ஃபெஞ்சல் புயலால் திருவண்ணாமலை, விழுப்புரம், கடலூர், கள்ளக்குறிச்சி, தருமபுரி, கிருஷ்ணகிரி உள்ளிட்ட மாவட்டங்கள் பெரிதும் பாதிக்கப்பட்டது. குறிப்பாகத் திருவண்ணாமலையில் சில பகுதிகளில் நிலச்சரிவு ஏற்பட்டு உயிரிழப்புகள் ஏற்பட்டது. இது பெரும் சோகத்தை ஏற்படுத்திய நிலையில் பாதிக்கப்பட்ட மக்களை முதல்வர் ஸ்டாலின், துணை முதல்வ உதயநிதி, எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட பல்வேறு அரசியல் தலைவர்கள் நேரில் சென்று பார்த்து ஆறுதல் சொல்லி குறைகளை கேட்டறிந்தனர்.
அந்த வகையில் த.வெ.க. தலைவர் விஜய் திருவண்ணாமலை நிலச்சரிவால் உயிரிழந்த உறவினர்களுக்கு தனது எக்ஸ் பக்கம் வாயிலாக இரங்கல் தெரிவித்திருந்த நிலையில் தற்போது புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரண உதவி வழங்கியுள்ளார். சென்னை டி.பி.சத்திரம் பகுதியில் ஃபெஞ்சல் புயலால் பாதிக்கப்பட்ட 250 குடும்பங்களைத் தேர்வு செய்து, குடும்பத்திற்கு ஒருவரை அழைத்து பனையூரிலுள்ள த.வெ.க. தலைமை அலுவலகத்தில் அரிசி, புடவை, மளிகை பொருட்கள் உள்ளிட்ட அத்தியாவசிய தேவைகளை நிவாரண உதவியாக வழங்கியுள்ளார். மேலும் அவர்களிடம் சில நிமிடங்கள் பேசியும் இருப்பதாக சொல்லப்படுகிறது.
அவர்களிடம் நேரில் வந்து உதவி வழங்காதது குறித்து விஜய் பேசியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதாவது, நேரில் வந்தால் இது மாதிரி சகஜமாக பேசியிருக்க முடியாது, உங்களுடைய குறைகளை கேட்டு அறிந்து கொண்டிருக்க முடியாது. நெரிசல் ஏற்பட்டு விடும். அதனால் நேரில் வந்து வழங்கவில்லை என்று தவறாக எடுத்துக் கொள்ள வேண்டாம் என விஜய் கூறியுள்ளதாக சொல்லப்படுகிறது.