உங்கள் குழந்தைகள் நலமா - பாகம் 4
குழந்தைகளுக்கான உடற்பயிற்சி
முந்தைய வழியெல்லாம் வாழ்வோம் பகுதிகளில் குழந்தைகளின் உணவுப்பழக்கங்கள் குறித்து விவாதித்தோம். இந்தக் கட்டுரை குழந்தைகளின் உடற்பயிற்சி பற்றி விரிவாக பார்க்கலாம்…
குழந்தைகள் வாழ்வில் உடற்பயிற்சி இன்றியமையாதது ஆகும். 14 வயதுக்குள் குழந்தைகள் உடலினுள் சேர்ந்துவிடும் தேவையற்ற கொழுப்பு ஆகியவை பிற்காலத்தில் குழந்தைகளின் வாழ்வை பல வகைகளிலும் பாதிக்குமென்றும், அவ்வகை அதீத எடையை பின்பு குறைத்தல் மிகக்கடினம் என்று சமீபத்திய ஆய்வுகள் கூறுகின்றன. இன்று உடற்பயிற்சி என்றதும் குளிரூட்டப்பட்ட உடற்பயிற்சி கூடங்களும், கூடைப்பந்து, இறகுப்பந்து அரங்கங்களும்தான் நம் நினைவுக்கு வருகின்றன. கொஞ்சம் நாம் கடந்து வந்த வாழ்வியலைத் திரும்பிப் பார்ப்போம். நம் உடற்பயிற்சி ஆசிரியர்கள் சொல்லிக் கொடுத்த சாதாரண உடற்பயிற்சிகளை மறந்தே போனோம். எடுத்துக்காட்டாக கைகளை மேலே தூக்குதல், கீழே இறக்குதல், உட்கார்ந்து எழுதல் போன்றவற்றை மொத்தமாய் மறந்தேவிட்டோம்.
அப்போது நம் ஆசிரியர்கள் நமக்குத் தந்த சிறிய தண்டனைகளில் கூட நம் உடல் நலம் கருத்தில் கொள்ளப்பட்டிருந்தது. அந்த தண்டனைகள் பெரும்பாலும் நமக்கு உடற்பயிற்சியாகவே இருந்தன. தோப்புக்கரணம் போடுதல், ஒற்றைக்காலில் நிற்றல் என்பனவெல்லாம் மிகச்சிறந்த உடற்பயிற்சிகள். தோப்புக்கரணம் போடுதல் என்பது மிகச்சிறந்த அக்குபிரசர் எனப்படும் தூண்டுதல் சிகிச்சை என்று வெளிநாட்டு ஆய்வாளர்கள் பலர் வியந்து கூறுகின்றனர். இது யோகக்கலைகளில் ஒன்று. இன்று அவையெல்லாம் வழக்கொழிந்தே போய்விட்டன.
உடற்பயிற்சி என்பது உடலின் எல்லா மூட்டுகளுக்கும், தசைகளுக்கும் வேலை கொடுப்பதாகவும், அதே நேரம் இதயம் மற்றும் நுரையீரல் ஆகியவற்றின் செயல்பாடுகளுக்குப் பாதுக்காப்பானதாகவும் அமைதல் வேண்டும். எல்லாக் குழந்தைகளும் செய்யும் வண்ணம் ஒரே மாதிரியான சாதாரண பல உடற்பயிற்சிகள் உள்ளன. ஆனால் புத்தகப் புழுக்களாக மாறிப்போன குழந்தைகளும், கற்றதை வாந்தியெடுக்கக் கற்பிக்கும் பள்ளிகளும் இவ்வகையான உடற்பயிற்சிகளுக்கு எவ்வளவு முக்கியத்துவம் தருகின்றன என்று தெரியவில்லை. பொதுவாக குழந்தைகள், தங்கள் வயதையொத்த குழந்தைகளோடு விளையாடும் வாய்ப்பை பள்ளிகள் உருவாக்கித் தரவேண்டும். அந்த விளையாட்டுகள் அவர்களிடையே ஆரோக்கியமான போட்டியை உருவாக்குவதோடு அல்லாமல், அவை குழந்தைகளின் உடலை வலுவாக்கும் ஊக்கத்தையும் தருகின்றன.
அதே போல் குழந்தைகள் வாழும் தெருக்களில் உள்ள பிற குழந்தைகளோடும், உறவினர்களின் குழந்தைகளோடும் நம் குழந்தைகளை விளையாடப் பழக்கவேண்டும். அப்படி விளையாடுவது சமூக ரீதியாகவும், உளவியல் ரீதியாகவும், உடல் ரீதியாகவும் குழந்தைகளை முன்னேற்றும். உதாரணமாக தன்னை விட வலுவான ஒரு குழந்தையுடன் விளையாடும்போது சில வேளைகளில் தோற்றுப் போனாலும், அந்தத் தோல்வியை ஏற்றுக்கொள்ளும் மனப்பக்குவத்தையும், அடுத்த முறை வெற்றி பெற செய்ய வேண்டிய உத்திகளையும் அந்தக் குழந்தை கற்றுக்கொள்ளும். அதேபோல், தன்னைவிட வயதில் குறைந்த, வலுவில் குறைந்த குழந்தையோடு விளையாடும் குழந்தைகளுக்கு விட்டுக்கொடுக்கும் மனப்பாங்கும், பொறுமையும் இயல்பாகவே கிடைக்கத் தொடங்குகிறது.
ஆனால், இந்த நவீனகாலப் பயிற்சி முறைகள் அப்படியல்ல. பயிற்சிக்கூடங்களுக்கு அனுப்பி பயிற்றுவிக்கப்படும் குழந்தைகள் வெற்றி என்ற ஒன்றை மட்டுமே நோக்கி ஓடவைக்கப்படுவதால், அவர்களால் சிறு தோல்விகளைக் கூட தாங்கிக்கொள்ளும் மனப்பக்குவமில்லாமலே போய்விடுகிறது. இதனால் உடல்ரீதியாக வலுவாக்கினாலும் உளவியல் ரீதியாக வலுவிழந்த குழந்தையாகவே இத்தகைய குழந்தைகள் வளர்கின்றன.
அடுத்த கொடுமை "வீடியோ கேம்" எனப்படும் ஒன்று. இதை விளையாடும் குழந்தைகள் வெற்றியை எல்லாம் வெறும் தொடுதிரையில் பெற்று, திருப்தி அடைந்து, ஆனால் உண்மை வாழ்வியலை ஏற்க மறந்துபோன குழந்தைகளாகவே வளர்கின்றன. இதை நம்மைச் சுற்றி இருக்கும் பல குழந்தைகளிடம் நாம் கவனிக்கலாம்.
மனிதவள மேம்பாட்டு நிறுவனம் வெளியிட்ட ஒரு கருத்துக்கணிப்பில், வீடியோ கேம் விளையாடும் குழந்தைகள் யதார்த்த வாழ்வை ஏற்க மறந்து உளவியல் ரீதியாக பாதிப்புக்கு உள்ளாகி இருப்பதாகத் தெரிவிக்கிறது. உறுதியான உடலும், தெளிவான மனப்பக்குவத்தையும் நம் குழந்தைகளுக்கு அளிப்பது ஒன்றே நாம் நம் தமிழ்ச் சமூகத்திற்கு ஆற்றும் மிகப்பெரிய பேருதவி. அதற்கு அடிப்படை உடற்பயிற்சிகள் மட்டுமே.
(தொடரும்…)