
கர்நாடகா மாநிலத்தில், முதல்வர் சித்தராமையா தலைமையிலான காங்கிரஸ் ஆட்சி நடைபெற்று வருகிறது. துணை முதல்வராக டி.கே.சிவகுமார் பொறுப்பு வகித்து வருகிறார். இந்த நிலையில், டி.கே.சிவகுமார் பேசிய கருத்து ஒன்று தற்போது அம்மாநிலத்தில் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
சாலை கட்டுமானம் குறித்து நிகழ்ச்சி ஒன்று நடைபெற்றது. அந்த நிகழ்ச்சியில் பங்கேற்று பேசிய துணை முதல்வர் டி.கே.சிவகுமார், “கடவுள் சொர்க்கத்திலிருந்து இறங்கி பெங்களூருவின் தெருக்களில் நடந்தாலும், ஒன்று, இரண்டு, அல்லது மூன்று ஆண்டுகளுக்குள் எதுவும் மாறாது என்பதை இங்குள்ள ஊடகவியலாளர்களுக்கு நான் தெரிவிக்க விரும்புகிறேன்.. நிலைமை மிகவும் சவாலானது. நாம் முறையாகத் திட்டமிட்டு திட்டங்களை திறம்பட செயல்படுத்த வேண்டும். எதிர்காலத்திற்கான சிறந்த வழித்தடத்தை உருவாக்க நாங்கள் முயற்சி செய்கிறோம்” என்று கூறினார்.
பெங்களூரு போக்குவரத்து நிலைமைகளையும், மெட்ரோ விரிவாக்கம் மற்றும் போதுமான பொதுப் போக்குவரத்து குறித்து பெங்களூர்வாசிகள் தங்களது கவலைகளை எழுப்பி வரும் நேரத்தில் துணை முதல்வரின் இந்த பேச்சு சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.