/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/320_47.jpg)
கமல்ஹாசன் தயாரிப்பில் சிவகார்த்திகேயன் நடிப்பில் கடந்த தீபாவளியன்று வெளியான படம் அமரன். தமிழ்நாட்டைச் சேர்ந்த மறைந்த முன்னாள் இராணுவ வீரர், மேஜர் முகுந்த் வரதராஜனின் வாழ்கையில் நடந்த சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு ராஜ்குமார் பெரியசாமி இப்படத்தை இயக்கியிருந்தார். சாய் பல்லவி கதாநாயகியாக நடித்திருந்த இப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைத்திருந்தார். இப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று உலகம் முழுவதும் இதுவரை ரூ.300 கோடிக்கு மேல் வசூலித்துள்ளதாக கூறப்படுகிறது.
இந்தப் படத்தில் ஒரு காட்சியில் சாய் பல்லவி, சிவகார்த்திகேயனுக்கு ப்ரொபோஸ் செய்து விட்டு தனது செல்ஃபோன் நம்பரை ஒரு துண்டு சீட்டில் எழுதி அவரிடம் கசக்கி தூக்கி வீசுவார். அந்த நம்பரை பார்த்த பலரும், சாய் பல்லவி நம்பர் என நினைத்து அவருக்கு வாழ்த்து கூற போன் செய்துள்ளனர். ஆனால் அந்த நம்பர் சென்னையை சேர்ந்த வாகீசன் என்ற மாணவர் பயன்படுத்தி வந்துள்ளார். அவருக்கு ஏகப்பட்ட அழைப்புகள் வந்ததால் என்ன செய்வதென்று தெரியாமல் இருந்துள்ளார். மேலும் தூக்கம் இல்லாமல் மனஉளைச்சளுக்கு ஆளாகியுள்ளதாக கூறப்படுகிறது.
பின்பு ராஜ்குமார் பெரியசாமி மற்றும் சிவகார்த்திகேயன் ஆகியோருக்கு சமூக வலைதள பக்கத்தில் மெசேஜ் அனுப்பியுள்ளார். ஆனால், அவர்கள் எந்த பதிலும் அளிக்கவில்லை. இதையடுத்து மாணவர் வாகீசன், அமரன் படக்குழுவினரிடம் ரூ.1 கோடியே 10 லட்சம், நஷ்ட ஈடு கேட்டு நோட்டீஸ் அனுப்பினார். இதையடுத்து படக்குழு அந்த காட்சியில் எந்த மாற்றமும் செய்யாததால் மாணவர் வாகீசன் நீதி மன்றம் சென்றுள்ளார். படக்குழுவுக்கு எதிராக சென்னை உயர்நீதி மன்றத்தில் அவர் தாக்கல் செய்த மனுவில், “தன்னுடயை மொபைல் எண்ணை அமரன் படத்தில் பயன்படுத்தி தனக்கு மனஉளைச்சல் ஏற்படுத்தியதால் ரூ.1.10 கோடி நஷ்ட ஈடாக வழங்க தயாரிப்பு நிறுவனத்திற்கும் இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமிக்கும் உத்தரவிட வேண்டும். மேலும் படத்தை ஓடிடி தளத்தில் வெளியிட தடை விதிக்க வேண்டும்” என குறிப்பிட்டுள்ளார். இப்படம் நாளை(05.12.2024) நெட் ஃபிளிக்ஸ் ஓ.டி.டி. தளத்தில் வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)