகாப்பான இடம் ஏதும் இல்லை; இந்தக் கொடூரம் நிறுத்தப்பட வேண்டும்" என ஐ.நா. பொதுச்செயலாளர் அன்டோனியோ குட்டரெஸ் வலியுறுத்தினார்.

இஸ்ரேலின் கொடூரத் தாக்குதலை கண்டித்து சர்வதேச அளவில் போராட்டங்கள் வெடித்துள்ளன. பிரான்ஸ், ஸ்பெயின், மெக்சிகோ, ஜோர்டான், கத்தார், பிரிட்டன் உள்ளிட்ட நாடுகளில் பாலஸ்தீன ஆதரவாளர்கள் போராட்டம் மற்றும் பேரணி நடத்தி வருகின்றனர்.

 

Palestine


காசாவின் ரஃபா பகுதியில் இஸ்ரேல் நடத்தி வரும் தாக்குதலுக்கு மே முதல் வாரங்களில் அமெரிக்கா கடும் அதிருப்தி தெரிவித்தது. ரஃபா மீது தாக்குதல் தொடர்ந்தால் இஸ்ரேலுக்கு ஆயுதம் வழங்குவதை அமெரிக்கா மட்டுப்படுத்தும் என அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தெரிவித்தார். நேற்று செய்தியாளர்களைச் சந்தித்த அமெரிக்க பாதுகாப்பு செய்தித் தொடர்பாளர் ஜான் கிர்பி, “ரஃபா தாக்குதல் இதயத்தை நொறுக்குவதாகவும், பயங்கரமாக இருப்பதாகவும் தெரிவித்தார். அதைத் தொடர்ந்து பேசிய கிர்பி, ரஃபாவில் இஸ்ரேல் முழு அளவிலான படையெடுப்பை தொடங்கவில்லை என நம்புகிறோம்” என்றார். "கொள்கையில் மாற்றம் கொண்டு வருவதற்கு இன்னும் எத்தனை எரிந்த சடலங்களை அதிபர் பார்க்க வேண்டும்" என்ற பத்திரிகையாளர் ஒருவரின் காட்டமான கேள்விக்கு, "அப்பாவி மக்களின் உயிர்களை பறிப்பதை நாங்கள் விரும்பவில்லை" என ஜான் கிர்பி தெரிவித்தார்.

போர்நிறுத்தம் கோரும் உலக நாடுகள்!

ரஃபாவில் இஸ்ரேல் நடத்திய தாக்குதலை கத்தார் கடுமையாக கண்டித்துள்ளது. இந்தத் தாக்குதல் போர்நிறுத்த பேச்சுவார்த்தையை சீர்குலைப்பதாக தெரிவித்துள்ளது. சர்வதேச நீதிமன்றத்தின் தீர்ப்புபடி, இனப்படுகொலை தடுப்பதற்கு ரஃபா மீதான இஸ்ரேலின் தாக்குதலை நிறுத்த வலியுறுத்துமாறு உலக நாடுகளுக்கு கத்தார் அழைப்பு விடுத்துள்ளது. மேலும், நியாயமான பாலஸ்தீன நோக்கம், பாலஸ்தீனியர்களின் நியாயமான உரிமைகள், சுதந்திர பாலஸ்தீன அரசை நிறுவுதல் உள்ளிட்ட தனது உறுதியான நிலைப்பாட்டை கத்தார் மீண்டும் தெளிவுபடுத்தியுள்ளது.

"ரஃபாவில் தாக்குதல்களை நிறுத்துமாறு சர்வதேச நீதிமன்றம் வழங்கிய உத்தரவை இஸ்ரேல் மதிக்க வேண்டும்" என ஐரோப்பிய யூனியன் வலியுறுத்தியுள்ளது. "காசாவில் இருந்து வெளியாகும் காட்சிகள் இதயத்தை நொறுக்குகிறது. அங்கு பாதுகாப்பான இடம் என்று எதுவும் இல்லை. அப்பாவி மக்கள் கொல்லப்படுவதை எந்த வகையிலும் ஏற்றுக்கொள்ள முடியாது. உடனடி போர் நிறுத்தம் வேண்டும்" எனக் கனடா வெளியுறவுத்துறை அமைச்சர் மெலனி ஜோலி கூறியுள்ளார்.

Palestine


இந்தத் தாக்குதல் "பாலத்தீன மக்களுக்கு எதிரான இனப்படுகொலையின் கொடூர செயல்" என இஸ்லாமிய ஒத்துழைப்பு கூட்டமைப்பு நாடுகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன. "இந்த தாக்குதலுக்குக் காரணமானவர்கள் சர்வதேச குற்றவியல் சட்டத்தின் கீழ் தண்டிக்கப்பட வேண்டும். இஸ்ரேலிய ஆக்கிரமிப்பை உடனடியாக நிறுத்த சர்வதேச நீதிமன்றத்தின் உத்தரவுகளை செயல்படுத்த ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு கவுன்சில் தனது பொறுப்பை நிறைவேற்ற வேண்டும்" என அந்த அமைப்பு வலியுறுத்தியுள்ளது.

காசா மீதான இஸ்ரேலிய நடவடிக்கையை நிறுத்துமாறு சவுதி அரேபியாவும் நார்வேயும் இணைந்து வலியுறுத்தியுள்ளன. "பாலத்தீனம் இல்லாமல் இஸ்ரேலின் இருப்பு சாத்தியமில்லை என்பதை இஸ்ரேல் ஏற்றுக்கொள்வது மிகவும் முக்கியமானது; சர்வதேச சமூகத்துடன் இணைந்து செயல்படுவதே நலன் பயக்கும் என்பதை இஸ்ரேலிய தலைமை புரிந்துகொள்ளும் என்று நாங்கள் நம்புகிறோம்" எனச் சவுதி  அரேபியா கூறியுள்ளது.

"Heinous Act of Genocide"


"ஐ.நா.-வின் ஆன்மா காசாவில் மாண்டுவிட்டது; தனது சொந்த ஊழியர்களைக் கூட அதனால் பாதுகாக்க முடியவில்லை; இன்னும் என்ன நடக்க வேண்டுமென காத்துக் கொண்டு இருக்கிறீர்கள்; இஸ்லாமிய உலகுக்கும் நான் ஒன்றை சொல்லிக் கொள்ள விரும்புகிறேன்; என்ன பொதுவான முடிவை எடுக்க நீங்கள் காத்திருக்கிறீர்கள்? காசாவில் இஸ்ரேல் இனப்படுகொலை செய்துவருகிறது; இஸ்ரேல் காசாவுக்கு மட்டுமல்ல, ஒட்டுமொத்த மனிதக்குலத்துக்கும் அச்சுறுத்தலாக இருக்கிறது; இஸ்ரேல் சர்வதேச சட்டங்களைப் பின்பற்றாத வரையிலும், அதற்குக் கட்டுப்படாத வரையிலும் எந்தவொரு நாடும் பாதுகாப்பாக இருக்க முடியாது" எனத் துருக்கி அதிபர் ரெசெப் தையிப் எர்டோகன் கூறியுள்ளார்.

என்று நிகழும் போர் நிறுத்தம்?

"Heinous Act of Genocide"-Will Israel be punished?

 

காசாவில் போர் தொடங்கிய சில காலங்களிலேயே அங்குள்ள அனைத்து மருத்துவமனைகளும் முற்றிலுமாக நிறைந்து வழியத் தொடங்கிவிட்டன. அதிலும் துயரமான விஷயம் என்னவென்றால், அந்த மருத்துவமனைகளும் இஸ்ரேலின் இலக்குகளில் இருந்து தப்பவில்லை. அல்-அஹ்லி, அல்-ஷிஃபா, அல்-நசீர் எனத் தாக்குதலுக்கு இலக்கான மருத்துவமனைகள் பட்டியல் நீண்டுக் கொண்டே இருக்கின்றன. கடந்த ஏப்ரல் மாதம் அல்-நசீர் மருத்துவமனை பகுதியில் 200க்கும் அதிகமான உடல்கள் கண்டெடுக்கப்பட்டன. காசாவில் பாதுகாப்பான பகுதி என்று எதுவும் இல்லை என்பதே நிதர்சனமான உண்மையாக இருக்கிறது. உணவு, குடிநீர் என எதுவும் கிடைக்காமல் மிக மோசமான சுகாதார பிரச்சனையையும் காசா மக்கள் எதிர்கொண்டு வருகின்றனர். எங்கு குண்டு விழும் என்று தெரியாத சூழலில், உறவுகளையும், உடமைகளை இழந்து அழுவதற்கு கூட திராணி இல்லாத நிலையில்தான் காசாவாசிகள் இருக்கின்றனர். தூக்கமில்லாத குழந்தைகளின் கண்கள் மரணத்தை எதிர்நோக்கி ஓய்ந்து கிடக்கின்றன. எதுவும் அறியாத அப்பாவி குழந்தைகளும், பாலஸ்தீனியர்களும் போர் நிறுத்தத்தை எதிர்நோக்கி காத்திருக்கின்றனர். உலக நாடுகள் எதிர்பார்ப்பதும் "காசாவில் நிரந்தர போர் நிறுத்தம் வேண்டும்!"