மைக்ரோசாஃப்ட் நிறுவனரான பில் கேட்ஸ், உலகப் பணக்காரர்கள் பட்டியலில் இருந்து வருகிறார். இவர், அமெரிக்க பிரபல எழுத்தாளரும், ‘லிங்க்டு இன்’ தளத்தின் இணை நிறுவனருமான ரீட் காரெட் ஹாஃப்மேனுக்கு நேர்காணல் மூலம் பேட்டி அளித்தார்.
அப்போது, பில் கேட்ஸிடம் ஏராளமான கேள்வி கேட்ட ரீட் காரெட் ஹாஃப்மேன், இந்தியா குறித்தும் கேள்வி எழுப்பினார். அதற்கு பதிலளித்த பில் கேட்ஸ், “பல கடினமான விஷயங்கள் இருக்கும் ஒரு நாட்டிற்கு இந்தியா ஒரு உதாரணம். சுகாதாரம், ஊட்டச்சத்து, கல்வி ஆகியவை மேம்பட்டு வருகின்றன. அவை போதுமான அளவு நிலையாக உள்ளன. அவர்களின் அரசாங்க வருவாயை போதுமான அளவு உருவாக்கினால், 20 ஆண்டுகளுக்குப் பிறகு மக்கள் வியத்தகு முறையில் சிறப்பாக இருப்பார்கள்.
இந்தியா ஒரு வகையான ஆய்வகம். ஒரு விஷயத்தை இந்தியாவில் நிரூபித்துவிட்டால், அந்த விஷயத்தை மற்ற இடங்களுக்கு எடுத்துச் செல்ல முடியும். அதனால் தான், அறக்கட்டளைக்கான எங்கள் மிகப்பெரிய அலுவலகம் அமெரிக்கா அல்லாத இந்தியாவில் உள்ளது. நாங்கள் செய்து வரும் பைலட் ரோல்அவுட் திட்டங்களில் பெரும்பாலானவை இந்தியாவில் உள்ள எங்கள் பங்குதாரர்களுடன் தான் செய்து வருகிறோம். நீங்கள் அங்கு சென்றாலும், நீங்கள் ஒருபோதும் சென்றிருக்கவில்லை என்றாலும், இது ஒரு குழப்பமான இடம் என்று நீங்கள் நினைக்கலாம். ஆனால் நீங்கள் உற்சாக உணர்வைப் பெறுவீர்கள்” என்று கூறினார்.
பில் கேட்ஸின் இந்த பேச்சு தொடர்பான வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இந்தியாவில் உள்ளவர்களை பரிசோதனைக்கானவர்கள் என்று பில் கேட்ஸ் கருதுகிறாரா? என்று இந்திய மக்கள் பலரும் அவருக்கு கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.