இந்தியாவிலிருந்து சர்க்கரை மூலப்பொருளை இறக்குமதி செய்ய ஈரான் முடிவு செய்துள்ளது. ஈரான் மீது அமெரிக்க பொருளாதார தடைவிதித்து, அமெரிக்க டாலரை கொண்டு வர்த்தகம் செய்யவும் ஈரான் மீது அமெரிக்கா தடைவிதித்தது.
இதனையடுத்து ஈரானுடன், இந்திய ரூபாய் மூலம் கச்சா எண்ணெய் இறக்குமதி செய்ய இருநாடுகளுக்குமிடையே புதிய ஒப்பந்தம் போடப்பட்டது. அதன் மூலம் இறக்குமதி செய்யப்படும் கச்சா எண்ணெய்க்கு பாதி தொகை இந்திய ரூபாயில் பணமாகவும், மீதி தொகைக்கு பதிலாக இங்கிருந்து பொருட்கள் ஏற்றுமதியும் செய்யப்படும் எனவும் அறிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் தற்போது இந்தியாவிலிருந்து 1.5 லட்சம் டன் சர்க்கரை மூலப்பொருளை இறக்குமதி செய்ய ஈரான் முடிவு செய்துள்ளது. இது தொடர்பாக 5 இந்திய வர்த்தக நிறுவனங்களுடன் ஈரான் ஒப்பந்தம் செய்துள்ளது.
மேலும் ஒரு டன் 305 அமெரிக்க டாலர் முதல் 310 அமெரிக்க டாலர் வரையான விலையில் மொத்தம் 1.5 லட்சம் டன் சர்க்கரை மூலப்பொருள் அடுத்த மாதம் இந்தியாவிலிருந்து ஈரானுக்கு அனுப்பப்பட உள்ளது. கடந்த ஐந்து ஆண்டுகளில் இதுவே முதல் முறையாக இந்தியாவிடமிருந்து சர்க்கரை மூலப்பொருளை வாங்கு முடிவை ஈரான் எடுத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.