சீனாவின் செங்டு என்ற நகருக்கு மட்டும் இனி இரண்டு நிலவுகள் வெளிச்சம் தரும். ஒன்று தேய்ந்து வளரும் இயற்கை நிலவு. மற்றொன்று இயற்கை நிலவைக் காட்டிலும் எட்டு மடங்கு வெளிச்சம் தரும் செயற்கை நிலவு.
இந்த நிலவு 80 கிலோமீட்டர் சுற்றளவுக்கு மட்டுமே வெளிச்சம் தரும். இயற்கை நிலவை உலகின் எந்தப் பகுதியில் இருந்தாலும் பார்க்க முடியும். ஆனால், இந்த செயற்கை நிலவை சீனா முழுமையும் பார்க்க முடியும். அதைத்தாண்டி கடல் கடந்தும் சில நாடுகளில் பார்க்க முடியும் என்கிறார்கள்.
சீனாவின் சிச்சுவான் மாகாணத்தின் தலைநகரான செங்டுவில் உள்ள செங்டு ஏரோஸ்பேஸ் சயின்ஸ் அண்ட் டெக்னாலஜி மைக்ரோஎலக்ட்ரானிக்ஸ் சிஸ்டம் ரிசர்ச் இன்ஸ்டிடியூட் கோ.லிமிடெட் தலைவரான வு சுன்ஃபெங் இந்த தகவலை தெரிவித்தார்.
இந்த செயற்கை நிலவு ஒளிதரத் தொடங்கினால் செங்டு நகரத் தெருவிளக்குகளுக்கு ஆகும் மின்சார செலவு மிச்சமாகும் என்கிறார்கள். அதேசமயம், இந்த நிலவின் உயரம், அளவு, வெளிச்சத்தின் அளவு ஆகியவை குறித்த விவரங்கள் சிறிதளவே தெரியவந்துள்ளன.
இதற்கிடையே, இந்தத் திட்டத்துக்கு செங்டு நகர நிர்வாகமோ, சீன அரசோ அனுமதி கொடுத்திருக்கிறதா என்பதும் தெரியவில்லை. இத்தகைய செயற்கை நிலவு திட்டம் 1990களில் ரஷ்யாவிலும் முயற்சி செய்யப்பட்டது. விண்வெளி கண்ணாடி என்ற பெயரில் மூன்றுமுதல் ஐந்து இயற்கை நிலவுகளின் வெளிச்சம் அளவுக்கு பெற திட்டமிட்டு ஒரு முயற்சி நடைபெற்றது. ஆனால், அந்த திட்டத்தின்படி 5 கிலோமீட்டர் பரப்பளவுக்குத்தான் வெளிச்சம் கிடைக்கும் என்று அப்போது கூறப்பட்டது. அந்தத் திட்டம் தோல்வியில் முடிந்தது.
செயற்கை நிலவு உருவாக்கி இரவு நேரத்தில் தொடர்ந்து வெளிச்சம் தருவதால் வனவிலங்குகள் வாழ்க்கையில் மிகப்பெரிய மாற்றம் ஏற்படும் என்று இயற்கை ஆர்வலர்களும் கவலை தெரிவித்துள்ளனர். இயற்கை நிலவின் தேய்ந்து வளரும் தன்மைக்கு தகுந்தபடி தங்கள் இரவுநேர வாழ்க்கையை அமைத்துக் கொண்ட ஆந்தைகள், ஒருவகை கழுகுகளின் நடவடிக்கைகளில் மாற்றம் ஏற்படும். ஆஸ்திரேலியாவின் கிரேட் பேரியர் ரீஃப் என்ற கடல் உயிரினம் உள்பட நூற்றுக்கணக்கான பவளப் பாறை வகைகள் முட்டையிடும் பருவத்தில் மாறுதல் ஏற்படும் என்று அச்சுறுத்தத் தொடங்கியிருக்கிறார்கள்.