2015ஆம் ஆண்டு... உலகமெங்கும் உச்சரிக்கப்படும் பெயரான கூகுள் நிறுவனம், அதன் சி.இ.ஓ (தலைமை செயல் அதிகாரி) லாரி பேஜ்க்குப் பிறகு கூகுள் நிறுவனத்தின் தலைமைப் பொறுப்புக்கு வர இருப்பவர் என்று ஒருவரின் பெயரை அறிவிக்க, உலகமே அந்தப் பெயரை கவனித்தது, உச்சரித்தது. தமிழர்கள் பரவசமானார்கள். 'சுந்தர் பிச்சை' என்ற பெயரில் உலகின் மிகப்பெரிய நிறுவனத்தின் சி.இ.ஓ. தமிழகத்திலிருந்து சென்ற ஒருவர் இத்தனை பெரிய நிறுவனத்தின் தலைமைப் பொறுப்பேற்றது உண்மையில் அனைவருக்கும் ஒரு 'கூஸ் பம்ப்' மொமெண்ட்தான். இணையம் என்பது இன்று எல்லோர் விரல்களிலும் தவழ்ந்து விளையாடுகிற ஒன்று. இதில் முக்கிய பங்கு கூகுளுக்கு உண்டு. நாம் தேடுவதற்கெல்லாம் பதில் சொல்லும் கூகுளுக்குத் தலைவனாக ஒரு தமிழன் தேடப்பட்டிருக்கின்றான், தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கின்றான் என்றால் அது நமக்குக் கிடைத்த பெருமை அல்லவா?
தமிழ்நாட்டில் மதுரையில் ஒரு சாதாரண நடுத்தரக் குடும்பத்தில் பிறந்து தந்தையின் வேலைக்காக சென்னையில் குடியேறினார்கள். சென்னை அசோக் நகரில் இரண்டே அறைகளைக் கொண்ட தனது வீட்டில் தங்களுக்கென டிவி, வாகனம் போன்ற எந்த பெரிய வசதிகளும் இருக்கவில்லை என்றாலும் நிறைய கனவுகளுடனே வளர்ந்தார் சுந்தர் பிச்சை எனும் பிச்சை சுந்தர்ராஜன். சுந்தர் பிச்சைக்கு சிறிய வயதிலேயே கல்வியில் மிக ஆர்வம், அதற்கு இணையாக விளையாட்டிலும். பள்ளிக்கூட வயதிலேயே பள்ளியில் கிரிக்கெட் டீமிற்குத் தலைமை தாங்கி பல கிரிக்கெட் போட்டிகளில் வென்றுள்ளார். அப்பொழுதே அவருக்கு நினைவாற்றல் அதிகம். செல்போன்கள் இல்லாத அந்தக் காலத்தில், வீட்டுத் தொலைபேசிகள்தான். அந்த ஆதிகால மாடல் தொலைபேசியில் ஒரு முறை சுழற்றிய எண்களை எப்பொழுதும் நினைவுவைத்துக்கொள்ளும் திறமையைப் பார்த்து அனைவரும் வியந்து போகும் அளவிற்கு நினைவாற்றல் கொண்டவராக இருந்தார்.
ஒரு நடுத்தரக் குடும்பத்தில் தந்தை எப்படியிருப்பாரோ அப்படித்தான் இருந்தார் சுந்தர் பிச்சையின் அப்பா. அப்பாவின் அனைத்து கவனமும் சுந்தர் பிச்சையின் கல்வியிலேதான் இருந்தது. சென்னை ஜவகர் பள்ளியில் பத்தாம் வகுப்பு வரை பயின்றார். அந்த சமயத்தில் ஜெனரல் எலெக்ட்ரிக் கம்பெனியில் வேலை செய்துகொண்டிருந்த அவரது தந்தை தினமும் தனது அன்றைய நாளில் என்னென்ன சவால்களை பணியில் எதிர்கொண்டார் என்பதை சுந்தர் பிச்சையுடன் அலசுவார். காரக்பூரில் உள்ள ஐஐடியில் உலோக பொறியியல் படிப்பில் சேர்ந்து படித்தார். அதன் பிறகு கல்வி உதவித் தொகையுடன் அமெரிக்காவின் ஸ்டேன்ஃபோர்ட் பல்கலைக்கழகத்தில் படிக்கும் வாய்ப்பு அவருக்குக் கிடைத்தது. ஆனால், ஒரு மிகப்பெரிய சவால். விமானப்பயணத்திற்கான கட்டணம் தனது தந்தையின் ஒரு வருட ஊதியத்தை விட அதிகமாக இருந்தது. என்ன செய்வது? சுந்தர் பிச்சை மீது அவரது தந்தைக்கு மிகுந்த நம்பிக்கை இருந்தது. மகனின் கல்விக்காக கடன் வாங்கி, நகைகளை அடகு வைத்து அனுப்பினார்.
இப்படி பல படிகளைத் தாண்டிய சுந்தர் பிச்சை, 2004-ஆம் கூகுள் நிறுவனத்தில் இணைந்த பின் இவரது மேற்பார்வையில் கூகுள் உலவியான கூகுள் க்ரோம், மொபைல் ஆப்ரேட்டிங் ஆண்ட்ராய்ட் போன்றவை உருவாகின. 1998-ஆம் ஆண்டு லாரி பேட்ஜ், செர்ஜி பிரின் என இருவரால் உருவாக்கப்பட்ட கூகுள் நிறுவனம் 2015ஆம் ஆண்டு தன் தலைமை செயல் அலுவலராக இவரைத் தேர்ந்தெடுத்தது. கூகுள் நிறுவனத்திற்கு வருமானம் தேடித் தரும் கூகுள் செர்ச், கூகுள் மேப், யூ டியூப் போன்றவையிலும் சுந்தர் பிச்சையின் பங்கு முக்கியத்துவம் வாய்ந்தது.
'சரி, இப்படி ஒரு தமிழர் உயரிய இடத்தை அடைந்ததால் நமக்கு வெறும் பெருமைதானே? வேறென்ன நன்மை?' என்று கேள்வி எழலாம். "தொழில்நுட்பத்தின் ஒவ்வொரு அடியும் மனிதகுலத்தின் வாழ்க்கையை ஒரு படி சுலபமாக, சிறப்பாக உயர்த்த வேண்டும்" என்று சுந்தர் அடிக்கடி கூறுவார். அதைப் போலவே அவர் பங்குபெறும் ஒவ்வொரு கண்டுபிடிப்பும் வாழ்க்கையை சுலபமாக்குகிறது, உலக அளவில் பயன்படுத்தப்படுகிறது என்பது மறுக்கமுடியாதது.
இப்பொழுது சுந்தர் பிச்சையின் ட்டு-டு (to do) லிஸ்ட்டில் முதல் இடத்தில் இருப்பது ஆர்ட்டிஃபிசியல் இன்டெலிஜென்ஸ் எனும் செயற்கை நுண்ணறிவு கோட்பாட்டைப் பயன்படுத்தி புதிய காட்ஜெட்ஸ் உருவாக்குவதுதான். அதில், கண் பார்வை கோளாறுகளை மிக முன்னதாகவே கண்டறிந்து சரி செய்யக் கூடிய ஒரு உபகரணத்தை உருவாக்கி சோதனை பயன்பாடு நடந்து வருகிறது. கண் சிகிச்சையில் மிக முக்கிய நகர்வாக இருக்கப் போகும் இந்த சோதனை எங்கு நடைபெறுகிறது தெரியுமா? இலவச கண் சிகிச்சைக்கு உலகப் புகழ் பெற்றிருக்கும் அரவிந்த் கண் மருத்துவமனைகளிலும் சங்கரா கண் மருத்துவமனைகளிலும்தான். இது ஒரு இந்தியர், தமிழர் கூகுளில் இருப்பதால்தான் சாத்தியமாகியிருக்கிறது. இப்படி பல வகைகளிலும் இந்தியாவை மனதில் வைத்து செயல்படுகிறார் அவர். அவருக்கு அது தொழில்தான் என்றாலும், நமக்கு அது பயன்தானே? சென்னையில் வழி தெரியாமல் ஆட்டோக்காரர்களிடம் பன்மடங்கு கொடுத்து அனுபவப்பட்டவர்களுக்கும் வேலை விஷயமாக வெளியூர் சென்று வழி கேட்டே நேரத்தை இழந்தவர்களுக்கும் கூகுள் மேப்பின் அருமை தெரியும்.
சுந்தர் பிச்சையின் இந்த உயர்வு நமக்குக் கற்றுத்தரும் சில விஷயங்கள்... எப்பொழுதுமே கல்லூரியை பாதியில் விட்டவர்கள், பள்ளியைப் பாதியில் விட்டவர்கள் தொழிலதிபர்கள் ஆன கதையைக் கேட்ட நமக்கு ஒழுக்கமாகப் படித்த மாணவனும் உலகம் பார்க்கும் அளவுக்கு முன்னேறலாம் என்பதை உணர்த்தியிருக்கிறார் சுந்தர். சொந்தத் தொழில் தொடங்கினால் மட்டுமே கோடியில் சம்பாரிக்க முடியும் என்று கூறுபவர்கள் சுந்தரின் சம்பளத்தைக் கேட்டால் வாயடைத்துப் போவார்கள். ஆம், 2016ஆம் ஆண்டு அவரது வருமானம் 199.7 மில்லியன் டாலர்கள், இந்திய மதிப்பில் 1200 கோடியைத்தாண்டும். இப்பொழுது இவ்வளவு சம்பாரிக்கும் சுந்தர் பிச்சை, கல்விக்காக அமெரிக்கா வந்தவுடன் ஒரு புதிய பை (back pack) வாங்குவதற்காக கடைக்குச் சென்றார். அங்கு 60 டாலர் என்று அதன் விலையைப் பார்த்து அதிர்ச்சியடைந்த அவர், கல்லூரியில் விற்கப்படும் பயன்படுத்தப்பட்ட பையை வாங்கிக்கொண்டார். அப்படியிருந்தவர் எப்படி இப்படியாக முடியும் என்பதற்கு விடை மேலே உள்ளது, சுந்தர் அடிக்கடி சொல்வது - இலக்கு, அதன் மேல் கவனம், அதற்கான உழைப்பு.