'பாகிஸ்தானில் சுதந்திரமாக சுற்றித்திரியும் பயங்கரவாதிகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்' என்று சர்வதேச அளவில் அந்தநாட்டிற்கு நெருக்கடி அளிக்கப்பட்டு வருகிறது.
இந்த நெருக்கடியால் லஷ்கர்-இ-தைபா இயக்கத்தின் முக்கியத் தளபதியும், 2008 ஆம் ஆண்டு மும்பை தாக்குதலுக்கு மூளையாகச் செயல்பட்டவனுமான ஜாக்கி-உர்-ரஹ்மான் லக்வி கைது செய்யப்பட்டு, பாகிஸ்தானின் பயங்கரவாத எதிர்ப்பு ஆணையங்களால் விசாரிக்கப்பட்டு வந்தான்.
இந்தநிலையில், இன்று பாகிஸ்தான் நீதிமன்றம், பயங்கரவாதத்திற்கு நிதி அளித்தற்காக ஜாக்கி-உர்-ரஹ்மான் லக்விக்கு ஐந்து ஆண்டுகள் சிறைத் தண்டனையும், மூன்று லட்சம் அபராதமும் விதித்துள்ளது. ஒரே குற்றத்தை மூன்றுமுறை தனித் தனியாகச் செய்ததற்காக, ஒரே நேரத்தில் மூன்று ஐந்தாண்டு சிறைத் தண்டனைகளை அனுபவிக்க வேண்டும் எனவும், ஒவ்வொரு முறைக்கும் தலா ஒரு லட்சம் அபராதமும் விதிக்கப்படுவதாகவும் நீதிமன்றத் தீர்ப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.