பலருக்கும் ஏற்படும் மனச்சிதைவு நோய்க்கான காரணங்கள் மற்றும் அறிகுறிகள் குறித்து புரிதல் இல்லை. அதைப் பற்றி நமக்கு டாக்டர் பூர்ண சந்திரிகா விளக்குகிறார்.
மனச்சிதைவு நோய் குறித்து சில திரைப்படங்கள் எடுக்கப்பட்டுள்ளன. ஆனால், அவை சரியாக முழுமையாய் சொல்லப்படவில்லை என்றே சொல்லலாம். நம்முடைய குடும்பத்திலோ, நண்பர்கள் வட்டத்திலோ யாருக்காவது இந்த நோய் இருந்தால் அதை எப்படிக் கண்டறிவது என்கிற குழப்பம் பலருக்கு இருக்கிறது.
கல்லூரியில் படித்துக் கொண்டிருந்த 26 வயது இளைஞர் ஒருவரை என்னிடம் அழைத்து வந்தனர். அவருக்கு எந்தக் கெட்டப்பழக்கமும் கிடையாது. காதல் தோல்வி, பரீட்சையில் தோல்வி போன்ற சில பிரச்சனைகள் அவருக்கு ஏற்பட்டன. அதன் பிறகு சில காலம் அவர் மிகவும் அமைதியாக இருந்திருக்கிறார். அவருடைய குடும்பத்தினர் ஹாஸ்டலில் இருந்து அவரை வீட்டுக்கு அழைத்து வந்திருக்கின்றனர். கொஞ்சம் கொஞ்சமாக அவர் பேசுவதைக் குறைத்தார். தூக்கமில்லாமல் இருந்தார். தன்னுடைய அறையிலிருந்து வெளியே வருவதைக் குறைத்தார். தனக்குத்தானே பேசிக்கொள்ள ஆரம்பித்தார். நண்பர்களிடம் பேசுவதைக் குறைத்தார். யாரோ தன்னை அடிக்க வருவது போல் நினைத்தார். அவரிடம் பயம் அதிகம் இருந்தது. இதுபோன்ற அறிகுறிகள் அனைத்துமே மனச்சிதைவு நோய்க்கான அறிகுறிகள் தான்.
குடும்பத்தில் இதற்கு முன் யாருக்காவது மனச்சிதைவு நோய் இருந்திருந்தால் அடுத்த தலைமுறைக்கும் அது ஏற்பட வாய்ப்புண்டு. தன்னைச் சுற்றியுள்ள மன அழுத்தம் தரக்கூடிய சூழ்நிலையாலும் இது ஏற்படலாம். மனச்சிதைவு ஏற்பட்டவர்களை கோவில், சர்ச், தர்கா என்று கொண்டுபோய் விடும் பழக்கமும் இங்கு இருக்கிறது. அதனால் தற்காலிகமாக மனச்சிதைவு நோய் சரியானது போல் தோன்றும். ஆனால், முழுமையாய் குணமாகாது. முழுமையாக குணப்படுத்த மருத்துவரை அணுகி சிகிச்சை எடுத்துக் கொள்ள வேண்டும்.