சென்னை முகப்பேர் பகுதியில் மெத்தபெட்டமைன் மற்றும் கஞ்சா விற்பனை தொடர்பாக சமீபத்தில் 5 கல்லூரி மாணவர்கள் உள்பட 10 நபர்களை ஜெ.ஜெ.நகர் காவல் துறையினர் கைது செய்தனர். இவர்களிடம் நடந்த விசாரணையில் ஆந்திராவில் இருந்து கஞ்சா எடுத்து வந்து இங்குள்ள தனியார் கல்லூரி மாணவர்களுக்கு ஆன்லைன் செயலி மூலம் விற்பனை செய்ததும் தெரிய வந்தது.
மேலும் அவர்களின் செல்போனில் பதிவான எண்களை கொண்டு கஞ்சா விற்பனையில் யார் யார் ஈடுபட்டுள்ளார்கள் என்பது குறித்து போலீஸார் விசாரணை நடத்தினர். அப்போது நடிகர் மன்சூர் அலிகான் மகன் அலிகான் துக்ளக்(26) செல்போன் நம்பரும் அதில் இருந்ததையடுத்து அவரை காவல் நிலையத்துக்கு வரவழைத்து விசாரணை செய்தனர். அவரோடு அந்த செல்போனில் இருந்த எண்ணின் அடிப்படையில் இன்னும் 3 பேரை அழைத்து வந்து விசாரணை நடத்தினர். இறுதியில் அவர்கள் கஞ்சா மற்றும் மெத்தபெட்டமைன் விற்பனை செய்யும் வேலையில் ஈடுபட்டுள்ளது தெரியவந்துள்ளது. இதனால் அலிகான் துக்ளக் உள்ளிட்ட 4 பேரை காவல் துறையினர் கைது செய்துள்ளனர்.
அலிகான் துக்ளக் சினிமாவில் உதவி இயக்குநராக பணிபுரிந்திருக்கிறார். மேலும் ஒரு படத்தில் நடித்துள்ளதாக கூறப்படுகிறது. இந்த சூழலில் இவர் போதைப்பொருள் வழக்கில் கைதாகியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.