
நாடு முழுவதும் இயக்கப்படும் ரயில்களில் இடம்பெற்றுள்ள முன்பதிவில்லா பெட்டிகளின் எண்ணிக்கை நான்கு என இருந்த நிலையில் அதை இரண்டாக குறைத்து இந்திய ரயில்வே உத்தரவிட்டுள்ளது.
முன்பதிவில்லா பெட்டிகளுக்கு பதில் ஏசி 3 டயர் பெட்டிகளை இணைக்கவும் மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. ஒரு முன்பதிவில்லா பெட்டியில் சராசரியாக 350 பேர் பயணிக்க முடியும் என்ற சூழல் இருக்கும் நிலையில் ரயில்வே நிர்வாகம் 600 முதல் 700 டிக்கெட்களை வழங்கி வருகிறது. இந்திய ரயில்வே துறையின் இந்த நடவடிக்கையால் முன்பதிவு செய்து பயணிப்பவர்களுக்கு கடும் சிரமம் ஏற்பட வாய்ப்புள்ளதாக வல்லுநர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். ரயில்வே துறையின் இந்த நடவடிக்கைக்கு முதல்வர் ஸ்டாலின் உள்ளிட்ட எதிர்க்கட்சி தலைவர் கண்டனம் தெரிவித்துவருகின்றனர்.
அந்த வகையில் தமிழக காங்கிரஸ் கட்சியின் தலைவர் செல்வப்பெருந்தகை ரயில்வே துறை பொதுப்பெட்டிகளை அதிகரிக்க வேண்டுமே தவிர, எக்காரணத்தை கொண்டும் குறைக்கக் கூடாது என்று கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள சமூக வலைதள பதிவில், “ரயில்வே என்பது, தினசரிப் பயணியாகவோ, சுற்றுலாப் பயணியாகவோ, நகர்ப்புறமாகவோ அல்லது கிராமப்புறங்களில் வசிப்பவராகவோ, ஒவ்வொரு இந்தியனின் வாழ்க்கையிலும் ஒரு முக்கிய அங்கமாக இருக்கிறது. ஏழை, எளியோர் அணுகக்கூடிய ரயில்களின் முன்பதிவில்லா பெட்டிகளின் எண்ணிக்கையை குறைத்துள்ள இந்திய ரயில்வேயின் செயலுக்கு கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறேன்.
தொலைதூரப் பயணத்திற்கு சாமானியர்களின் வரப்பிரசாதமாக உள்ள பொதுப்பெட்டிகளை குறைத்துள்ளது நாட்டு மக்களிடையே பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது. எனவே, ஒன்றிய ரயில்வே துறை பொதுப்பெட்டிகளை அதிகரிக்க வேண்டுமே தவிர, எக்காரணத்தை கொண்டும் குறைக்கக் கூடாது. பெட்டிகள் குறைப்பு திட்டத்தை இந்திய ரயில்வே திரும்பப் பெற வேண்டுமெனக் கேட்டுக் கொள்கிறேன்” எனக் குறிப்பிட்டுள்ளார்.