1. ரோமம் முதல் தோல் வரை!
“இந்தத் தோட்டத்தில் நீங்கள் எங்கு வேண்டுமானாலும் போகலாம். எதை வேண்டுமானாலும் சாப்பிடலாம். ஆனால், அந்த ஆப்பிள் பழத்தை மட்டும் தொடவே கூடாது” - ஆதாம் ஏவாளிடம் கூறினாராம் கடவுள். ஆனால், கடவுளின் வார்த்தையை மீறி அந்த ஆப்பிளை சாப்பிட்டாள் ஏவாள். ஆதாம் சாப்பிடுவதை தடுத்துவிட்டார் கடவுள். கடவுளின் வார்த்தையை மீறி அந்த ஆப்பிளைத் தின்றதால் ஏவாளுக்கு வெட்கம் வந்தது. அவள் தனது நிர்வாண உடலை இலை தழைகளைக் கொண்டு மறைக்க முயன்றாள் என்பது பைபிள் கதை.
ஏழே நாளில் உலகையும், சமுத்திரத்தையும், தாவரங்களையும், உயிரினங்களையும் கடவுள் படைத்ததாக பைபிள் கூறுகிறது. ஆனால், அறிவியல் அதை மறுத்து, நிரூபித்து விட்டது. பைபிள் கதைப்படி, உலகம் தோன்றி 10 ஆயிரம் ஆண்டுகள் மட்டுமே ஆகிறது. ஆனால், நமது சூரிய மண்டலத்தின் வயது 460 கோடி ஆண்டுகள் என்கிறது அறிவியல். நாம் வாழும் பூமி இப்போதுள்ள வடிவம் பெறுவதற்கு முன் எத்தனையோ மாறுதல்களைச் சந்தித்துள்ளது. ஓருயிரி முதல் ராட்சத விலங்குகள் வரை இங்கு உருவாகி உலவியிருக்கின்றன. லட்சக்கணக்கான ஆண்டுகள் பரிணாமவளர்ச்சியில், குரங்கு இனத்தின் மரபணு சற்று சிதைந்ததால் மனித இனம் தோன்றியது என விஞ்ஞானிகள் கூறுகின்றனர்...
உடையின் கதை என்று கூறிவிட்டு, இதென்ன இடைச் செருகல்? என்று நீங்கள் நினைக்கக் கூடும். கதையின் பூர்வீகத்துக்கு தக்கபடிதானே பீடிகையும் இருக்கும். கோடிக்கணக்கான ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த உயிரினங்களின் படிமங்கள் கூட கிடைத்திருக்கின்றன. ஆனால், மனிதன் அணிந்த உடைகள் எதுவும் படிமங்களாக கிடைக்கவில்லை. அப்படியே கிடைத்தாலும் அவை சில ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய உடைகளின் படிமங்களாக மட்டுமே இருக்கின்றன. எனவே, மனிதன் எப்போது உடை அணியத் தொடங்கினான் என்பது, மானுடவியல் நிபுணர்களுக்கு விடை தெரியாத புதிராகவே நீடிக்கிறது.
ஆனால், மனித இனத்துக்கு ரோமம்தான் முதல் ஆடை. பரிணாம வளர்ச்சியில் ரோமம் உதிரத் தொடங்கியதும் தனது அடையாளம் மறைந்துவிட்டதாக அவன் உணர்ந்திருக்கக் கூடும். அல்லது, தனது உடலின் வெப்பத்தைப் பாதுகாக்க அவன் உடையைத் தேடியிருக்க வேண்டும். தொடக்கத்தில் விலங்குகளின் தோலை உடையாக பயன்படுத்துவதற்கு முன்பே, தனக்கென ஒரு அடையாளத்தை மனிதன் விரும்பினான். எனவேதான், தனது உடலில் அப்போதைக்குக் கிடைத்த சாயங்களை பூசியும், பச்சை குத்தியும் தன்னை அடையாளப்படுத்தினான்.
நெய்யப்படாத உடைகளைப் பயன்படுத்தத் தொடங்கிய பிறகும், அவற்றைப் பயன்படுத்துவதில் வித்தியாசத்தை வெளிப்படுத்தினான். அப்போதே ஃபேஷன் தொடங்கிவிட்டதாக மானுடவியல் நிபுணர்கள் கூறுகின்றனர். இப்போதும்கூட, அணிகிற உடை ஒருவரின் சமூக அந்தஸ்தை வெளிப்படுத்துவதாகவே அமைகிறது. எல்லாக் காலகட்டத்திலும் குறிப்பிட்ட சமூகப் பிரிவுகள் ஒரே மாதிரியான உடையை தேர்வு செய்திருக்கின்றன. அந்த உடை தங்கள் சமூகத்தின் பாரம்பரியத்தை அடையாளப்படுத்துவதாக அவர்கள் கருதினர்.
சிம்பன்ஸி - போனோபோஸ்
விலங்குகளின் தோல், விலங்குகளின் மயிர், சணல், மரப்பட்டை நார் என மனிதனின் உடைகள் பலவாறாக மாறி மாறி வந்திருக்கிறது. முடிச்சுகள், பின்னல்கள், சடையாக திரிப்பது என அவர்கள் உடைகளை வடிவமைத்து வந்திருக்கின்றனர். இப்போதுள்ள உடை வடிவமைப்பு முறைக்கு பின்னே, பல்லாயிரக்கணக்கான ஆண்டு சரித்திரம் இருக்கிறது. அந்தச் சரித்திரம் பிரமிப்பூட்டக் கூடியது. அந்த பிரமிப்பை அனுபவிக்க வேண்டுமென்றால், சற்று பின்னோக்கி சறுக்கிச் செல்ல வேண்டியது அவசியம்.
80 லட்சம் முதல் 1 கோடி ஆண்டுகளுக்கு முன் ஆப்பிரிக்காவில் ஒருவகை குள்ள மனிதக்குரங்கு இனம் இருந்தது. அந்த குரங்கு இனம் 60 லட்சம் ஆண்டுகளுக்கு முன் மறைந்தது. அதிலிருந்து இரண்டு வகை குரங்கு இனம் உருவானது. போனோபோஸ், சிம்பன்ஸி என்ற அந்த இரண்டு வகை குரங்கு இனத்தில், சிம்பன்ஸி இனத்தின் மரபணுத் தொகுதி மனித மரபணுத் தொகுதிக்கு இணையாக இருக்கிறது. அப்படியானால், சிம்பன்ஸிதான் நமது மூதாதையரா? இல்லை. சிம்பன்ஸியும் நமது மூதாதையரும் ஒரேவகை பொது குரங்கு இனத்திலிருந்து உருவானவர்கள் என்று வேண்டுமானால் கூறலாம்.
“சூ மந்திரகாளி” என்று மந்திரம் போட்டவுடன் ஒரே நாளில் இன்றைக்கு இருக்கிற மனித இனம் உருவாகிவிடவில்லை. கடந்த ஒரு கோடி ஆண்டுகளில் எத்தனையோ படி நிலைகளைத் தாண்டித்தான் இப்போதைய மனித இனம் உருவாகி இருக்கிறது. பல விதமான குரங்கு இனங்களைப் போல மனித இனம் ஒவ்வொரு காலகட்டத்திலும் முதிர்ச்சி அடைந்து முன்னேறிய நிலைக்கு உயர்ந்திருக்கிறது.
சுமார் 60 லட்சம் முதல் 45 லட்சம் வரையான ஆண்டுகளுக்கு இடைப்பட்ட காலத்தில் ஆப்பிரிக்காவில் மனித இனம் தோன்றியது. அந்த இனம் மனிதனுக்கு உரிய புத்திசாலித்தனம் ஏதும் இல்லாமல் வனத்தில் உலவியது. அந்த இனத்திலிருந்து சற்று முதிர்ச்சி அடைந்த மனித இனம் 40 லட்சம் முதல் 20 லட்சம் ஆண்டுகளுக்கு இடைப்பட்ட காலத்தில் ஆப்பிரிக்காவில் உருவானது. அந்த இனத்துக்கு ஆஸ்ட்ராலோபிதிகஸ் என்று மானுடவியலாளர்கள் பெயரிட்டுள்ளனர். இந்த இனத்தைச் சேர்ந்த மனிதர்கள் இரண்டு கால்களில் நடந்தனர். தங்களுடைய உயரத்துக்கு சமமான குரங்குகளை விட, பெரிய அளவிலான மூளையைப் பெற்றிருந்தனர். தாவரங்களை மட்டுமே உணவாகக் கொண்டனர். இந்த இனத்தைச் சேர்ந்த மனித இனத்தின் முழுமையான எலும்புக்கூடு ஒன்று, 1974ல் எத்தியோப்பியாவில் கிடைத்தது. இந்த எலும்புக்கூடுக்கு லூஸி என்று பெயரிட்டுள்ளனர்.
ஹோமோ ஹாபிலிஸ் - ஹோமோ ஸாபியென்ஸ் ஸாபியென்ஸ்
20 லட்சம் ஆண்டுகள் வாக்கில் முதல் புத்திசாலித்தனமான மனித இனம் தோன்றியது. ஹோமோ ஹாபிலிஸ் என்று பெயரிடப்பட்ட அந்த மனிதர்கள் விலங்குகளை வேட்டையாட ஆயுதங்களைத் தயாரித்தனர். தாவர உணவுடன் வேட்டையாடிய விலங்குகளின் மாமிசத்தையும் இவர்கள் சாப்பிட்டனர். ஹோமோ ஹாபிலிஸ் இனத்திலிருந்து உருவான புதிய மனித இனம் ஹோமோ எரெக்டஸ் என்று அழைக்கப்படுகிறது. இந்த இனம் 18 லட்சம் ஆண்டுகள் வாக்கில் தொடங்கி, 2 லட்சம் ஆண்டுகள் வரை பூமியில் வாழ்ந்தது. இந்த இனம் பெரிய மூளையைப் பெற்றிருந்தது. பிரமாண்டமான விலங்குகளை வேட்டையாடவும், நெருப்பை உருவாக்கவும், இவர்களுக்குத் தெரிந்திருந்தது. ஆப்பிரிக்காவிலிருந்து இவர்கள்தான் முதன்முறையாக குளிர்நிறைந்த வடபகுதிக்கும் வெப்பம் மிகுந்த யுரேஸியாவின் பாகங்களுக்கும் பரவினர்.
சுமாராக 5 லட்சம் ஆண்டுகளுக்கு முன்தான், நமது சொந்த இனத்தின் மூதாதையரான ஹோமோ ஸாபியென்ஸ் இனம் தோன்றியது. இவர்களில் இருந்து சற்று முன்னேறிய ஹோமோ ஸாபியென்ஸ் நியாண்டர்தால் இன மக்கள் 2 லட்சத்து 50 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் உருவாகினர். இந்த காலகட்டம்தான் மனித நாகரிக வளர்ச்சியில் மிக முக்கியமானது. ஆம். மனித இனம் அதுவரை உடல் முழுவதும் அடர்ந்த ரோமத்தைப் பெற்றிருந்தது. வடக்கு நோக்கிய நகர்வில், குளிர் காரணமாகவும் ஹார்மோன்களில் ஏற்பட்ட மாற்றங்கள் காரணமாகவும் நியாண்டர்தால் மனிதர்கள் ரோமத்தை இழக்கத் தொடங்கினர்.
இதையடுத்து, அவர்கள் குளிரிலிருந்து தங்களைப் பாதுகாக்க, வேட்டையாடிய விலங்குகளின் தோலைப் போர்வையாக பயன்படுத்தினர். கற்களாலும் கட்டைகளாலும் ஆயுதங்களைச் செய்ய பழகியிருந்தனர். இவர்கள்தான் இறந்த உடலை புதைக்கத் தொடங்கியவர்கள். ஒரு லட்சம் ஆண்டுகளுக்கு முன்பே இறந்த உடல்களை இவர்கள் புதைத்தனர்.
உடல்ரீதியாக நல்ல பலத்துடனும் மிகச்சிறந்த வேட்டைக்காரர்களாகவும் இருந்தனர். 30 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் இவர்களுடைய இனம் அழியத் தொடங்கியது. இவர்களுடைய அழிவுக்கு நவீன மனித இனத்தின் வருகையே காரணமாக அமைந்தது. ஹோமோ ஸாபியென்ஸ் ஸாபியென்ஸ் என்ற இந்த புதிய இனம்தான் தற்போதைய மனித இனத்தின் மூதாதையர்கள். புதிய மனித இனம் தோன்றும் போதெல்லாம் ஏற்கெனவே இருந்த மனித இனம் அழிக்கப்பட்டு வந்திருக்கிறது. நாகரிகத்தில் அல்லது புத்திசாலித்தனத்தில் முன்னேறிய இனம், பின்தங்கிய இனத்தை அழித்தே வந்திருக்கிறது.
இந்த புதிய ஹோமோ ஸாபியென்ஸ் ஸாபியென்ஸ் மனித இனம் ஐரோப்பாவில் வசித்த க்ரோமக்னான் இனத்தின் பிரதிநிதிகளாக உருவானவர்கள். இவர்கள் திடீரென்று ஒரே நாளில் உருவாகிவிடவில்லை. ஒரு லட்சம் ஆண்டுகளுக்கு முன்பே வளர்ச்சி பெறத் தொடங்கினார்கள். கி.மு.32 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் இவர்கள் ஐரோப்பாவுக்குள் நுழைந்து, நியாண்டர்தால் மனிதர்களை அழித்து ஐரோப்பாவை ஆதிக்கம் செலுத்த தொடங்கினர். யுத்தத்திலோ, கலப்புத் திருமணம் செய்தோ நியாண்டர்தால் மனித இனத்தை இவர்கள் ஒழித்துக் கட்டியிருக்கலாம் என்றும் கூறப்படுகிறது.
ஹோமோ ஸாபியென்ஸ் ஸாபியென்ஸ் இனத்தினர்தான் கலை, வழிபாடு ஆகியவற்றை அறிந்திருந்த முதல் மனிதர்கள். பிரான்ஸில் உள்ள சாவ்வேட் குகை ஓவியங்கள் இவர்களுடைய கலைத் திறமையை வெளிப்படுத்தும் பழமையான சான்றாக இருக்கிறது. உலகின் வேறுபட்ட தட்பவெப்ப பகுதிகள் அனைத்திலும் வாழும் ஆற்றலை இவர்கள்தான் பெற்றிருந்தனர். சுமாராக 20 ஆயிரம் ஆண்டுகளில் உலகம் முழுவதும் பரவிய இவர்கள், கி.மு. 4 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன், விலங்குகளை பழக்கப்படுத்தவும், விவசாயம் செய்யவும் கற்றுக் கொண்டனர். நகரங்களை உருவாக்கி, எழுத்து வடிவத்தையும் இவர்கள் அறிமுகப்படுத்தினர்.
இதுதான் மனிதகுலத்தின் சுருக்கமான வரலாறு.