Skip to main content

கனவுகள் சொல்லும் ரகசியங்கள்! நாம் அடிக்கடி காணும் கனவுகளின் அர்த்தம்...

Published on 24/02/2018 | Edited on 24/02/2018

ஒவ்வொரு இரவிலும்  90 நிமிடங்களிலிருந்து இரண்டு மணிநேரம் வரை அல்லது அதற்கும் மேலாக ஒவ்வொரு மனிதனும் கனவு காண்கிறான். கனவுகள் எப்பொழுதுமே நேரடியான அர்த்தங்களை கொண்டிருக்க வேண்டிய அவசியமில்லை. சிறு வயதில் நாம் காணும் கனவுக்கு நம் பாட்டிமார்கள் அர்த்தம் சொல்லியிருப்பார்கள். பெரும்பாலும் அவை தவறானதாக இருக்கவே வாய்ப்பு அதிகம். ஏனெனில், ஒருவருடைய கனவுக்கு ஒரு காரணி, காரணம் மட்டுமல்ல, பல காரணங்கள் இருக்கலாம். அதே நேரம் கனவு காண்பவருடைய அடி மனம் வரை தெரிந்தால் தான் கனவுக்கான அர்த்ததை கூற முடியும். ஆனால், சில கனவுகள் நம் அனைவருக்கும் ஒரே விதமாக, ஒரே மாதிரியாக வந்திருக்கும். அவற்றுக்கு சற்றேறக்குறைய ஒரே அர்த்தம் இருக்கக்கூடும். அதே போல கனவுகள் என்பவை நாம் நடக்கவேண்டுமென்று நினைப்பது மட்டுமல்ல, நாம் செய்யத் தவறியதாகவும், அதை அறியாமலும் கூட இருக்கலாம். கனவுகள் நமக்கு அவற்றை நினைவுபடுத்தலாம்.  சுருக்கமாக கனவுகள் ஒரு சம்பவத்தின், ஆசையின், உணர்வின் விளைவாகவும் இருக்கலாம், காரணமாகவும் இருக்கலாம்.  

சிக்மண்ட் ஃபிராய்ட் தான் கனவுகளை உளவியல் ரீதியாக முதன்முதலில் அணுகி  விளக்கம்  கொடுத்தவர். அதற்கு பின் பல்வேறு ஆராய்ச்சிகள் நடந்திருக்கின்றன. தற்கால வாழ்க்கை சூழல் கலந்த கனவுகளும் ஆராயப்பட்டன. அவற்றில் சில தகவல்கள் இங்கே...

நம்மை யாரோ துரத்துவது...

 

Chasing dream


நம்மில் பெரும்பாலானோர் கண்டிருக்கும் பொதுவான கனவு இது. நேரடி அர்த்தத்தில் நம்மை ஒரு பிரச்சனை துரத்துவதும், நாம் அதிலிருந்து தப்பிக்க ஓடுவதும் என்று இருக்கலாம். ஆனால், நடைமுறையில் பலருக்கும்  இந்தக் கனவு, நாம் கவனிக்காமல் விட்ட, ஆனால் கவனிக்க வேண்டிய ஒரு விஷயத்தை உணர்த்துவதாக, நமக்கு நினைவுபடுத்துவதாகவே வருகிறது. அதனால, இனிமேல் உங்களை யாரோ துரத்துவது போல கனவு வந்தால், தெறிச்சு ஓடாம, காலையில் எழுந்து நின்னு திரும்பி பாருங்க. நீங்க கவனிக்காம இருக்கும் ஏதோ ஒரு விஷயம் இருக்கலாம்.     

நீர்

நமது கனவில் வரும் நீர் நம் மனநிலையை குறிக்கும். தெளிவான, அமைதியான நீர் வந்தால், நம் மனநிலையும் அப்படி இருக்கிறதென்று அர்த்தம். வரும்போதே சீற்றமாகவும் கடல் கொந்தளிப்பாகவும் இருந்தால் மனதும் அப்படியென்று அர்த்தம். கனவில் வந்தது தண்ணீர் என்றால் இந்த அர்த்தம், வந்தது வேறு தண்ணீயென்றால், நண்பர்களுடன் பார்ட்டிக்கு சென்று நாளாகிறது என்று அர்த்தமாம். (இது கனவு அறிஞர் சொன்னதல்ல, நானே கண்டுபிடித்தது)   
 

வாகனங்கள்

ஒரு கார், விமானம், ரயில் அல்லது கப்பல், நம்  கனவில் உள்ள வாகனங்கள் நம்முடைய வாழ்க்கையில்  எந்த திசையை நோக்கி பயணம் மேற்கொள்கிறோம் என்பதை பிரதிபலிக்க முடியும். அது போல, அந்த வாகனத்தின் போக்கைப் பொறுத்து   நாம் எவ்வளவு தூரம் மனக் கட்டுப்பாட்டுடன் இருக்கிறோம் என்பதை நாம் புரிந்து  கொள்ளலாம். அதிவேகமாக சல்மான் கான்,  ஜெய் போல ஓட்டி ரோட்டின் ஓரம் இடிப்பது போல போனால், மனது குழப்பமாக இருக்கிறது, சரி செய்ய வேண்டுமென்று பொருள். இல்லை, அஜித் போல ஹெல்மெட், ஜாக்கெட் எல்லாம் போட்டுக் கொண்டு சீராக ஓட்டினால் மனம் சீராக இருக்கிறதென்று பொருள். 


மரணம் 
 

death dream


நேத்து நைட்டு கனவுல நான் செத்துப் போயிட்டேன். நிஜத்துலயும் ஏதாவது நடக்கப் போகுது என்று பயப்படுபவரா நீங்கள்? பயத்தையெல்லாம் விட்டுத்தள்ளுங்க. இதுவரைக்கும் அவர்கள் கனவில் அவர்களே இறந்தவங்க யாரும் பெரும்பாலும் இறந்ததில்லை.  இறப்பது போன்ற கனவு வந்தால், நாம் புதிதாக ஏதோ ஒன்று செய்யப் போகிறோம் என்று அர்த்தமாம். நம்மிடம் இருந்த ஏதோ ஒன்றை நிறுத்திவிட்டு, அல்லது நீக்கிவிட்டு வேறு மனிதனாகப் போகிறோம் என்று அர்த்தம் தருகிறதாம் அந்தக் கனவு. முதலில் சொன்னது போலவே, இந்த வகை கனவும் காரணமாகவும் இருக்கலாம், அல்லது விளைவாகவும் இருக்கலாம். அதாவது, நடந்த சம்பவத்தின் பாதிப்பாகவும் வரலாம் அல்லது நடக்க வேண்டிய மாற்றத்தை உங்களுக்கு அறிவுறுத்தவும் வரலாம். இனிமேல், கனவில் செத்தால், மகிழ்ச்சியடையுங்கள். 
 

நிர்வாணம்
 

naked dream


உணர்ச்சி அல்லது உளவியல் ரீதியான பாதிப்பு என்பது அடிக்கடி நிர்வாணத்தின் மூலம் கனவுகளில் வெளிப்படுத்தப்படுகிறது. பெரும்பாலும் நிர்வாணமாக இருப்பது போன்ற கனவுகள் மனதிற்குள் புழுங்குகிற, ஏதோ ஒரு பாதிப்பு உள்ள, அவமானத்திற்கு பயப்படுகிற மனநிலை உள்ளவர்களுக்குதான் வருகிறதாம். நீங்கள் பயத்தை விட வேண்டும், மனதை லேசாக்க வேண்டுமென்பது தான் கனவில் நிர்வாணம் சொல்லும் ரகசியம். அதே நேரம், மற்றவர்களுக்கு முன் நிர்வாணமாக இருந்து கொண்டே அதற்கு வெட்கப்படாமல் சுற்றுவது போல சிலருக்கு கனவு வரும். அந்தக் கனவு, யார் என்ன சொன்னால் என்ன, நான் என் வாழ்க்கையை ஜாலியாக வாழுவேன், என் பாதையில் போவேன் என்று சிம்பு ஸ்டைலில் வாழ்வதை குறிக்குமாம்.     


உயரத்தில் இருந்து விழுகிறீர்களா? 
 

falling dream


இதுவும் பலருக்கும் வரும் கனவு. உயரத்தில் இருந்து விழுவோம், விழுவோம், விழுந்து கொண்டே இருப்போம், தரை வராது. இப்படி வரும் கனவுகள், நாம் சில விஷயங்களை விட்டு வெளியே வர வேண்டும், செல்ல நினைக்கும் உறவுகளை, நட்புகளை வீணே பிடித்துக் கொண்டிருக்கிறோம் என்பதை உணர்த்துவன. காதலியுடன் அடிக்கடி சண்டை போட்டுகொண்டு, அதே நேரம் பிரியவும் மனமில்லாமல் இருப்பவர்களுக்கு பெரும்பாலும் இந்தக் கனவுகள் வருமாம்.      
 

அடைபட்டுக்கிடப்பது 
 

rajini in cave


ரஜினி இமயமலை சென்ற புகைப்படம் என்று ஒன்று முன்பு வெளியானது. அந்தப் புகைப்படத்தில் ஒரு சின்ன ஓட்டை வழியே ஒரு குகைக்குள் ரஜினி இறங்கிக்கொண்டிருப்பார். அதைப் பார்க்கும்பொழுதே நமக்கு அச்சம் ஏற்படும். அந்தக் குகைக்குள் இறங்கினால் திரும்பி வர முடியுமா என்று தோன்றும். அப்படிப்பட்ட ஒரு குகைக்குள்ளோ, அல்லது நான்கு புறமும் அடைத்த பெட்டிக்குள்ளோ நாம் மாட்டி மூச்சு விட சிரமப்படுவது போன்ற கனவு கிட்டத்தட்ட நம் அனைவருக்கும் வந்திருக்கும். நன்கு யோசித்துப் பார்த்தால், வாழ்க்கையில் நமக்குத் பிடிக்காத ஏதோ ஒன்றில், அது வேலையோ, உறவோ, படிப்போ  மாட்டியிருக்கும்பொழுது அந்த கனவு வந்திருக்கும். தினசரி வாழ்க்கையில் அதை விடவேண்டுமென்ற  எண்ணம் நமக்கு இல்லையென்றாலும் நம் ஆழ்மன வெறுப்பை அது காட்டுகிறதென்றும் அதை விட்டு வெளிவருவதே மகிழ்ச்சியளிக்குமென்பதும் தான் அந்தக் கனவின் அர்த்தம்.  

 

cave dream



பள்ளி அல்லது வகுப்பறை

பள்ளியில் படிக்கும் மாணவர்களுக்கு தினமும் கூட கனவில் பள்ளிகள் வருவது இயல்பே. பள்ளியை எப்பொழுதோ முடித்து வந்துவிட்ட 90ஸ் கிட்ஸுக்கெல்லாம் கனவில் பள்ளி வந்தாலோ  அல்லது வகுப்பறையில் தான் இருப்பது போன்ற கனவு வந்தாலோ, பெரும்பாலும் அவர் ஒரு சோதனையை எதிர்கொள்ளத் தயாராக இல்லை என்பதை உணர்த்தும். பாடம் அல்லது சோதனையானது நாம்  கடந்த காலத்திலிருந்து கற்றுக்கொள்ள வேண்டிய பாடங்களை நினைவு படுத்துவதாம். எனவே நம் கனவில் பள்ளி வந்தால் மலரும் நினைவுகளென்று விட்டுவிடாமல், மறந்த நிகழ்வுகளில் இருந்து பாடம் கற்க வேண்டுமாம். ஆனாலும் ஒரு சந்தேகம் வருகிறது, இப்பொழுதெல்லாம் குழந்தைகளை பள்ளியில் சேர்க்கும் புது பெற்றோருக்கும் ஸ்கூல் ஃபீஸ் கனவில் வந்து பயமுறுத்துதே, அதுக்கும் வேறு அர்த்தம் இருக்குமா என்ன? இருக்கலாம், கௌரவத்துக்காக  லட்சக்கணக்கில் கொட்டாமல், நமக்கேற்ற எளிய பள்ளியில் நல்ல கல்வி கொடுங்கள் என்று அறிவுறுத்துவதற்காக இருக்கலாம்.       

கனவில் உடலுறவு 
பதின் வயதுகளில் இவ்வகைக் கனவுகள் பெரும்பாலானவர்களுக்கு வருவதுதான். உடலில் ஏற்படும் மாற்றங்கள், அதைப் பார்த்து ஏற்படும் வியப்பு, எதிர் பாலின ஈர்ப்பு என இதற்கு பல காரணங்கள் இருக்கின்றன. அதற்குப் பிறகும் வந்தால் இவை மனதில் ஒளிந்திருக்கும் ஆசைகளை கூறுபவையே. ஆராய்ச்சியாளர்கள் கூறும் பலவகைக் கனவுகளில் இந்த வகை தான் பெரும்பாலும் நேரடியான அர்த்தத்தைக் கொண்டிருப்பதாகும். சில கனவியல் அறிஞர்கள் கூறுகையில், உடலுறவு கொள்வது போன்ற கனவுகள் வருவது, நம் மனதை ஒருநிலைப்படுத்த வேண்டிய தேவையை நமக்கு அறிவுறுத்தவும் இருக்கலாம் என்று கூறுகின்றனர். இதைப் படிக்கும் 'சிங்கள்'களுக்கு 'கனவில் கூட எங்களை அனுபவிக்க விடமாட்டீங்களா, வேற வேற அர்த்தம் சொல்றீங்க?' என்று கேள்வி வரலாம். என்ன செய்வது, உண்மை நிலை அதுதான்.      

இவை,  பொதுவாக அதிகமானோருக்கு வரும் கனவு வகைகளே. இது தவிர ஒவ்வொரு மனிதரின் மனதில் இருக்கும் விஷயங்களைப் பொறுத்து அவர்கள் காணும் கனவுகளும் அவற்றின் அர்த்தங்களும் மாறலாம். இதையெல்லாம் படிக்கும்போதுதான் தெரிகிறது, கனவுகள் தன்னிச்சையாக வந்து செல்பவையல்ல, புரிந்து உணர்ந்தால் நம் வாழ்க்கைக்கு ஒரு 'அலெர்ட்'டாக உதவுபவை என. எனவே நாம் காணும் கனவுகள் ஒவ்வொன்றிற்கும் அர்த்தம் இருக்கிறது என்பதை உணர்ந்து  அதனை அனுபவித்து, அதிலிருந்து பாடம் கற்று மகிழ்வாய் வாழ்வோம்.