தாகம் எடுத்தாலே பல சமயம் தண்ணீர் குடிக்காமல் தள்ளிப் போடுகிற பழக்கமெல்லாம் சிலருக்கு இருக்கத்தான் செய்கிறது. தண்ணீர் குடிப்பதன் தேவை மற்றும் அவசியம் குறித்து டாக்டர் அருணாச்சலம் விளக்குகிறார்
தேவையான அளவு அனைவரும் தண்ணீர் குடிக்க வேண்டும். ஏசியில் இருப்பவர்கள் கூட தினமும் இரண்டு லிட்டர் தண்ணீர் நிச்சயம் குடிக்க வேண்டும். ஆனால் அவர்களுக்கு தாகம் ஏற்படாத காரணத்தால் அவர்கள் குறைவாகவே தண்ணீர் குடிப்பார்கள். தண்ணீர் குடிக்காமல் இருந்தால் அவர்களுக்கு நிச்சயம் பிரச்சனைகள் ஏற்படும். பகல் நேரத்தில் ஒரு லிட்டர் தண்ணீரும், மதியம் முதல் இரவு நேரத்துக்குள் ஒரு லிட்டர் தண்ணீரும் குடிக்க வேண்டும். காலையில் எழுந்தவுடன் ஒரு டம்ளர் மோர் கூட குடிக்கலாம்.
தண்ணீருடன் சாலட்டும் சாப்பிட்டால் மலச்சிக்கல் பிரச்சனை தீரும். இரவு 7 மணி ஆகும்போது நிறைய தண்ணீர் குடிக்க வேண்டும். நாம் குடிக்கும் தண்ணீர் நமக்குப் போதுமா என்பதை நமக்கு வெளியேறும் சிறுநீர் மூலம் கண்டறியலாம். சிறுநீர் மஞ்சளாக வெளியேறினால், குறைந்த அளவு சிறுநீர் வெளியேறினால், நீண்ட நேரம் சிறுநீர் வெளியேறாமல் இருந்தால் நாம் போதுமான அளவு தண்ணீர் குடிக்கவில்லை என்று அர்த்தம். சில நேரங்களில் சிறுநீரில் ரத்தம் கூட வெளியேறும். தண்ணீர் குடிப்பதன் தேவை என்பது தமிழன் கற்றுக்கொள்ள மறந்த ஒரு விஷயம்.
குழந்தைகளை சரியான அளவில் தண்ணீர் குடிக்க வைப்பது குறித்து பெற்றோர் கவலைப்படுவதில்லை. நீர் பருகுவதற்கு எப்போதுமே யோசிக்கக் கூடாது. இதனால் வரும் பிரச்சனைகள் போலவே தண்ணீரை வைத்து உடலைக் கழுவாமல் இருந்தாலும் பல்வேறு பிரச்சனைகள் ஏற்படும். வியர்க்குரு காரணமாக அரிப்பு மற்றும் கட்டி ஏற்படும். வாய்ப்பு கிடைக்கும்போதெல்லாம் தண்ணீரால் உடம்பைக் கழுவி துடைப்பது நல்லது. வியர்வையை உறிஞ்சும் வகையிலான துணிகளை அணிவது நல்லது.
அந்தக் காலத்தில் துண்டு இல்லாமல் யாரையும் பார்க்க முடியாது. உடலை அவ்வப்போது துடைத்துக்கொள்ள அது உதவும். குறைவாக தண்ணீர் குடிப்பதால் சிறுநீரில் கல் உண்டாகும் பிரச்சனை, மலச்சிக்கல் பிரச்சனை ஆகியவை ஏற்படும். இவை அனைத்தையும் தவிர்ப்பதற்கு தினமும் தேவையான அளவு தண்ணீர் குடித்து நம்முடைய ஆரோக்கியத்தை நாம் பாதுகாக்க வேண்டும்.