மலையையே கடவுளாக வணங்கும் இடம் திருவண்ணாமலை. 2662 அடி உயரம்முள்ள மலையின் சுற்றளவு 14.5 கிலே மீட்டர் கொண்டது. இந்த மலையை தான் அண்ணாமலையாராக நினைத்து பக்தர்கள் கிரிவலம் வருகிறார்கள். தீபத்தன்று இந்த மலை உச்சிக்கு சென்று தீபத்தரிசனம் செய்கிறார்கள் பக்தர்கள்.
இந்த மலையை சுற்றி அடிவாரத்தில் கிழக்கு மற்றும் வடக்கு பகுதியில் வீடுகள் கட்டி மக்கள் வாழ்ந்து வருகின்றனர். மேற்கு மற்றும் தெற்கு பகுதிகளில் அவ்வளவாக வீடுகள் இல்லை. மலையை சுற்றியுள்ள மலையடிவார பகுதிகள் வனத்துறை, வருவாய்த்துறை, தனிநபர்களின் இடங்களாக உள்ளன. தனிநபர்களின் பெயரில் உள்ள நிலங்கள் விவசாய நிலங்களாகவும், குறைந்த அளவிலான இடங்கள் வீடுகள் மற்றும் வணிக வளாகங்களாக உள்ளன. வருவாய்த்துறை இடத்தில் மேற்கு, தாலுக்கா காவல்நிலையங்கள் உட்பட அரசு அலுவலகங்கள், ஈழ அகதிகள் குடியிருப்புகள் உள்ளன.
கிழக்கு மற்றும் தெற்கு பகுதியில் அடிவாரத்திலிருந்து கால்வாசி மலை வரை மலைமீதிருந்த மரங்களை, பாறைகளை வெட்டிவிட்டு வீடுகள், ஆஸ்ரமங்கள் கட்டினர். இதனால் மலை மீது பெய்யும் மழை நீர் கீழே வருவதற்கான நீர்வழி பாதைகள் திசைமாறின, அடைப்பட்டன. மலையில் இருந்து வரும் மழை நீர் குளத்தில், ஆற்றில், ஏரியில் கலப்பதுப்போல் நீர் வழி பாதைகள் இருந்து வந்தன. அதனை முற்றிலும் அழித்துவிட்டார்கள். இதுகுறித்து நகராட்சியோ, வருவாய்த்துறையோ எதுவும் கவலைப்படவில்லை.
நகரத்தில் இருந்த குளங்களை ஆக்ரமித்து வீட்டுமனைகளாக, வணிக வளாகமாக அதிகாரத்தில் இருந்தவர்கள் மாற்றி விற்பனை செய்தனர். வீடற்ற பொதுமக்களும் நகரப்பகுதியில் மலையடிவாரத்தை ஆக்ரமித்து வீடுகள் கட்டினர். சிலநூறு வீடுகளாக இருந்தது, கடந்த 30 ஆண்டுகளில் ஆயிரக்கணக்கான வீடுகளாக அவை மாறிவிட்டன. இதனை வருவாய்த்துறை கண்டுக்கொள்ள என்பது ஒருபுறம், மறுபுறம் பணத்தை வாங்கிக்கொண்டு மின்வாரியமும் மின்சார வசதியை தந்தது. நகராட்சியில் அதிகாரத்துக்கு வந்தவர்களும் இதுப்பற்றி கண்டுக்கொள்ளாமல் சிமென்ட் சாலை, தெருவோர மின்விளக்கு வசதிகள், குடிநீர் தொட்டிகள் அமைத்து தந்தனர். இதனால் ஆக்ரமிப்புகள் மலைமீது அதிகமானது. அதேபோல் மலையில் ஆஸ்ரமங்கள், கோவில்கள் என்கிற பெயரில் இடத்தை ஆக்ரமித்து வியாபாரம் செய்யத்துவங்கினர்.
சட்டவிரோதமாக வீடுகள் கட்டவும், ஆசிரமங்கள் கட்டவும் மலையை சீர் செய்யத்துவங்கியபோது, சின்னசின்ன பாறைகளை அப்புறப்படுத்தினர், மரங்களை வெட்டி எரிந்தனர். இதனால் அந்த மலைப்பகுதிகள் உறுதித் தன்மையை இழக்கத்துவங்கின, நீர் வழிப்பாதைகள் சிக்கலுக்கு உள்ளாகின. அதேபோல் கோடைக்காலத்தில் திட்டமிட்டே சமூகவிரோதிகள் மலைக்குத் தீவைத்து எரித்தனர். இதனால் புற்கள் மட்டுமில்லாமல் மரங்களும் தீக்கு இறையாகின. இதுபோன்ற காரணங்களால் மலையில் உள்ள மண்ணின் தன்மை இளகியது.
ஃபெங்கல் புயலால் தொடர்ச்சியாக திருவண்ணாமலையில் இடைவெளி இல்லாமல் 44 மணி நேரமாக அதிக மழை பெய்ததால் மலையில் மழை நீரால் மண் அரிப்பு ஏற்பட்டது. மண் அரிப்பால் பிடிமானம் இல்லாமல் சிறிய சிறிய பாறைகள் உருண்டு வரத்துவங்கியுள்ளன. அப்படி வந்த பாறைகளை எதாலும் தடுக்கமுடியவில்லை. மலையின் கால்வாசி பாகத்திலும், மலையடிவாரத்தில் வீடு கட்டியவர்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருவண்ணாமலை வ.உ.சி நகர் 11வது தெருவில் மலைச்சரிவு ஏற்பட்டு பாறை உருண்டு இரண்டு குடும்பத்தைச் சேர்ந்த 7 பேரின் உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்திய நிலையில் அடுத்தடுத்து மலையில் மண்சரிவு ஏற்படும் அபாயம் இருக்கிறது என்கிறார்கள் வல்லுநர்கள். டிசம்பர் 1ஆம் தேதி மாலை மண்சரிவு, பாறைகள் சரிவு ஏற்பட்டது முதலில் தெரியவந்தது. அதன் மீட்புப் பணிகள் நடந்துவந்த சமயத்தில் டிசம்பர் 2ஆம் தேதி காலை ஏற்கனவே மண் சரிவு ஏற்பட்ட இடத்திலிருந்து 200 மீட்டர் தொலைவில் மற்றொரு மண் சரிவு ஏற்பட்டது. இதேபோல் மலையை சுற்றி சிலயிடங்களில் மண் சரிவு ஏற்பட்டுள்ளது இப்போதுதான் தெரியவந்துள்ளது. தரைதளத்தில் இருந்து அதனைப் பார்க்கும் மக்களுக்கு பளிச்சென தெரிகிறது. இது மலையடிவாரத்தில் வாழும் பொதுமக்களை அச்சம் கொள்ளச்செய்துள்ளது.
ஏற்கனவே மலைச்சரிவு ஏற்பட்டு 7 பேரின் உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்திய இடத்தில் பெரிய பாறை ஒன்று உருண்டு வரும் நிலையில் உள்ளது. அந்த பாறை உருண்டு வரும் பட்சத்தில் இன்னும் பலத்த சேதத்தை அந்த பகுதியில் ஏற்படுத்தும் என்கிறார்கள். ஆபத்தை உருவாக்கும் நிலையில் உள்ள அந்த பாறையை மலைமீதே உடைக்க என்ன செய்யலாம் என முடிவு செய்ய சென்னை ஐஐடி பொறியாளர்கள் வந்துள்ளனர். அவர்கள் அந்த பாறை குறித்தும், மலை குறித்தும் ஆய்வு செய்துவருகின்றனர்.
தற்போது பெய்த மழையில் மலையில் உள்ள மண் இலகுவாகி அரிப்பு அதிகமாகியுள்ளது. மீண்டும் ஒரு கனமழையை திருவண்ணாமலை நகரம் எதிர்கொள்ளும் பட்சத்தில் மலையில் மண்சரிவும், பாறைகளின் சரிவும் அதிகமாகும் நிலையில் உள்ளது.