நடந்து முடிந்த அமெரிக்கா அதிபர் தேர்தலில், ஜனநாயகக் கட்சியைச் சேர்ந்த கமலா ஹாரிஸை வீழ்த்தி, குடியரசு கட்சி வேட்பாளர் டொனால்ட் டிரம்ப் வெற்றி பெற்று அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். அமெரிக்காவின் 47வது அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள டிரம்ப், வருகிற ஜனவரி 20ஆம் தேதி அமெரிக்கா அதிபராக பதவியேற்கவுள்ளார். அதிபராக பதவியேற்ற பின்னர் என்னென்ன மாற்றங்கள் மற்றும் திட்டங்கள் செய்யப்படும் என்று தேர்தலில் வெற்றி பெற்றதில் இருந்து ஒவ்வொரு நாளும் டொனால்ட் டிரம்ப் அறிவித்து வருகிறார்.
அதிபராக இருக்கும் ஜோ பைடனின் மகன் ஹண்டர் பைடனுக்கு மீது துப்பாக்கி வைத்திருத்தல் மற்றும் வரி ஏய்ப்பு உள்ளிட்ட வழக்குகள் அமெரிக்க நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்த வழக்கில் அவர் குற்றவாளி என்று நீதிமன்றம் அறிவித்துள்ளது. இது தொடர்பாக ஹண்டர் பைடன் விரைவில் நீதிமன்றத்தில் ஆஜராக இருக்கிறார். அவருக்கு கடுமையான தண்டனை விதிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது.
இந்த நிலையில், அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தனது அதிகாரத்தை பயன்படுத்தி, தன் மகன் மீதான குற்றச்சாட்டை நிபந்தனையற்று மன்னிப்பதாக அறிவித்துள்ளார். இது தொடர்பாக நேற்று முன் தினம்(01-12-24) அவர் வெளியிட்ட அறிக்கையில், ‘எனது முழு வாழ்க்கையிலும் நான் ஒரு எளிய கொள்கையைப் பின்பற்றினேன். அமெரிக்க மக்களுக்கு உண்மையைச் சொல்ல வேண்டும். அவர்கள் நேர்மையாக இருப்பார்கள். நான் நீதி அமைப்பை நம்புகிறேன், ஆனால் நான் இதனுடன் சண்டை செய்ததால், அரசியல் செயல்முறையை பாதித்து, அது நீதியின் கருச்சிதைவுக்கு வழிவகுத்தது. இந்த வார இறுதியில் நான் இந்த முடிவை எடுத்தவுடன், அதை மேலும் தாமதப்படுத்துவதில் எந்த அர்த்தமும் இல்லை. ஒரு தந்தையும் ஜனாதிபதியும் ஏன் இந்த முடிவுக்கு வருகிறார்கள் என்பதை அமெரிக்கர்கள் புரிந்துகொள்வார்கள் என்று நம்புகிறேன்’ என்று தெரிவித்தார்.
அமெரிக்க அரசியலமைப்பு சட்டத்தின்படி, குற்றவியல் வழக்குகளை தவிர அமெரிக்காவிற்கு எதிரான குற்றங்களுக்கு மன்னிப்பு வழங்குவதற்கான அதிகாரம் அமெரிக்க அதிபருக்கு இருக்கிறது. இதனால், துப்பாக்கி வழக்கில் டிசம்பர் 12ம் தேதியும், வரி விதிப்பு வழக்கில் டிசம்பர் 16ம் தேதியும் நடக்கவிருந்த வழக்கு விசாரணையை கண்காணிக்கும் நீதிபதிகள் ரத்து செய்ய வாய்ப்புள்ளது. ஜோ பைடனின் இந்த உத்தரவின் மூலம், புதிய அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்ட டொனால்ட் டிரம்ப், இந்த மன்னிப்பு உத்தரவை செய்ய முடியாது என்று கூறப்படுகிறது.