1998ஆம் ஆண்டு... தாய்லாந்தில் நடந்த தொடரில் ஆசிய கோப்பையை வென்றுவிட்டு தாய் மண் திரும்பியது அந்த அணி. மாலைகள், மரியாதை, வரவேற்பெல்லாம் பயங்கரமாக இருக்கும் என்று எதிர்பார்த்து வந்து, கடைசியில் அங்கு வழக்கமான தங்கள் சகாக்கள், நண்பர்கள் மட்டும் நின்றது அந்த அணியின் தலைவனுக்கு பெரும் ஏமாற்றம். ரசிகர்கள் யாரும் குவியவில்லை, ஏன் கண்டுகொள்ளக்கூட இல்லை. ஏனெனில் அந்த அணி இந்திய கிரிக்கெட் அணி அல்ல, தேசிய விளையாட்டான ஹாக்கி அணி. ஆம், டெஸ்ட் முதல் ஐபிஎல் வரை எல்லா வடிவத்திலும் கொண்டாடப்படுகிறது கிரிக்கெட். அந்த கண்கூசும் வெளிச்சத்தில் மற்ற அனைத்து விளையாட்டுகளும் மறைந்துவிடுகின்றன, ஹாக்கியும்தான். ரசிகர்கள் அப்படியொரு அதிர்ச்சியளித்தார்கள் என்றால், ஹாக்கி சம்மேளனம் அடுத்த போட்டிக்கு தன்ராஜை டீமில் சேர்க்காமல் அதிர்ச்சி கொடுத்தது. ஓய்வு தேவை என்று காரணம் கூறியது. இப்படிப்பட்ட சூழ்நிலையிலும் மனம் தளராது வெற்றிகளைக் குவித்த அந்த அணித் தலைவர், தன்ராஜ் பிள்ளை.
4 ஒலிம்பிக் போட்டிகள், 4 சாம்பியன் டிராபிகள், 4 உலகக்கோப்பை போட்டிகள், 4 ஏசியன் போட்டிகள் விளையாடியவர், 1994 சிட்னி உலகக் கோப்பை போட்டிகளின் போது வேர்ல்டு 11இல் இடம் பிடித்த ஒரே இந்திய வீரர், தன் தலைமையில் 1998 ஏசியன் கேம்ஸ், 2003 ஏசியா கப் வென்றவர், 2002 ஜெர்மனி சாம்பியன்ஸ் டிராபியில் தொடரின் சிறந்த வீரராக தேர்ந்தெடுக்கப்பட்டவர் என இத்தனை சாதனைகளை செய்த இவருக்கு இந்திய ஹாக்கி சம்மேளனம் கொடுத்த பரிசு என்ன தெரியுமா? 339 சர்வதேச போட்டிகளில் (1989-2004) விளையாடிய இவர் எத்தனை கோல்கள் அடித்தார் என்று அதிகாரப்பூர்வமாக கணக்கு வைக்காமல் இருப்பதுதான். தனது சொந்தக் கணக்கிலும் விளையாட்டு ஆர்வலர்களின் கணக்குப்படியும் 170 என்கிறார் இவர்.
தமிழ்நாட்டைப் பூர்வீகமாகக் கொண்ட இவரது குடும்பம் தந்தையின் பணி காரணமாக பூனே அருகிலுள்ள கட்கீ என்ற இடத்தில் வாழ்ந்தது. ஆயுதத் தொழிற்சாலை தொழிலாளியான தந்தையின் குறைந்த சம்பளத்தில் வாழ்ந்த மிகவும் இக்கட்டான பொருளாதார சூழல் கொண்ட குடும்பத்தில் பிறந்த தன்ராஜூக்கு உணவிலிருந்து ஹாக்கி ஸ்டிக் வரை எந்த விஷயமும் எளிதில் கிடைக்கவில்லை. கஷ்டப்பட்டு வளர்த்து, ஹாக்கி ஆர்வம் ஊட்டிய தன் தாய் மீது மிகுந்த அன்பு வைத்திருந்தார் தன்ராஜ். ஆனால், ஹாக்கி விளையாட தனக்கென ஸ்டிக் இல்லை. மற்றவர்களின் ஸ்டிக்குக்காக காத்திருப்பார், கிடைக்கும்போது ஆடுவார். இவரது அண்ணன் வெளியூர் சென்ற பின்தான் இவருக்கென ஒரு ஹாக்கி ஸ்டிக் கிடைத்தது. அதுவும் பழையதே.
இப்படி வளர்ந்ததால் இவர் எப்பொழுதும் பாதுகாப்பற்ற மனநிலையில் இருந்தார், அதனால் பல நேரங்களில் கோபமாகப் பேசிவிடுவார். அணி தரும் பயணப்படிகள், தேர்வில் உள்ள அரசியல், சம்பள பாக்கி என்று பல விஷயங்களுக்காக ஹாக்கி சம்மேளனத்தை எதிர்த்து வெளிப்படையாகப் பேசி அதற்காக பழிவாங்கப்பட்டிருக்கிறார். ஆரம்பத்தில் தன் தோற்றம் குறித்த தாழ்வு மனப்பான்மை இவருக்கு உண்டு. "நான் அழகில்லை, கருப்பானவன். என்னை பெண்களுக்குப் பிடிக்காது என்று எனக்குத் தெரியும். ஆனால், என் தோற்றத்தை விட என் ஆட்டத்தைப் பார்த்து அவர்கள் என்னுடன் பழக வேண்டும் என்று விரும்புகிறேன்" என்று கூறி அதை நிகழ்த்தியவர். தன் விளையாட்டுக்காக 1999-2000 ஆண்டிற்கான ராஜிவ் கேல்ரத்னா விருது, 2000இல் பத்மஸ்ரீ விருது, 2017இல் ஈஸ்ட் பெங்கால் கால்பந்தாட்ட கிளப் வழங்கும் மதிப்பிற்குரிய விருதான பாரத் கௌரவ் விருது என்று பல விருதுகளைப் பெற்றுள்ளார்.
இவர் இந்திய ஹாக்கி வீரராக பிரபலமான பின்பும் மும்பையில் லோக்கல் ரயில்களில் பயணித்தார். எளிமையெல்லாம் இல்லை, அப்பொழுது வரைக்கும் இவரிடம் கார் வாங்கப் பணமில்லை. இப்பொழுது விராட் கோலிக்கு ஆடி, மித்தாலிக்கு BMW என்றெல்லாம் பரிசு வழங்கப்படுகிறது. அப்பொழுது இந்திய தேசிய விளையாட்டின் தேசிய அணி வீரரின் நிலை அவ்வளவுதான். ஒரு முறை இவர் ரயிலில் சென்றபொழுது புகைப்படமெடுத்தார் ஒருவர். மறுநாள் செய்தித் தாளில் 'ஹாக்கி வீரர் தன்ராஜ் பிள்ளை இன்னும் ரயிலில்தான் பயணிக்கிறார்' என்று புகைப்படத்துடன் செய்தி வந்தது. அதைப் பார்த்துதான் இவரே தான் பிரபலாமாகிவிட்டோம் என்று உணர்ந்தாராம். 'அந்த நிமிடம் எனக்கு மிக மிக வெக்கமாக இருந்தது. ஆனால், என்னால் என்ன செய்ய முடியும்?' என்று பின்னாளில் குறிப்பிட்டார். இவரது முதல் கார் இவர் பணியாற்றிய மஹிந்திரா நிறுவனம் வழங்கிய மஹிந்திரா அர்மதா கார், அதுவும் செகண்ட் ஹாண்ட் கார். இந்த மஹிந்திரா நிறுவனம்தான் 'காலா' ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரில் ரஜினிகாந்த் அமர்ந்திருந்த 'தார்' ஜீப்பை 'எவ்வளவு விலையென்றாலும் பரவாயில்லை, அதை கொடுங்கள். நாங்கள் பாதுகாக்க வேண்டு'மென்று கேட்டிருக்கிறது.
பத்மஸ்ரீ விருது
2007 கிரிக்கெட் உலகக் கோப்பையில் இந்திய அணி சூப்பர் 8க்கு தகுதி பெறாமல் திரும்பிய போது ரசிகர்கள் கொதிப்பில் இருந்தனர். டெல்லிக்கு வந்து இறங்கிய அணியின் மீது கோபத்துடன் விமான நிலையத்தில் காத்திருந்தனர். வீரர்கள் போலீஸ் வேனில் பாதுகாப்பாக அழைத்துச் செல்லப்பட்டனர். தோனி உள்ளிட்ட சில வீரர்களின் வீட்டில் கல் வீசப்பட்டது. ரசிகர்களின் இந்த செயல்கள் குறித்து அப்பொழுது ஒரு பேட்டியில் கவலை தெரிவித்திருந்தார் தன்ராஜ். தங்களுக்குக் கிடைக்க வேண்டிய மொத்த கவனத்தையும் வெளிச்சத்தையும் திருடிக் கொண்டு போன விளையாட்டின் மீதோ அந்த வீரர்கள் மீதோ சிறிதும் வெறுப்பு கொள்ளவில்லை. "வெற்றியும் தோல்வியும் விளையாட்டில் சகஜம். சக விளையாட்டு வீரனாக என்னால் அவர்களின் நிலையை புரிந்துகொள்ள முடிகிறது. ரசிகர்களும் புரிந்துகொள்ள வேண்டும்" என்று கூறியிருந்தார். ஆனால், உண்மையில் அவருக்கு வேறு வருத்தம் இருந்தது. அது, கிரிக்கெட்டில் தோற்றால் இத்தனை ஆத்திரம் கொள்ளும் இந்திய விளையாட்டு ரசிகர்கள் தாங்கள் தோற்றபோதும் ஜெயித்தபோதும் கண்டுகொள்ளவில்லை என்பதே அது.
இவர், தான் சந்திக்கும் மாணவர்களிடம் முக்கியமாகக் கூறுவது மூன்று விஷயங்கள். ஒன்று, "கடின உழைப்பு, முழு அர்ப்பணிப்போடு உன் இலக்கை நோக்கிச் செல். ஒரு பொழுதும் சோர்வடைந்து விட்டுவிடாதே" என்பதும் இன்னொன்று "உங்களது சீனியர்களை மதியுங்கள். அவர்களது வழிகாட்டுதல், ஆலோசனைகளை ஏற்றுக் கொள்ளுங்கள். அது உங்களுக்கு உதவும்" என்பதுமாகும். தன்ராஜ் தனது சீனியரரான முன்னாள் ஹாக்கி வீரர் லெஸ்லீ க்ளாடியஸின் மீது மிகுந்த மதிப்பு வைத்திருந்தார். தான் சோர்வுற்ற நேரங்களில் அவரது அறிவுரைகள் தன்னை மீட்டன என்று கூறியிருக்கிறார். மூன்றாவது விஷயம், "உங்கள் தேசத்தின் முன்னேற்றத்துக்கு உழையுங்கள். நான் என் தேசத்தை பெருமையடையச் செய்ய முயன்றுகொண்டே இருந்தேன்" என்பது. அவர் தேசத்தை பெருமைப்படுத்த முயன்றார், தேசமும் பல விதங்களில் அவரை சோதித்தாலும் சில விருதுகளை அளித்து தன் பங்கிற்கு அவரை பெருமைப்படுத்தியது, தேசத்தின் ரசிகர்கள்தான் கொண்டாடாமல் விட்டுவிட்டோம். சரி, இந்த மூன்று விஷயங்கள் அவர் நமக்கு நேரடியாகச் சொன்னது. நான்காவதாக அவரது வாழ்க்கை நமக்குக் கற்றுத் தருவது, 'பாராட்டுகள், பரிசுகள், ஆரவாரம் கிடைக்கிறதோ இல்லையோ, நம் கடமையை, நம் வேலையை, நாம் மேலும் மேலும் சிறப்பாக செய்துகொண்டே இருக்கவேண்டும். ஒரு நாள் வெற்றி வரும்' என்பதுதான்.
மும்பையில் ஒரு பயிற்சிமையம் அமைக்க முயன்று வரும் இவருக்கு தமிழ்நாட்டில் ஒரு ஹாக்கி பயிற்சி மையம் ஆரம்பிக்க வேண்டுமென்பது பெருவிருப்பம். அதற்கு ஊட்டி மிகப் பொருத்தமான இடமென்று ஒரு முறை கூறியிருந்தார். ஒருவேளை சச்சின் இதே ஆசையை வெளிப்படுத்தியிருந்தால் உடனே அவருக்கு நிதியுதவி, முதலீடு என அனைத்தும் பறந்து வந்திருக்கும். ஆனால், இது ஹாக்கி, இவர் ஹாக்கி வீரர். ஒருவரும் கண்டுகொள்ளவில்லை, அதுதான் அவர்கள் வழக்கம். ஆனால், ஒருவரும் கண்டுகொள்ளவில்லையென்றாலும் அதை முயன்று நடத்திக் காட்டுவார். அதுதான் தன்ராஜ் பிள்ளையின் வழக்கம்!